திராவிடர் இயக்கம் எதிர்நீச்சல் அடித்து தான் வந்தது என்பதற்கு
அருமையான எடுத்துக்காட்டுதான் சின்னாளப்பட்டி!
சின்னாளபட்டி, ஜூன் 27 ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா – திறந்த வெளி மாநாட்டில்’’ கலந்து கொண்டு தலைமையேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘‘திராவிடர் இயக்கம் எதிர்நீச்சல் அடித்து வெற்றி பெற்று வந்தது என்பதற்கு சின்னாளப்பட்டி ஓர் அருமையான எடுத்துக்காட்டு’’ என்று சுட்டிக் காட்டி அதன் வரலாற்றை விவரித்து உரையாற்றினார்.
‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு!’’
திண்டுக்கல், பழனி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா திறந்தவெளி மாநாடு’’ நேற்று (26.06.2026) மாலை 5 மணிக்கு, சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இம்மைதானத்தில் வலப்பக்கம் 2.6.1995 ஆம் ஆண்டு, அப்போது திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த, இன்றைய திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்த தந்தை பெரியார் சிலையும், இடப்பக்கம் 22.08.1980 நிறுவப்பட்ட தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கர் அறிஞர் அண்ணா அவர்களின் சிலையும் அழகு சேர்க்க, காந்தி மைதானம் விளங்கியது.
வீரவணக்க உரை!
சுயமரியாதைச் சுடரொளிகள், இராமையா, போளி, சண்முகம் ஆகியோரின் நினைவாக மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன் வரவேற்புரை வழங்க, பழனி மாவட்டத் தலைவர் டி.ஆர்.பி.ஆனந்த கிருட்டிணன், சின்னாளபட்டி நகரத் தலைவர் நாகேந்திரன், மாவட்டச் செயலாளரும் வழக்குரைஞருமான ஆனந்த முனிராசன், திராவிடத்தளம் தாமரைக் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். விருதுநகர் நகரத் தலைவர் நல்லதம்பி மாநாட்டில் கழகத் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார். சின்னாளப்பட்டி சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தினை திறந்துவைத்து கிராம பகுத்த றிவு பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் வீரவணக்க உரையாற்றினார்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர்
இரா.செந்தூரப்பாண்டியன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் மதுரை செல்வம், ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன், தி.மு.க. பேரூர் செயலாளர் பாலகிருஷ்ணன், பேரூராட்சி மன்ற தலைவர் பிரதிபா கனகராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு தஞ்சை இரா.குணசேகரன் மாநாட்டை சிறப்பாக ஒருங்கிணைத்தும், இயக்கப் புத்தகங்களையும் அறிமுகம் செய்தும் உரையாற்றினார். தந்தை பெரியார் படத்தினை திறந்துவைத்து சின்னாளப்பட்டி நகர தலைவர் கா.நாகேந்திரன் உரைநிகழ்த்தினார்.
கழகத் தலைவர் ஊர்வலமாக
அழைத்து வரப்பட்டார்!
