குற்றாலம், ஜூன் 27- குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் 47 ஆவது ஆண்டு வகுப்புகள் ஜுன் 25 தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் “கல்வி வளர்ச்சியும், தடுக்கும் முயற்சிகளும்” எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பேசியதாவது:
47 ஆண்டுகள் என்பது பெரும் சாதனை!
குற்றாலத்தில் பெரியாரியல் பயற்சிப் பட்டறை 47 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பெரும் சாதனை. சிலர் நாள்தோறும் வாட்சப் மூலம் காலை வணக்கம் அனுப்புவார்கள். இது ஒரு சிறு செயல்தான். எனினும் 47 ஆண்டுகளாக இதனை ஒருவர் செய்வதாகக் கொண்டால் அது எவ்வளவு பெரிய முயற்சி. எனவே எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொடர்ந்து செய்வது என்பது வரலாற்றுச் சிறப்புக்குரியது. இத்தனை ஆண்டுகளாக நினைவில் வாழும் வீகேயென்.கண்ணப்பன் அவர்கள் இடம் கொடுத்ததோடு, நேரில் வந்தும் சிறப்புச் செய்வார்கள். அவர்கள் மறைவிற்குப் பிஅ, அவரது மகன் கேப்டன் ராஜா ஆதரவு தெரிவித்து, இடமும் வழங்கி வருகிறார். அவருக்கும், குடும்பத்தாருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும் ஒரு மாணவர்தான்! தினமும் புதிது, புதிதாகக் கற்று வருகிறேன். கற்பதற்கு வயது பொருட்டல்ல; எப்போது வேண்டுமானாலும் நாம் படித்துப் பட்டங்களைப் பெறலாம். குற்றாலம் பெரியார் பயிற்சிப் பட்டறைக்கு இந்த ஆண்டு அதிக மாணவர்கள் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்குக் காரணமான உங்களின் பெற்றோர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைக்கு 167 மாணவர்கள் வருகை தந்துள்ளனர். இதில் பெண்கள் 67, ஆண்கள் 100. அதிலும் பட்டதாரி மாணவர்கள் 70, பள்ளி மாணவர்கள் 97 பேர். குறிப்பாக 136 மாணவர்கள் முதன்முறையாக வந்துள்ளார்கள்.
ஏற்கெனவே பங்கேற்ற மாணவர்கள், பயிற்சிப் பட்டறைக் குறித்தக் கருத்துகளைப் பகிருங்கள். சிறப்பான ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும். அரசு விடுமுறையைப் பயன்படுத்தி நான்கு நாட்களும் நீங்கள் வந்துள்ளீர்கள். தொடர் விடுமுறையைப் பயன்படுத்தி எப்படியும் நீங்கள் பொழுதைக் கழித்திருக்கலாம். ஆனால் அதைக் கடந்து பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கும் மாணவச் செல்வங்களையும் வாழ்த்துகிறேன்.
தானாக நடந்ததா அல்லது யாரோ
ஒருவர் சிந்தித்துப் போராடியதா?
அனைத்து ஜாதியினரும், பல்வேறு ஊர்களில், பல கல்வி நிறுவனங்களில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு யார் காரணம்? இது தானாக நடந்ததா? அல்லது யாரோ ஒருவர் சிந்தித்து, போராடியதா? இதுகுறித்து நாம் சிந்திக்க வேண்டும். இதற்கு விடை கூறும் வகையிலுமே இந்த வகுப்பு அமைய இருக்கிறது.

