சென்னை, ஜூலை 2- மாநில நலன்களை பாதிக்கும் விபி-ஜி ராம்-ஜி திட்டம் குறித்து, ஒன்றிய அரசிடம் வலுவான எதிர் நிலைப்பாட்டை தவெக அரசு எடுக்க வேண்டும், என்று தங்கம் தென்னரசு கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (1.7.2026) தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, மாநிலங்களின் நிதிச் சுமை கட்டுக்குள் இருந்தது.
ஆனால் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள விபி-ஜி ராம்-ஜி திட்டத்தின் மூலம், மாநில அரசுகள் மீது கூடுதல் நிதிப் பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. கூட்டாட்சியின் அடிப்படை நோக்கமான ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் பொறுப்புகளை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கைக்கு மாறாக, மாநிலங்களின் நிதிப் பங்களிப்பை அதிகரித்திருப்பது மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி மேலாண்மையின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இது மாநிலங்களின் நிதிச் சுயாட்சியை மேலும் பலவீனப்படுத்தும். மாநிலங்களின் நிதிச் சுமையைக் கணிசமாக அதிகரிக்கும் இந்தத் திட்டத்தை எந்தவித எதிர்ப்புமின்றி செயல்படுத்த முனைந்தால் தமிழ்நாட்டின் நிதி நலன்களையும் மாநில உரிமைகளையும் பாதுகாக்கத் தவறியதாகவே அமையும். எனவே, மாநிலத்தின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் குறித்து ஒன்றிய அரசிடம் வலுவான எதிர் நிலைப்பாட்டை தவெக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஊழல் ஒழிகிறதா?
அழகு நிலைய உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம்: காவல்துறை உதவி ஆய்வாளர்கள் இருவர் கைது!
சென்னை, ஜூலை 2- சென்னை திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
ரூ.50 ஆயிரம் லஞ்சம்
திருமுல்லைவாயில் சி.டி.எச். சாலையில் அழகு நிலையம் (ஸ்பா) நடத்தி வரும் பெண் உரிமையாளரிடம், மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் எனக் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ.20 ஆயிரம் வழங்குமாறு வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் உரிமையாளர் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் பாக்கியலட்சுமி மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அமுல் ஆகியோர் காவல் நிலையத்திலேயே கையும் களவுமாக பிடிக்கப்பட்டனர்.
பின்னர், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் எவ்வளவு தெரியுமா?
நடப்பாண்டு மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவின் வெளிநாட்டு கடன் அமெரிக்க டாலரில் 762.8 பில்லியனாக (ரூ.72.1 லட்சம்) உயர்ந்துள்ளதாக ஆர்பிஅய் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட அமெரிக்க டாலரில் 26.3 பில்லியன் அதிகமாகும். இதன்மூலம் நாட்டின் ஜிடிபி (GDP)-இல் வெளிநாட்டு கடனின் பங்கு 20%-அய் எட்டியுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்ததும், கடன் பெற்ற பிற நாடுகளின் நாணய மதிப்பு சரிந்ததும் இக்கடன் மதிப்பு உயர்வுக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.
