சென்னை, ஜூன் 18– தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலை மையில் நேற்று (17.6.2026) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட் டங்கள் குறித்த உயர்நிலைக் குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், போக்கு வரத்துத் துறையின் தற்போதைய நிலவரம் குறித்து முதலமைச்சரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பேருந்து இயக்கம்: 8 அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் மொத்தம் 21,527 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகள் எண்ணிக்கை: நாளொன்றுக்கு சுமார் 2.05 கோடி பயணிகள் இதன் மூலம் பயணம் செய்கின்றனர்.
கட்டணமில்லா சேவை: மொத்த பயணிகளில் 64 விழுக்காடு பேருக்கு கட்டணமில்லா பயணச் சேவை வழங்கப்படுகிறது.
கிராமப்புற இணைப்பு: தமிழ்நாட்டில் 1,000 நபர்களுக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் 98.40 விழுக்காடு அரசு பேருந்து சேவை சென்றடைந்துள்ளது.
மேலும், 8 போக்குவரத்துக் கழகங்கள், சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழ்நாடு பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்துக் கழகம் மற்றும் மோட்டார் வாகன பராமரிப்பு இயக்குநகரத்தின் செயல்பாடுகள் குறித்தும் விவரிக் கப்பட்டது.
இதனை மேம்படுத்த ஓராண்டு, மூன்றாண்டு மற்றும் அய்ந்தாண்டுக்கான சிறப்புச் செயல் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விரிவான ஆலோசனை மேற் கொண்டார்.
பயணிகளின் வசதிக்காக புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பேருந்துகளின் புறப்பாடு, வருகை மற்றும் பேருந்து நிறுத்தங்கள் ஆகியவை ஜிபிஎஸ் கருவி மூலம் இணைக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் 24×7 மணி நேரமும் செயல்படும் தகவல் மற்றும் கட்டுப்பாட்டு மய்யங்கள் அமைக்கப்பட்டு, அவை சென்னையில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மய்யத்துடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் திட்டம் குறித்து முதலமைச்சரிடம் விளக்கப்பட்டது.
கூட்டத்தின் நிறைவாக, போக்கு வரத்துத் துறையை நவீனப்படுத்த முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்:
குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள்: சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் பேருந்துகளை பெருமளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இனி புதிதாக கொள்முதல் செய்யப்படும் பேருந்துகள் குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும்.
ஸ்மார்ட் கார்டு முறை: பயணிகள் எளிதாகப் பணமில்லா பரிவர்த்தனை மூலம் பயணிக்கும் வகையில் ஸ்மார்ட் கார்டு முறையை விரைந்து அமல்படுத்த வேண்டும்.
தனி வழிப் பேருந்துத் திட்டம்: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, பேருந்து களுக்கு என்று தனி வழி ஏற்படுத்தும் ‘Bus Rapid Transit System’ (BRTS) திட்டத்தை செயலாக்க மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர் நலன்: மகளிர் மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பயணம் செய்வதை உறுதி செய்வதோடு, போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.
