* ‘‘ஜாதி ஒழிப்புக்காக அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன்’’ என்றார் தந்தை பெரியார்!
* ‘‘அரசியல் சட்டத்தைக் கொளுத்தினால், மூன்று ஆண்டுகள் அதிகபட்சம் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அல்லது இரண்டும் சேர்ந்து’’ என்று சொன்னார்கள்!
பத்தாயிரம் பேர் அரசியல் சட்டத்தை எரித்து, தண்டனைக்கு உள்ளானார்கள்!
அதில் இந்த சின்னாளப்பட்டிக்கு ஒரு வரலாறு உண்டு!
சென்னை, ஜூன் 28 ‘‘ஜாதி ஒழிப்புக்காக அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன்’’ என்றார் தந்தை பெரியார்! ‘‘அரசியல் சட்டத்தைக் கொளுத்தினால், மூன்று ஆண்டுகள் அதிகபட்சம் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அல்லது இரண்டும் சேர்ந்து’’ என்று சொன்னார்கள்! பத்தாயிரம் பேர் அரசியல் சட்டத்தை எரித்து, தண்டனைக்கு உள்ளானார்கள். அதில் இந்த சின்னாளபட்டிக்கு ஒரு வரலாறு உண்டு. இராமையா, சண்முகம் போன்ற தோழர்கள் எல்லாம் பெரும் தண்டனையை அனுபவித்தார்கள். எளிய தோழர்கள், அன்றாட வாழ்க்கையை நடத்தக்கூடியவர்கள். குடும்பத்தைப் பற்றி கவலை இல்லை; கொள்கை யைப்பற்றிதான் அவர்களுக்கு அக்கறை. தலைவருடைய ஆணை, தந்தை பெரியாருடைய ஆணை என்று வந்தார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சின்னாளப்பட்டி: எதிர்நீச்சலில் வென்ற
பெரியார் 80 ஆவது ஆண்டு விழா – மாநாடு
26.6.2026 அன்று மாலை 5 மணியளவில், சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தில், சுயமரியாதைச் சுடரொளிகள் இராமையா, போளி, சண்முகம் நினைவு அரங்கத்தில் நடைபெற்ற ‘‘எதிர் நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆவது ஆண்டு விழா’’ – மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
இரத்த உறவைவிட கொள்கை உறவு வலிமையானது!
ஆகவே, இங்கே வந்து, ஏதோ ஒரு பேச்சாளர், ஏதோ ஒரு கூட்டம், ஏதோ பேசிவிட்டுப் போகிறோம் என்பதல்ல. எங்கள் உறவுகளைப் புதுப்பித்து கொள்கிறோம் என்று அர்த்தம். எங்கள் கொள்கை உறவுகள் அவர்கள். இரத்த உறவு என்பது ஒரு உறவு; கொள்கை உறவு என்பது அதைவிட வலிமையானது. இப்பொழுது இங்கே அமர்ந்திருக்கிறோம். மேடையிலும் சரி, எதிரிலும் சரி, யாருக்காவது ஜாதி என்ன என்று தெரியுமா? என்றால், தெரியாது.
‘சீசனல் கருப்புச் சட்டை அல்ல’;
நிரந்தரமான கருப்புச் சட்டை!
ஆனால், ஒரு கருப்பு சட்டை, இன்னொரு கருப்பு சட்டைக்காரனைப் பார்க்கும்போது ஏற்படுகிற பாசம் இருக்கிறதே, கட்டுப்பாடு. அதுவும் கருப்புச் சட்டை என்று சொல்லும்போது, இப்பொழுது எச்சரிக்கையாகச் சொல்ல வேண்டும். ஏனென்று கேட்டால், எல்லோரும் கருப்புச் சட்டை வைத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில், கருப்புச் சட்டை போடுவதற்கே பயந்த காலம் மாறி, இன்றைக்குக் கருப்பு சட்டையை எல்லோரும் போடக்கூடிய அளவில் வந்ததினால் சொல்கிறேன், இது ‘சீசனல் கருப்புச் சட்டை அல்ல’; நிரந்தரமான கருப்புச் சட்டை. மிகப்பெரிய அளவுக்கு எதிர்வாதத்தை தோற்கடிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு. தந்தை பெரியார், ‘‘ஜாதி ஒழிப்புக்காக அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன்’’ என்று சொல்லுகிறார். ஜாதியைப் பாதுகாப்பதினால். நண்பர்கள் சொன்ன மாதிரி, அப்போது மேலே இருந்து டில்லியில் இருந்து சட்டம் கொண்டுவருகிறார்கள். என்ன சட்டம் கொண்டு வந்தார்கள்?
காமராஜர் ஆட்சியிலே, அவர் கையிலேயே நடவ டிக்கை எடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்து, டில்லி உத்தரவு போடுகிறது. என்ன உத்தரவு என்றால், ‘‘அரசியல் சட்டத்தைக் கொளுத்தினால், மூன்று ஆண்டுகள் அதிகபட்சம் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய். அல்லது இரண்டும் சேர்ந்து’’ என்று சொன்னார்கள். இதைப் பார்த்த உடனே பயந்தாரா பெரியார்? அவர்தான் பெரியார்! நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும்
போராட்ட வீரர்களைத் தயாரியுங்கள் என்று பட்டியலைக் கேட்டார் தந்தை பெரியார்!
ஓர் அறிக்கை எழுது கிறார் பெரியார். ‘‘இப்படி ஓர் அறிவிப்பு வந்திருக்கிறது. நான் சொல்கிறேன் அது மூன்றாண்டு தண்டனை ஆனாலும், 30 ஆண்டுகள் ஆனாலும், தூக்குத் தண்டனை ஆனாலும் நாங்கள் பயந்து பின்வாங்கி விடக்கூடியவர்கள் அல்ல. எனவே, போராட்ட வீரர்களைத் தயாரியுங்கள் என்று பட்டியலைக் கேட்டார். பத்தாயிரம் பேர் அரசியல் சட்டத்தை எரித்தார்கள். அப்போது தண்டனைக்கு உள்ளானார்கள். அப்படி தண்டனைக்கு உள்ளாகும்போது, இந்தச் சின்னாளபட்டிக்கு ஒரு வரலாறு உண்டு. இராமையா, சண்முகம் போன்ற தோழர்கள் எல்லாம், இந்த மேடை யில் படமாக இருக்கக்கூடி யவர்கள் எல்லாம் பெரும் தண்டனையை அனுபவித்தார்கள். எளிய தோழர்கள், அன்றாட வாழ்க்கையை நடத்தக்கூடி யவர்கள். குடும்பத்தைப் பற்றி கவலை இல்லை; கொள்கையைப்பற்றிதான் அவர்களுக்கு அக்கறை.
தலைவருடைய ஆணை, தந்தை பெரியாருடைய ஆணை என்று வந்தார்கள். அப்படிப்பட்ட சுயமரியாதைச் சுடரொளிகளைத்தான் இன்றைக்குப் பார்க்கிறோம். இராமையா, அதேபோல அய்யா முதுபெரும் தலைவர் போளி அய்யா அவர்கள். இந்த ஊரில் ஜாதிப் பட்டத்தை மரியாதைக்காகச் சொல்லுவார்கள். போளி செட்டியார், போளி செட்டியார் என்று. ஆகவே, சின்னாளப்பட்டிச் சுயமரியாதைச் சுடரொளிகள் போளி அவர்கள், அவருடைய மகன் செல்வராசு அவர்கள், இராமசாமி அவர்கள், தனுஷ்கோடி, திருவண்ணாமலை, விடுதலை சண்முகம், சத்திரசேகர், விடுதலை மணி. அவருடைய மகன்கூட இங்கே வந்தார், பார்த்தேன்.
இந்த இயக்கத்தினுடைய ரத்த நாடி!
இந்த மணி, சுட்டி மாதிரி வருவார். அவர் வந்தார் என்றால், புத்தகங்களை எடுத்துக்கொள்வார். எந்த ஊருக்கு அவர் வந்தாலும், புத்தகத்தை வாங்கிக்கொண்டு போய், கூட்டத்திற்குள் சென்று ‘‘புத்தகங்கள் வாங்குங்கள், புத்தகங்கள் வாங்குங்கள்’’ என்று சொல்லுவார். ஒரு சாதாரண தோழர், இத்தனைக்கும் பெரிய பெரிய சொத்து வசதிகள் எல்லாம் கிடையாது. இதுதான் இந்த இயக்கத்தின் பலம். இந்த இயக்கத்தினுடைய ரத்த நாடியே அப்படிப்பட்டதுதான். அதனால்தான் இந்த மேடை. அப்படிப்பட்டவர்களால் கட்டப்பட்ட மேடையில், இன்றைக்கு நாம் அமர்ந்திருக்கிறோம். அதுபோலவே சின்னாளப்பட்டிச் சுயமரியாதைச் சுடரொளிகள் வெள்ளைச்சாமி, நடராஜன், சுப்பன், காமாட்சி, துரையப்பன், நாகராஜன், டாக்டர் பி.எஸ்.மணி. இதில் மிகப்பெரிய அளவுக்கு மணி ஒரு பெரிய தலைவராக இருந்தார். எனக்கு நன்றாகத் தெரியும். கந்தசாமி அவர்கள் இப்படி எண்ணற்றவர்கள்.