மாலை 6.30 மணிக்கு சின்னாளப்பட்டிக்கு வருகை தந்த தமிழர் தலைவரை திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன் தலைமையில் பழனி, மதுரை, சேலம், ஆத்தூர் மேட்டூர், தருமபுரி பொறுப்பாளர்களும், தோழர்களும் வரவேற்றனர். அப்போது, கருப்பன் திரைப்படப் புகழ் டிரம்ஸ்செட் குழுவினரின் அதிரடி இசை முழங்க, கழகத் தலைவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
மந்திரமா? தந்திரமா? விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதேபோல, மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் இளமாறன் மற்றும் தோழர்கள் எழுச்சிகரமான வரவேற்பை கொள்கை ஒலி முழக்கங்கள் மூலமாக கழகத் தலைவருக்கு வரவேற்பு வழங்கினர். அதுமட்டுமின்றி, உள்ளூர்ப் பிரமுகர்கள் குடும்பம் குடும்பமாக மேடைக்கு வந்து ஆசிரியருக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து, அரசியல் கட்சித் தோழர்களும், நண்பர்கள் புடைசூழ வந்து ஆசிரியருக்கு மரியாதை செய்தனர். புத்தகங்களில் ஒப்பம் பெற்று மகிழ்ந்தனர். இயக்கத் தோழர்களும் தங்கள் தலைவரிடம், தங்களின் வாரிசுகளை அறிமுகம் செய்து வைத்து உற்சாகம் பெற்றனர். மொத்தத்தில், சிறப்பு நிலை பேரூராட்சி என்ற மதிப்பில் உள்ள சின்னாளப் பட்டியில், கழகத் தலைவருக்கு வரலாறு காணாத சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் திண்டுக்கல் ஈட்டி கணேசன் அவர்கள், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை செய்து காட்டி, மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார்.
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
பழனி மாவட்ட தலைவர் ஆனந்த கிருட்டிணன், தன்னுடைய தனிப்பட்ட பங்களிப்பாக ‘பெரியார் உலக’ நன்கொடையாக ரூபாய் ஒரு லட்சம் கழகத் தலைவரிடம், பழனி மாவட்டத் தோழர்களுடன் இணைந்து வழங்கினார். சேலம் மாவட்டக் காப்பாளர் ஜவகர் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றியதோடு, பெரியார் உலகத்துக்கு ரூ.5,000 நன்கொடை வழங்கினார். கடந்த 22.06.2026 அன்று, சென்னை பெரியார் திடலில், ‘‘தந்தை பெரியாரின் சிந்தனைக் கூர்மை’’ எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சின்னாளப்பட்டியைச் சேர்ந்த சென்னை அயனாவரம் தோழர் துரைராஜ், மாநாட்டுக்கு வரமுடியாத சூழலில், மாநாட்டுக்காக, நன்கொடை ரூ. 2,000, கழகத் தலைவரிடம் ஒப்படைத்தார். அந்தத் தொகையை கழகத் தலைவர் மாநாட்டு மேடையில் (26.06.2026) திண்டுக்கல் மாவட்டத் தலைவரிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட தலைவரின் 60 ஆம் ஆண்டு அகவையை முன்னிட்டு, கழகத் தலைவர் அவருக்கு சிறப்பு செய்தார்.
பயனாடை போர்த்தி பாராட்டு!
மாநாடு சிறப்பாக நடைபெற உதவியளித்து, நன்கொடை திரட்டியளித்து களப்பணியாற்றிய திண்டுக்கல் மாநகரச் செயலாளர் தி.க.செல்வம், மாநகரத் தலைவர் அ.மாணிக்கம், நத்தம் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.பி.செல்வம், வத்தலக்குண்டு ஒன்றியத் தலைவர் க.சுந்தர், மாவட்ட துணைச்செயலாளர் இரா.செயப்பிரகாசு, மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.எஸ்.சின்னப்பன், பழனி மாவட்ட துணைச்செயலாளர் வழக்குரைஞர் ஆர்.பி.ஆனந்தன், மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.சக்திசரவணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சி.வல்லரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோ.சரவணன், பழனி மாவட்டத் தொழிலாளர் அணித்தலைவர் பொ.பெ.இரணியன், பழனி ஒன்றியச் செயலாளர் சி.இராதாகிருட்டிணன், நிலக்கோட்டை ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் எம்.முத்துக்குமார், ஒன்றிய இளைஞரணிச் தலைவர் எம்.இராஜ்குமார் முத்துக்கருப்பையா, தேவத்தூர் உ.மதிவாணன், பழனி நகரச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோருக்கு கழகக் காப்பாளர் சேலம் கே.ஜவகர் பயனாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.
