‘நீட்’ மறுதேர்வு முறைகேடு! பீகாரில் ஆள்மாறாட்டம் செய்த மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது! ஜெய்ப்பூரில் ஏஅய் மூலம் விடை தேடிய மாணவி சிக்கினார்!

2 Min Read

லகிசராய் / ஜெய்ப்பூர், ஜூன் 24- நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக அண்மையில் நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது.

இளைஞர் அரங்கம்

இந்த மறுதேர்விலும் பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

பீகாரில் பயோமெட்ரிக் ஊழியர்கள்,
போலித் தேர்வர்கள் 30 பேர் கைது!

பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேர்வு மய்யங்களில் முறைகேடுகள் நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், ஆள்மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட முயன்ற 30 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயோமெட்ரிக் ஊழியர்கள் 18 பேர் கைது: சரிபார்ப்பு நடை முறையில் முறைகேடு செய்து, போலித் தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களுடன் கூட்டுச் சேர்ந்ததாக பயோமெட்ரிக் சரிபார்ப்பு அமைப்பைச் சேர்ந்த 18 ஊழியர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

மருத்துவ மாணவர்கள் சிக்கினர்: அசல் தேர்வர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 10 போலித் தேர்வர்களும் பிடிபட்டனர்.

இவர்களில் பெரும்பாலான வர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், ஒரு செவிலியர் மாணவியும், ஆயுர்வேத மருத்துவம் படித்து வரும் ஒருவரும் இதில் அடங்குவர்.

இடைத்தரகர்கள் கைது

கயா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த இடைத்தரகர் அங்கித் ராஜ் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சித் குமார் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான்

இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் பிண்டாயகா பகுதியில் உள்ள தேர்வு மய்யத்தில் கண்காணிப்பாளர்கள் நடத்திய சோதனையில், பெண் தேர்வர் ஒருவர் தனது சட்டையின் அடியில் கைப்பேசியை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

பிடிபட்ட மாணவி பிரேம் நகரைச் சேர்ந்த ஹிமான்ஷி திவாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தேர்வு அறையினுள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் விடைகளைத் தேடுவதற்காக அந்த கைப்பேசியைக் கொண்டு வந்ததாக அவர் காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அந்த மாணவி நீதிமன்ற காவலில் வைக்கப்ப ட்டுள்ளார். அவரது கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது

விடைகளைத் தேடுவதற்கு மட்டுமே அந்த கைப்பேசி பயன்படுத்தப்பட்டதா அல்லது வினாத்தாள் விவரங்கள் ஏதேனும் வெளிநபர்களுக்கு அனுப்பப் பட்டதா என்பது குறித்து தடய வியல் அறிக்கை வந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

5 ஆண்டுகள் சிறை,
ரூ.10 லட்சம் அபராதம்!

முறைகேடான வழிமுறைகளைப் பயன்படுத்தித் தேர்வு எழுதியது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப் பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *