வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவற்றை தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவனே நாஸ்திகன் – மனுதர்மம்!
‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்பதோடு, வேத சாஸ்திரங்களையும் சேர்த்து எதிர்ப்பதே நமது அசைக்க முடியாத கருத்தியலாகும்!
ஜாதி ஒழிப்பில் நம்பிக்கையுள்ள
‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்பதோடு, வேத சாஸ்திரங்களையும் சேர்த்து எதிர்ப்பதே நமது அசைக்க முடியாத கருத்தியலாகும்!
ஜாதி ஒழிப்பில் நம்பிக்கையுள்ள
கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
தலைவர், திராவிடர் கழகம்
நமது அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் கடவுள் மறுப்புப்பற்றிய விளக்கத்தினை 1937 இல் அளித்தபோது, கொள்கை என்பதற்கும், திட்டம் என்பதற்கும் (Principle and Policy) உள்ள வேறுபாடுகளை விளக்குகின்ற வகையில் கடவுள் பற்றிய, கருத்துரைபற்றிய விளக்கத்தைச் சுட்டிக்காட்டி, நாம் கடந்த 24.6.2026 அன்று எழுதிய விளக்கம்பற்றி, நமது கொள்கைகளில் ஆழ்ந்த பற்றும், நடைமுறை வாழ்வில் அதனைப் பல்லாண்டுகளாகப் பின்பற்றத் தவறாதவருமான நமது தோழர் ஒருவர்,
குழப்பம் தேவை இல்லை!
‘‘தங்களது இந்த விளக்கத்தை ஆழமாகப் பார்க்காத வர்களுக்கு, எதிர்காலத்தில் தவறான வகையிலான புரி தலுடன் நம் கொள்கைகளில் குழப்பம் ஏற்படுத்தாதா?’’ என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.
அவரைப் போல, நமது விளக்கத்தைப் படித்து, இப்படி ஒரு கேள்விக்கு ஆளாகும் சில நண்பர்களும்கூட இருக்கலாம் என்பதற்காகவே, நமது இந்தக் கொள்கை – திட்டம் என்பதன் வேறுபாட்டு விளக்கத்தை அளிக்கிறோம்.
இங்கே நம் நாட்டில், ஜாதி – தீண்டாமை, பிறவி இழிவு, பிறவி அடையாளமான பெண்ணடிமை ஒழிப்பை முன் வைத்துப் பிரச்சாரம், போராட்டங்களை மேற்கொள்ளும் நமது கொள்கை இயக்கம், அதன் தலைவர், கடவுள் மறுப்பை ஒரு வழிமுறையாக – திட்டமாக – Policy ஆக கடைப்பிடித்தாக வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது என்று ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.
உலகில் எங்குமில்லாத வகையில், நம் நாட்டில் உள்ள ஜாதி, தீண்டாமை முறைக்குப் பெரிய பாதுகாப்பு அரண் எது என்றால், ‘‘வேதத்திலும், மனுதர்மத்திலும், பகவத் கீதையிலும் முக்கிய இடம்பெற்றுள்ள இந்த கடவுள்தான் உண்டாக்கினார்’’ என்ற பதில் வந்து, இன்னும் அவை நிலைத்திருக்கிறது.
வருண, ஜாதிகளை உண்டாக்கியவன் கடவுளாம்!