மாநாட்டிற்கு மானமிகு தமிழர் தலைவர் தலைமை ஏற்கவேண்டுமென முன்மொழிந்து திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன் உரையாற்றினார். வழிமொழிந்து சின்னாளப்பட்டி நகரத்தலைவர் கா.நாகேந்திரன் உரையாற்றினார்.
கழகத் தலைவர் ஆசிரியர் உரை
நிறைவாக, கழகத் தலைவர் உரையாற்றினார்.
அவர் தமது உரையை, ‘‘15 ஆண்டுகளுக்குப் பிறகு, சின்னாளப்பட்டியில் பேசுவதற்காக வந்திருக்கிறேன்” என்று தொடங்கினார். 19.01.1946 ஆம் ஆண்டு வெளிவந்த ‘குடிஅரசு’ பத்திரிகையின் குறிப்பிட்ட பக்கத்தின் நகலைக் கையில் வைத்துக் கொண்டு, பழைய நினைவுகளுடன் பேசினார். அதாவது, மதுரை ராமநாதபுரம் மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது, சின்னாளப்பட்டி வந்திருந்தார். அப்போது, தந்தை பெரியார் அவர்கள் மாபெரும் ஊர்வலத்துடன் முக்கிய தெருக்களின் வழியாக மாநாட்டுத் திடலுக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் ஒலிபெருக்கி இருந்தது. (அப்பொழுதெல்லாம் பொதுக் கூட்டங்களுக்கு ஒலி பெருக்கி அரிது). அங்குதான் தந்தை பெரியார் உணர்ச்சியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அன்றைய சில காங்கிரஸ் காலிகள் அய்யாவின் மீது கற்களை வீசி இருக்கிறார்கள். பெரியார் அவர்கள் துண்டை தலையில் கட்டிக்கொண்டு தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியதைச் சுட்டிக்காட்டினார். ‘‘அதற்குப் பிறகுதான் சின்னாளப்பட்டியே தந்தை பெரியாருக்கு தத்து கொடுத்ததைப் போல ஆகிவிட்டது’’ என்பதையும் எடுத்துரைத்தார். ‘‘இப்படி எதிர்நீச்சல் அடித்து வெற்றி பெற்ற இயக்கம் தான் திராவிடர் இயக்கம். அதற்கு அருமையான ஓர் எடுத்துக்காட்டு தான் இந்த சின்னாளப்பட்டி!’’ என்று, அழுத்தம் திருத்தமாகக் கூறினார். இதன் பின்னணியில் தான், ‘‘திராவிட இயக்கத்தை ஒருபோதும் அழித்து விட முடியாது. தேர்தல் தோல்விகள் ஒரு பொருட்டே அல்ல. தி.க.வும், தி.மு.க.வும் என்றைக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் தான்! சிலர் வருவார்கள்; சிலர் போவார்கள் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை’’ என்றார். மேலும் நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து உரையாற்றி நிறைவு செய்தார்.
அறப்போராட்டத்திற்கான 15 இளைஞர்களின் பட்டியல் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது!
முன்னதாக, ஆயிரம் இளைஞர்களை தாருங்கள் அறப்போராட்டத்திற்கு என்று கழகத் தலைவர் அறிவிப்பு செய்திருந்தார். அந்த அறிவிப்பை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் முதல் முறையாக அந்த அறப்போராட்டத்திற்கான 15 இளைஞர்களின் பட்டியலை அளித்து, அந்தப் பட்டியலில் உள்ள தோழர்களும் கழகத் தலைவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
நிறைவாக சின்னாளப்பட்டி நகரச் செயலாளர் திருநாவுக்கரசு நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சிக்கு திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், மதுரை, மேட்டூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான கழகத் தோழர்கள் மற்றும் சின்னாளப்பட்டியைச் பொதுமக்கள் ஆகிய பலரும் கலந்து கொண்டு மாநாடு நிறைவடையும் வரையில் ஆர்வத்தோடு செவிமடுத்தனர்.
