சென்னை, ஜூலை 2- வடசென்னை, திருவொற்றியூர், தென் சென்னை, சென்னை மேற்கு, தாம்பரம், ஆவடி, சோழிங்க நல்லூர், கும்மிடிப்பூண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் 26.06.2026 அன்று மாலை 4 மணிக்கு பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் மரகதமணி (தலைவர், வடசென்னை மகளிர் பாசறை) தலைமை உரையாற்ற, சி.வெற்றிச்செல்வி, வளர்மதி, தமிழ்ச்செல்வி, நாகவல்லி, உத்ரா, விஜயா, அன்புச்செல்வி ஆகியோர் முன்னிலை வகிக்க நடைபெற்றது.
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடந்த இந்தக் கலந்துரையாடலின் நோக்க உரையினை மாநில மகளிரணி துணைச் செயலாளர் இறைவி வழங்கினார்.
மகளிர் அணி மகளிர் பாசறை அமைப்புகளை வலுவாக விரிவாக செயல்படுத்தத் தேவையான செயல் பாடுகளை திட்டமிட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தி விரிவாக சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறைச் செயலாளர்), பசும்பொன் செந்தில்குமாரி (சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர்), வி.கே.ஆர்.பெரியார் செல்வி (மாநில மகளிர் அணி துணைச் செயலாளர்) ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தாம்பரம் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் உத்ராவின் அம்மா மறைவிற்கு இரங்கல் தெரிவிக் கப்பட்டது. அதற்கு நன்றி தெரிவித்து உத்ராவும், சமூக வலைத்தளங்களில் மகளிர் அணி மகளிர் பாசறைத் தோழர்கள் செயல்பட வேண்டிய அவசியத்தினை பற்றிய கருத்துகளை ஆவடி அன்புச் செல்வியும் சிறப்பாக தெரிவித்தனர்.
கலந்துரையாடலின் முடிவாக ஜூலை 4 அன்று நடக்க இருக்கும் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவிக்கும் முடிவுகளை அப்படியே ஏற்று செயல்படுத்துவது என்றும், இன்றைய அரசியல் சூழலில் நமது இயக்கப் பிரச்சாரம் வலுவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இருப்பதால் சென்னையைச் சுற்றிய மாவட்டங்களின் கலந்துரையாடல் பெரியார் திடலில் மட்டுமே நடத்த திட்டமிடாமல் அந்தந்த மாவட்டங்களில் நடத்துவது என்றும் கலந்துரையாடல் நடக்கும் அதே நாளில் பொதுக்கூட்டம் அல்லது தெருமுனைக் கூட்டம் மகளிர் அமைப்பின் சார்பில் நடத்துவது என்றும், சமூக வலைத்தளங்களில் முறையாக இயங்குவதற்கான பயிற்சியினை மகளிர் அணி மகளிர் பாசறைத் தோழர்களுக்கு வழங்குவது என்றும் மூன்று தீர்மானங்களை துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி முன்மொழிய அனைவராலும் வரவேற்கப்பட்டது.
நிகழ்ச்சியின் சிறப்பாக வட சென்னை பகுதியில் இருந்து புதிதாக ரஷியா பேகம், ஆதி தமிழச்சி மற்றும் தாம்பரம் பகுதியில் இருந்து காவேரியும் மகளிர் அணி, மகளிர் பாசறையில் இணைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் சிற்றுண்டி வழங்கினார்.
நிகழ்வின் முடிவாக நன்றியுரை யினை த.இளவரசி (தலைவர், வடசென்னை மகளிர் அணி) வழங்கினார்.