‘‘இது (நால்வருணம், ஜாதி, பிறவி பேதம்) மனிதனால் ஏற்படுத்தப்பட்டது அல்ல; கடவுளே ஏற்படுத்தியது. அந்தக் கடவுள் நினைத்தால்கூட இந்தப் பேத தர்மத்தை மாற்றவோ, ஒழிக்கவோ முடியாது’’ என்று எழுதி, ஆணி அடிக்கப்பட்டிருப்பதால், கடவுள் மறுப்புப் பக்கத்தை இந்த இயக்கம் கையில் எடுத்தது. மூலகாரணத்தை – நோய் முதல் நாடுவதை ஒரு முக்கிய முதன்மையானக் கொள்கைப் பணியாகக் கொண்டாலொழிய, இந்த ஜாதி ஒழிப்பில் வெற்றி பெறவே முடியாது என்பதால்தான், ஜாதியை, தீண்டாமையைப் பாதுகாப்பதற்கும், பகுத்தறி வுச் சிந்தனைக்கு எதிராகவும் கடவுள் நம்பிக்கை, பக்தி ஆகிய போதைகள் – போதைப் பொருள்போல் பயன்படுத்தப்படுவதால், அதனை ஒழிப்பதையே – அந்த வேலைத் திட்டத்தையே சரியான பாதையாகக் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாத தேவையும், அவசியமுமாகும். இந்து மதத்தைப் பொறுத்தவரையில் வேத மறுப்புதான் நாத்திகமாகும். (மனுதர்மம்: அத்தியாயம் 2, சுலோகம் 11).
விடயபுரத்தில் தந்தை பெரியார் கூறிய வாசகங்கள்!
1967 இல் திருவாரூர் மாவட்டம் விடயபுரத்தில் – கொள்கைப் பயிற்சி வகுப்பில், கடவுள் மறுப்பு வாசகங்களை – அறிவியல் சிந்தனையின் கூர்மையோடு, தத்துவப்படி, கூறியுள்ளார். அது அவர்தம் சிந்தனையின் உச்சமாகும்.
பற்பல நேரங்களில் கொள்கையை அடையும் வழி முறைகளே கூட, கொள்கையின் இடத்தைப் பிடித்து நிற்கவேண்டிய அவசியமும், முக்கியத்துவமும் ஏற்படலாம்!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காகப் போராடுவது ஏன்?
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக நிய மிக்கப்பட வேண்டும் என்ற முழக்கம் தந்தை பெரியார் அவர்களது ஜாதி, தீண்டாமை ஒழிப்பு இலக்கை வைத்துத் தொடங்கப்பட்டபோது, ‘‘‘கடவுள் இல்லை, கோயில் தேவையில்லை’ என்று சொல்லும் உங்களுக்கு, ஏன் இதில் அக்கறை?’’ என்று கேட்ட கேள்விக்கு என்ன பதிலோ, அதே பதில்தான் – எதிர்காலத்தில் இது கொள்கைக் குழப்பத்தினை ஏற்படுத்தாதா என்று கேட்கும் கேள்வியின் தன்மைக்கும்!
நாம் அடைய விரும்பும் இலக்கு ஜாதி – தீண்டாமை – வர்ணதர்மம் – பெண்ணடிமை ஒழிந்த ஒரு புதிய சமுதாயம் – புதிய உலகம்! அதுபோலவே, பகுத்தறி விற்கு எதிரான மூடநம்பிக்கை ஒழிப்புமாகும்.
அந்த இலக்கினை அடைய வழிமுறை – ‘‘திட்டம்தான்’’ மக்களிடம் ஆழமாகப் பதிந்துள்ள கடவுள் நம்பிக்கையை மறுப்பதும், ஒழிப்பதும் ஆகும்.
சமத்துவம், சம உரிமை, சம வாய்ப்பு, மானுடப்பற்று ஆகியவை தான் நம் இலக்கு என்றாலும், அதனை அடையும் பாதையும் முக்கியம் அல்லவா!
அந்தப் பாதை இன்றைய நிலையில் உறுதியானது, தெளிவானது! அதே நேரம் நமது இலக்கு சமத்துவ, சமுதாயம்தான்! அதை அடைவதற்கு நம்மோடு கைகோக்க வருவோருக்காக சில நேரங்களில் நமது வேகத்தைக் குறைத்துக் கொள்வது உண்டு.
பகுத்தறிவு என்பது
தெளிவடைவதற்கே!