“கல்வியே மனிதனை மனிதனாக்கும் முதல் கருவி” என்றார் பெரியார். கல்வி தான் தனி மனிதர் முதல் தேசம் வரை உயர்த்தும் வலிமை படைத்தது. உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் தான் ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை. இதைக் கல்வியைப் பெறுவதன் மூலம் நாம் அடைந்துவிட முடியும். அதனால் தான் கல்வியைப் பிறப்புரிமை என்றார்கள்; சமூக விடுதலைக் கருவி என்றும் சொல்கிறார்கள். இந்தக் கல்வி தான் நம் திறமையை வளர்த்துவிடும், பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை வளர்ச்சிக்கும் இது பயன்படும். அதனால் தான் சுயமரியாதை எனும் பெயரிலேயே நம் நாட்டில் ஒரு இயக்கம் உருவானது. இன்றைக்குச் “சுயமரியாதை” குறித்தப் பாடங்கள் உலகெங்கும் வந்துவிட்டன. இந்தப் பயிற்சி வகுப்பிற்கு நீங்கள் வந்ததே கூட இந்த சுயமரியாதை உணர்வும் ஒரு முக்கியக் காரணம்.
இன்றைக்கு வளர்ந்து நிற்கும் இந்தக் கல்வி, இதற்கு முன் யாருடையதாக இருந்தது? சங்கக் காலத்தில் தமிழர்களிடம் கல்வி ஆற்றல்கள் இருந்தன. அதற்குப் பின்னால் ஏற்பட்ட தடைகள் என்ன? ஆரியர்களின் மனுதர்மம் நுழைந்ததுமே தமிழர்களுக்கான கல்வி மறுக்கப்பட்டது. கல்வியை இழந்த தமிழர்களின் வாழ்வு இருண்ட காலமாகப் பார்க்கப்பட்டது. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் கல்விக் கூடங்கள் அதிகரித்தன. நமக்கும் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் கல்வியைப் பெற முடியாத வகையில் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்தனர். கல்வியைப் பறித்துவிட்டால், நாடும் சேர்ந்து அழியும் என்பதே அவர்கள் எண்ணம்.
‘சித்தரிப்பதில்’ பார்ப்பனர்கள் கெட்டிக்காரர்கள்!
அந்தக் காலத்திலேயே நீதிக்கட்சி கல்விப் புரட்சியை ஏற்படுத்தியது. அனைவருக்கும் கல்வி என்கிற நிலையை உருவாக்க முயற்சி செய்தது. அதேநேரம் 1922 ஆம் ஆண்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணையும் (G.O) பிறப்பிக்கப்பட்டது. தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்பிற்கு இந்த ஆணை பெரிதும் பயன்பட்டது. வழக்கம் போல பார்ப்பனர்கள் நீதிமன்றம் சென்று தடை வாங்கினார்கள். குறிப்பாக செண்பகம் துரைராஜ் என்கிற பெண்மணி, வகுப்புவாரி பிரதிநிதித்துவச் சட்டத்தால் தனக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவச் சீட்டுக் கிடைக்கவில்லை என வழக்குத் தொடர்ந்தார். அதனையொட்டி வந்த தீர்ப்பால், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணை ரத்து செய்யப்பட்டது. பின்னாளில் செண்பகம் துரைராஜ் மருத்துவக் கல்லூரியில் படிக்க விண்ணப்பிக்கவே இல்லை என்கிற அதிர்ச்சி செய்தி கிடைத்தது. இதனைக் கடுமையாக எதிர்த்த பெரியார், தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து, மீண்டும் அந்த ஆணையை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். அதனையொட்டியே இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முதன்முதலில் திருத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1952 இல் இராஜாஜி முதலமைச் சராக வருகிறார். காலையில் கல்வியும், மதியத்திற்கு மேல் அப்பா செய்யும் தொழிலையும் செய்ய வேண்டும் என்கிற வகையில் “குலக்கல்வித் திட்டம்” என்பதைக் கொண்டு வந்தார். பல்லாயிரக்கணக்கான பள்ளிகளையும் இழுத்து மூடினார்.