அது மாத்திரமல்ல, இன்னொரு சிறப்பு இந்த சின்னாளப்பட்டிக்கு என்னவென்றால், சுயமரியாதைக் கொள்கைக்கு எதிர்ப்புகள் வந்ததைச் சொல்கிறேன் அடுத்தது. எல்லா தோழர்களும் இயக்கத்துக்கு வந்த பிற்பாடு, பல ஊர்களுக்கு வியாபார நிமித்தமாகச் செல்வார்கள். அப்படித்தான் நல்லதம்பி அவர்கள்கூட. அவர் இந்த ஊர் என்று எனக்குத் தெரியாது. அப்புறம்தான் சொன்னார்கள்; அய்யா ஜவகர் அவர்கள். இது மாதிரி பார்த்தீர்கள் என்றால், அந்தந்த ஊரில் சென்று வியாபாரம் செய்வார்கள். இந்தியா முழுவதும் சென்று இருப்பார்கள். டில்லியில் இருப்பார்கள்; அதே மாதிரி அய்தராபாத்தில் இருப்பார்கள். எங்களையும் அழைப்பார்கள், நாங்கள் அங்கு செல்லும்போது சிறப்பான வரவேற்பு கொடுப்பார்கள்.
சின்னாளப்பட்டியே தந்தை பெரியாருக்குத்
தத்து கொடுக்கப்பட்ட ஊர்!
மா.வே.கிருஷ்ணசாமி, எனக்கு நல்ல நெருங்கிய நண்பர். கல்லூரியில் உருவாக்கப்பட்டவர், எம்.ஏ. படித்தவர். அவர் நல்ல கொள்கையாளர். எழுதுவார், தயார் செய்வார். மதுரையிலே படித்து, கல்லூரியிலே படித்த காலத்தில் மாணவர்களாக அவர்களை உரு வாக்கியவர்கள் நாங்கள். அந்த எண்ணத்தோடு கடைசி வரையிலே செகந்திராபாத்திலே இருந்தார். அதே மாதிரி பார்த்தீர்கள் என்றால், குன்னூரில் திராவிடர் கழகம் அய்யா காலத்தில் இல்லை. ஆனால், கூட்டம் போட வேண்டும். அங்கு ஒருவர்தான் இருந்தாலும், அய்யாவை அழைத்துக் கூட்டம் போடுவார் அவர். அவர் யார் என்றால், கம்பர். பல தோழர்களுக்குத் தெரியும். இந்த ஊர் சின்னாளப்பட்டி கம்பர் அவர். இளைஞர்களுக்குத் தெரியாது. சில பேருக்குக் கம்பரையே தெரியாமல் இருக்கும். கம்பர் மாதிரி, பல தோழர்கள் மிகப்பெரிய அளவிற்கு அவர்கள் வியாபாரத்தையும் பார்த்துக் கொள்வார்கள், அவர்கள் செல்லும் அந்த ஊரில் புதிதாக இந்த இயக்கத்தையும் உருவாக்குவார்கள். பொதுக்கூட்டத்தையும் நடத்து வார்கள். அப்படியெல்லாம் பலர் உழைத்து இந்த இயக்கம் இன்றைக்குச் செல்வாக்காகி உள்ளது. சின்னாளப்பட்டியே தந்தை பெரியாருக்குத் தத்து கொடுக்கப்பட்ட ஊர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஒரு காலத்தில பெருமை படைத்தது.
போளி அவர்களுடைய குடும்பத்தில் இருந்து கலெக்டராக வந்திருக்கிறார்!