தெளிவடைவதற்கே!
தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்ற மகா சந்நிதானங்கள் ஜாதி ஒழிப்பை, தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்திய அதே நேரத்தில், கடவுள் நம்பிக்கையை விடாமல், மத நம்பிக்கையையும் விடாமல் இருந்த நிலையில், அவர்களது ஆதரவினைத் தந்தை பெரியார், தனது பிரச்சாரப் பாதைக்கு ஒரு சிறப்பான பகுதியாகப் பயன்படுத்திக் கொண்டதை நாம் புரிந்துகொண்டால், கொள்கைக் குழப்பம் ஏற்படாது. பகுத்தறிவு என்பது தெளிவடைவதற்கே!
ஆரம்ப காலத்தில், எளிய மக்கள் கூட, ஏன் எதிரிகள்கூட நமது இயக்கம்பற்றியும், கிராமங்களில் நமது இயக்கத் தோழர்களைப்பற்றியும் குறிப்பிடும்போது, ‘‘அதான்யா, சாமி இல்லை என்ற கட்சிக்காரன்தானே’’ என்று சொல்வதுண்டு. அப்படி சொன்னவர்களே தந்தை பெரியாரின் கருத்தை ஏற்று, கடவுள் மறுப்பாளர்களாக மாறவில்லையா? தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்ற கடவுள் நம்பிக்கையாளர்களையும் இணைத்து, பிறப்பால் பேதம் பேசும் ஜாதியை – வருணத்தை ஒழிப்பதே நமது முக்கிய இலக்கு!
தந்தை பெரியார் இயல்பிலேயே பகுத்தறிவாளர். எதையும் ஏன்? எதற்கு? எப்படி? யாரால்? என்று கேள்வி கேட்டு, விடைபெற்று அதன் அடிப்படையில் தன் சிந்தனையை அமைத்துக் கொண்டவர்.
‘கடவுள் மறுப்பு’ நமது செயல் திட்டங்களில் முக்கிய இடம்!
அவர் தனியே ஒரு பகுத்தறிவாளராகவே இருந்திருக்க முடியும். ஆனால், சமத்துவத்தை விரும்பிய அவரது பாதையில், ஜாதி, பெண்ணடிமைத்தனம், மதம், சாஸ்திரம், கடவுள் நம்பிக்கை ஆகியவை குறுக்கே வந்தன. ஒன்றுக்கொன்று தொடர்புடனும், அதைப் பாதுகாக்கவும், எதிர்ப்போரைப் பயமுறுத்தவும் கடவுள் நம்பிக்கை பயன்படுத்தப்படுவதையும் புரிந்துகொண்ட தந்தை பெரியார், வகுப்புவாரி உரிமை, தீண்டாமை ஒழிப்பு, சுயமரியாதை, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, கடவுள் மறுப்பு என்று படிப்படியாகத் தன் பாதையை உருவாக்கினார். மக்களைப் பக்குவப்படுத்த மெல்ல மெல்ல ‘டோசேஜை’யும் (Dosage) அதிகப்படுத்திக் கொண்டே வந்தார். மனித நேயத்தை, சமத்துவத்தை அடையவேண்டுமானால், மேற்சொன்ன தடை களையெல்லாம் ஒழிக்காமல் முடியாது என்பதால்தான், இறுதிக் காலகட்டத்தில், கடவுள் மறுப்பைத் தீவிரமாகப் பேசினார். அதனால்தான், ‘கடவுள் மறுப்பு’ நமது செயல் திட்டங்களில் முக்கிய இடத்தையும் பிடித்துள்ளது.
‘கடவுளை மற’ந்தால்தான், ‘மனிதனை நினை’க்க முடியும் என்பது நிதர்சனம். இதில், முரண் எதுவும் இல்லை. நமக்கு இலக்கிலும் தெளிவுண்டு, பாதையிலும் தெளிவுண்டு.
