சுவீடனின் கோதன்பர்க்கிலுள்ள, சால்மர்ஸ் தொழில் நுட்ப பல்கலை ஆய்வாளர்கள், பேக்கரியில் பயன்படும் ஈஸ்ட்டைக் கொண்டு, மட்கும் தன்மை கொண்ட புதிய கட்டடப் பொருளை உருவாக்கி யுள்ளனர். இந்த உயிரியல் கலவையைப் பயன்படுத்தி, முப்பரிமாண அச்சு முறையில் சுவர்கள் மற்றும் அலங்காரத் தடுப்புகளை உருவாக்க முடியும்.
சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலை ஆய்வாளர்கள், 4.4 மி.மீ., அளவே உள்ள நவீன அறுவை சிகிச்சை ரோபோவை உருவாக்கியுள்ளனர். கம்பியில்லா முறையில், காந்தப்புலங்கள் மூலம் இயக்கப்படும் இந்த நுண் ரோபோ, உடலின் கடினமான பகுதிகளுக்குச் சென்று திசுக்களை வெட்டுதல், மருந்து செலுத்துதல், மாதிரிகளைச் சேகரித்தல் மற்றும் வெப்ப சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட அய்ந்து முக்கிய மருத்துவப் பணிகளை துல்லியமாகச் செய்யும் திறன் கொண்டது.
அமெரிக்காவின் ‘நாசா’ பொறியாளர்கள், ஆர்ட் டெமிஸ் நிலவுப் பயணத் திட்டத்திற்காக ‘பிகாசஸ்’ என்ற அடுத்த தலைமுறை நிலவு வாகனத்தை வடிவமைத்துள்ளனர். இதை விண்வெளி வீரர்களே நேரடியாக இயக்க முடியும். பூமியிலிருந்தும் கட்டுப் படுத்தலாம். அல்லது தானோட்டி முறையிலும் அது இயங்கும்.
பென்சில்வேனியா பல்கலை ஆய்வாளர்கள், ஒலியை ஒரு குறிப்பிட்ட சிறிய பகுதிக்கு மட்டும் துல்லியமாகக் குவிக்கும் ஒலிபெருக்கி மூடியை உருவாக்கி உள்ளனர். ஓர் ஒலி லென்ஸ் போலச் செயல்படும் இந்த மூடி, ஒலி அலைகளைக் குறுகிய கற்றையாக குவியப்படுத்தி, குறிப்பிட்ட இடத்தில் இருப்பவருக்கு மட்டும் தெளிவான இசையை கேட்கச் செய்யும்.
