திருவனந்தபுரம், ஜூன் 27 கேரளாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலின் தலைமை பூசாரியான (மேல்சாந்தி) பிரசாத், தனது பணியில் சேருவதற்காக போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு அம்மாநில அமைச்சர் முரளீதரன் உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலை கோயிலில் ஆண்டு தோறும் புதிய மேல்சாந்தி தேர்ந் தெடுக்கப்படுவது வழக்கமாகும். இதற்கான தகுதிப் பட்டியலில் இடம் பெற, “நாள்தோறும் மூன்று வேளை பூஜைகள் நடைபெறும் கோயில்களில் தொடர்ந்து 10 ஆண்டுகள் மேல்சாந்தியாகப் பணியாற்றியிருக்க வேண்டும்” என்ற முக்கியமான நிபந்தனை உள்ளது. இந்த தகுதியின் அடிப்படையில், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் இறுதியாக சபரிமலை சன்னிதானத்தில் நடத்தப்படும் திருவுளச்சீட்டு முறை மூலமே மேல்சாந்தி தேர்வு செய்யப்படுகிறார்.
தற்போது சபரிமலை மேல் சாந்தியாகப் பொறுப்பில் இருக்கும் பிரசாத், தனக்கு 10 ஆண்டுகள் அனுபவம் இருப்பதாகக் கூறி சமர்ப்பித்த ஆவணங்கள் போலி யானவை என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்குப் புகார்கள் வந்துள்ளன.
இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, புகாரைப் பற்றி உடனடியாக முறையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு அமைச்சர் முரளீதரன் அதிரடி உத்தரவு பிறப்பித் துள்ளார். இதனால் சபரிமலை வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