எல்லா கட்சிக்காரர்களும், அய்யாவை ஒரு மிகப்பெரிய குடும்பத் தலைவராகவே கொண்டார்கள். ஒரு சீசனில், பிள்ளைகள் படிக்க வேண்டுமா? உத்தியோகத்திற்குப் போக வேண்டுமா? என்று தடுத்தார்கள். அதனுடைய விளைவுதான், போளி அவர்களுடைய குடும்பத்தில் இருந்து கலெக்டராக – அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, கலெக்டராகப் பொறுப்பேற்றார். இந்த ஊரில். பல பேருக்கு இந்தச் செய்தி தெரியவேண்டும். இந்த இயக்கத்திற்கு வந்ததினால், படிக்க வைத்தார்கள். அப்படிப் படித்ததினால், அவர்களுக்கு மிகப்பெரிய அந்தப் பொறுப்பு கிடைத்தது.
‘கல்வி நீரோடை நாடெல்லாம் பாய வேண்டும்’ என்பதற்காகத்தான் இந்த இயக்கம்!
‘‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வியை கொடுக்காதே’’ இதுதான் இந்து மதம் – இதுதான் நம்ம மதம். ஆனால், அந்தக் கல்வியை கொடுப்பதற்காகவே, எல்லோரும் படிக்க வேண்டும், ‘கல்வி நீரோடை நாடெல்லாம் பாய வேண்டும்’ என்பதற்காகத்தான் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’
இதோ பாருங்கள், ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற புத்தகம். இதை நான் சொன்னவுடனே, ‘‘பாருங்க, இந்து மதத்தைத் தாக்குகிறார்’’ என்று சிலர் புரியாமல் பேசலாம். இல்லை, எங்களுக்குத் தாக்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த புத்தகத்தை யார் எழுதியது. அக்னிேஹாத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள். 100 வயதுவரை வாழ்ந்தவர். அவர், ‘நக்கீரன்’ இதழில் எழுதி, அதைப் புத்தகமாகக் கொண்டுவந்தார்கள்.
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும்,
அறிவைக் கொடுக்காதே!
அந்தப் புத்தகத்தில் தெளிவாக எடுத்துச் சொல்கிறார், ‘‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், அறிவைக் கொடுக்காதே! சூத்திரன் பக்கம் சேராதே! சூத்திரனை அடி, உதை. இதுதான் மனுதர்மம் – தண்டனை கொடு’’ என்று மனுதர்மம் சொன்னது.
இப்படிப்பட்ட நிலையில், இந்தச் சுயமரியாதைக் கொள்கையைச் சொல்லித்தான் இந்த ஊரே மாறியது மட்டுமல்ல, இந்த நாடே மாறியது. அதுதான் மிக சிறப்பானது. அப்படி வருகிற போது, ‘முதலில் எதிர்ப்புதான் அதிகம். பலருக்கும் வரலாறு தெரியாது. எதற்கும் எதிர்நீச்சல். இன்றைக்கு எப்படி பா.ஜ.க. போன்ற கட்சிகள் மத உணர்வுகளை வைத்துக்கொண்டு, அரசியல் ரீதியாக எதிர்க்கிறார்களோ, அதேபோலத்தான் அன்றைய காங்கிரஸ் கட்சி இருந்தது. இன்றைய காங்கிரஸ், அந்தப் பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. ஆகவே, அப்பேர்ப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு அந்தக் காங்கிரஸ் காலத்தில் அய்யாவினுடைய கூட்டம் என்று இங்கே அறிவித்தார்கள்.
19.1.1946 ஆம் ஆண்டு
‘குடிஅரசு’ பத்திரிகை!
இதைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். ‘குடிஅரசில்’ வந்திருக்கிற செய்திகள் இருக்கின்றன. ஏன் இந்தக் கூட்டம் – மாநாடு என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பை இப்போது பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் நண்பர்களே, இங்கே பாருங்கள், இது எப்போது வந்தது? 19.1.1946 ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ பத்திரிகை. ‘குடிஅரசு’ தான் இன்றைக்குப் பல பேருக்கு ஆவணம். அந்த ஆவணத்தில் தந்தை பெரியார் எழுது கிறார். மதுரை ஜில்லா சுற்றுப்பயணத்தில் என்ன நடந்தது? என்று சொல்லும்போது, ஒரு துணைத் தலையங்கம்.
(தொடரும்)