அந்தக் காலத்தில் அப்பாக்கள் சுயதொழில் செய்யவில்லை, நிறுவனத்தில் வேலை செய்யவில்லை, அரசுப் பணி கிடையாது. அதிகபட்சம் கூலி வேலை செய்தார்கள், விவசாய வேலை செய்தார்கள், மண்பாண்டம் செய்தார்கள், பனைமரம் ஏறினார்கள், முடிவெட்டுதல், சலவை செய்தல், செருப்பு தைத்தல் இவைதானே தொழிலாக இருந்தன; குறிப்பாக ஜாதி ரீதியிலான குலத்தொழிலாக (குடும்பத் தொழில்) இருந்தது.
பொதுவாகப் பார்ப்பனர்கள் தங்களுக்கு மூளை வலிமை அதிகம் என்று சொல்வார்கள். அதிலும் இராஜாஜிக்கு உடலெங்கும் மூளை என்பார்கள். மூளை என்பது இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். உடல் முழுவதும் இருந்தால் அது கொழுப்புக் கட்டி. ஒரு விசயத்தை சித்தரிப்பதில் பார்ப்பனர்கள் (Narrative Settings) கெட்டிக்காரர்கள். யாருக்குப் பாதிப்பு ஏற்படுகிறதோ, அவர்களையே ஆதரித்துப் பேசும் சூழலை உருவாக்கி விடுவார்கள்.
குலக்கல்வி எனும் தடை உடைக்கப்பட்டது!
நம் பிள்ளைகளைச் சிறு வயதிலேயே கழித்துக் கட்ட வேண்டும் எனத் திட்டம் தீட்டினார்கள். மேற்படிப்போ, உயர் வேலைகளோ, வெளிநாட்டு வாழ்க்கையோ வந்துவிடக் கூடாது என நினைத்தார்கள். ஆனால் தந்தை பெரியார் இதை அனுமதிப்பாரா? கடும் எச்சரிக்கை விடுத்தார், குலக்கல்வி எதிர்ப்புப் படை ஒன்றை அமைத்தார், தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. விளைவு, இராஜாஜி பதவியை விட்டே ஓடினார். பிறகு முதலமைச்சராகக் காமராஜரை உருவாக்கினார் தந்தை பெரியார். இராஜாஜி மூடிய பள்ளிக் கூடங்களைத் திறந்ததோடு, மேலும் பல புதிய பள்ளிகளையும் திறந்து வைத்தார். அதனாலே கல்விக் கண் திறந்து காமராஜர் எனப் போற்றப்படுகிறோம்.
இப்படி ஒவ்வொன்றாக செய்துதான் இங்கே கல்விப் புரட்சி வந்தது. பிறகு வந்த திராவிடக் கட்சிகளும் கல்வியை உயர்த்திப் பிடித்தன. கல்விக்கான பல்வேறு உதவிகளையும் அரசுகள் செய்தன. கல்வி கற்கும் மாணவர்கள் எண்ணிக்கையும் பெருகியது. இட ஒதுக்கீடு அளவுகளும் உயர்த்தப்பட்டன. அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் உருவாக்கிய கல்விக்கான திராவிடல் மாடல் அரசை, அடுத்தடுத்து வந்த முதலமைச்சர்களும் பின்பற்றத் தொடங்கினர். சில மாணவர்கள், பெற்றோருக்குச் சிரமம் கூடாது என உயர்கல்வி படிக்கமாட்டார்கள். சிரமத்தோடு, சிரமமாக உயர்கல்வி படித்துவிடுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள். கல்விக் கடன்களும் நிறைய வாய்ப்பைப் பெற்றுத் தருகின்றன. எதையுமே தடை என்று நினைக்காதீர்கள். அந்தத் தடையை உடைக்கும் போராட்டத்தில் தான் திராவிடர் கழகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
வருமான வரி உச்சவரம்பு
தடை உடைக்கப்பட்டது!
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, 1976 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் கீழ் கொண்டு போய் சேர்த்தார்கள். அது முதல் நாம் துன்பத்தை அனுபவித்து வருகிறோம். இதுதான் வாய்ப்பு எனப் பார்ப்பனர்களும் கல்வித் தொடர்பான சிக்கல்களை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். பொதுவாக மாநில அரசுகள் தமக்கான முடிவைத் தாமே தேர்வு செய்வது, மாநிலத்திற்கான முடிவை ஒன்றிய அரசு முடிவு செய்வது, சில விசயங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து (ஒத்திசைவு – Concreative) செயல்படுத்துவது என்கிற மூன்று நிலைப்பாடுகள் உள்ளன. இதில் கல்வி என்பது நமது உரிமையாக வர வேண்டும். அப்போது தான் மாணவர்கள் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும்.
1979 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்கள் முதல மைச்சராக இருந்த போது கல்வி வளர்ச்சிக்கு ஒரு தடை ஏற்பட்டது. ஒரு சிலர் கூறிய தவறான ஆலோசனைகளை அவர் நடைமுறைப்படுத்தினார். அதுதான் வருமான வரி உச்சவரம்பு என்கிற திட்டம். இதனை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடுமையாக எதிர்த்தார். தமிழ்நாடு முழுவதும் பயணித்துப் பிரச்சாரம் செய்தார்; மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் எம்ஜிஆர் அவர்கள் தோல்வியைச் சந்தித்தார். அதற்குக் காரணம் இந்த வருமான வரி உச்சவரம்பு திட்டமே என்பதை அறிந்து, அதனை உடனடியாக நீக்கியதோடு, இட ஒதுக்கீட்டு அளவையும் 31 இல் இருந்து, 50 விழுக்காடாக அதிகரித்தார். இவையனைத்தும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆலோசனையின் பேரிலே செய்தார்.
நுழைவுத்தேர்வு எனும் தடை உடைக்கப்பட்டது!
அதேபோல 1990 இல் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தார்கள். “மேல்நிலை வகுப்பில் (+2) நாங்கள் தான் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளோமே, பிறகு எதற்கு மறு தேர்வு?”, என மாணவர்கள் வினா எழுப்பினர். தொடர் போராட்டங்கள், பிரச்சாரங்கள் என நீடித்து, 2006 ஆம் ஆண்டு முதலமைச்சராக வந்த டாக்டர் கலைஞர் அவர்கள், நுழைவுத்தேர்வை ரத்து செய்தார். இதிலிருந்து மீள்வதற்கு நமக்கு 16 ஆண்டுகள் தேவைப்பட்டன.
இத்தோடு முடிந்ததா நமது கல்விக்கான போராட் டங்கள்? 2014 ஆம் ஆண்டு “நீட்” எனும் பெயரில் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தார்கள். (NEET – National Eligibility cum Entrance Test) 2017 இல் அது தமிழ்நாட்டிற்கு வந்தது. கடந்த 11 ஆண்டுகளாக இந்த நீட் ஒழிப்பிற்குப் பாடுபட்டு வருகிறோம். பல்வேறு வடிவத்தில் தடையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதில் நமது எதிர்ப்புகள் எந்தளவில் உள்ளது என்பதையும் பார்ப்பார்கள். இப்போது கூட மூன்றாவது மொழி ஹிந்தி என நமது கல்வியில் தொய்வை ஏற்படுத்த முயல்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வட இந்தியர்கள் இங்கே வேலை செய்வதால், அவர்களிடம் நாம் ஹிந்தியில் பேச வேண்டும் என்கிற சூழலையும் உருவாக்கப் பார்க்கிறார்கள்.
பிற மாநிலங்களில் குறைந்தபட்சம் கல்வி கற்று வேலைக்குப் போய் விடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்த வகையிலும் இந்தியாவில் நாம்தாம் முதல் நிலையில் இருக்கிறோம். அதுமட்டுமின்றி பெண் கல்வியிலும் நாம் சிறந்து விளங்குகிறோம். இந்தக் கல்வியைத் தான் இன்னும் நாம் தரம் உயர்த்த நினைக்கிறோம். கல்வி என்பது பகுத்தறிவுக் கல்வியாக மாற வேண்டும்; மனப்பாடக் கல்வியாக இருக்கக் கூடாது, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது மிக முக்கியம் என ஆசிரியர் அடிக்கடி கூறுவார்கள்.
செயற்கை நுண்ணறிவு காலம்!
இன்றைக்குச் செயற்கை நுண்ணறிவு (AI-Artificial Intelligence) காலமாக வளர்ந்து நிற்கிறது. அதற்காக AI சொல்வது எல்லாமே சரி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. AI செயலியில் 30 கோடி இலட்சம் செய்திகள் பதிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் தான் நாம் ஏதாவது கேள்வி கேட்டால், பதில்களில் கூடுதல், குறைவு வருகிறது. சில நேரங்களில் தடுமாற்றமும் இருக்கிறது. எனினும் எந்தக் கேள்விக்கும் நமக்குச் சாதகமான, நேர்மறையான பதில்களை வழங்குவது போன்று அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்றைக்குக் கைப்பேசிக் கருவியின் மூலம் உலகமே நம் கைகளுக்குள் வந்துவிட்டது. அதில் செயற்கை நுண்ணறிவுகளும் வந்துவிட்டன. இவற்றைப் பயன்படுத்தி நாம் வளர்ச்சி பெற எந்தத் தடையும் கிடையாது. இதை நாம் எப்படி பயன்படுத்துவது என்பதில் தான் நம் வாழ்க்கை வெற்றி அமைந்திருக்கிறது. இந்தத் தொழில் நுட்பத்தில் மிக முக்கியமானது, இதில் வருகின்ற செய்திகள் உண்மையா? பொய்யா? (Fact Check) என்பதை அறியும் திறன் நம்மிடம் இருக்க வேண்டும். ஏனெனில் அறிவியல் தொழில் நுட்பத்தை நல்லதற்குப் பயன்படுத்துவதைப் போலவே, பலரும் தீயதிற்கும் உருவாக்குவார்கள். எனவே தந்தை பெரியார் கூறிய பாலபாடமான எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எனக் கேட்க வேண்டும். அனைத்திற்கும் அடிப்படையே இந்தக் கேள்விகள் தான். பகுத்தறிவோடு நீங்கள் எதைச் சிந்தித்தாலும் உங்களுக்குத் தோல்வியே கிடையாது.
அய்.நா.சபை திட்டமும்,
தந்தை பெரியாரின் தொலைநோக்கும்!
அய்க்கிய நாடுகள் சபை 2030 ஆம் ஆண்டிற்கான “நிலையான வளர்ச்சி இலக்குகள்” (Sustainable Development Goals) என்கிற கல்விக்கான திட்டம் ஒன்றை வரையறுத்துள்ளது. இதைத் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் 1940 ஆம் ஆண்டிலேயே பேசிவிட்டார். ஆக திராவிட இயக்கங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் கல்வி வளர்ச்சிக்காகப் போராடிக் கொண்டே வருகிறது. அதைப் பெருமளவு பாதுகாத்தும் கொடுத்துள்ளது. அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர் சமுதாயமான உங்களிடமே உள்ளது. இங்கே நான் பேசிய “கல்வி வளர்ச்சியும், தடுக்கும் முயற்சிகளும்” தொடர்பான செய்திகள் நூல்கள் வடிவத்தில் ஏராளம் உள்ளன. அவைகளையும் மாணவர்கள் வாங்கிப் படித்து, தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றை அறிய வேண்டும். தடை எங்கிருக்கிறது என்பது தெரிந்தால் தான், அதை உடைத்து நாம் வளர்ச்சி பெற முடியும்”, எனக் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பேசினார்.
தொகுப்பு: வி.சி.வில்வம்
