மதத்துக்காரர் தன்னை ஆதரிக்கிறார் என்றால், பெரியாரின் அணுகுமுறை என்ன?
ஒரு நாள் கொள்கையைச் சொல்வது முக்கியமா?
காவி உடை அணிந்த சன்னிதானம், கருப்புடைப் பக்கத்திலே வந்து கருத்துகள் சொல்வது முக்கியமா? யாருக்கு வெற்றி?
தந்தை பெரியாரின் சிந்தனையினுடைய கூர்மை என்பது, செயலாக்கத்திேலயே பிரதிபலிக்கும்!
சென்னை, ஜூன் 18 மதத்துக்காரர் தன்னை ஆதரிக்கிறார் என்றால், பெரியாரின் அணுகுமுறை என்ன? ஒரு நாள் கொள்கையைச் சொல்வது முக்கியமா? காவி உடை அணிந்த சன்னிதானம், கருப்புடைப் பக்கத்திலே வந்து கருத்துகள் சொல்வது முக்கியமா? யாருக்கு வெற்றி? தந்தை பெரியாரின் சிந்தனையினுடைய கூர்மை என்பது, செயலாக்கத்திேலயே பிரதிபலிக்கும்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–2)
கடந்த 11.6.2026 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில், ‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–2) என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:
சாமி.சிதம்பரனாரின்
‘தமிழர் தலைவர்’ புத்தகம்!
பகுத்தறிவாளர் கழகத்தினுடைய பொதுச்செயலாளர் மானமிகு தோழர் ஆ.வெங்கடேசன் அவர்களே, தலைமை ஏற்றிருக்கக்கூடிய பெரியார் நூலக வாசகர் வட்டத்தினுடைய தலைவர் வழக்குரைஞர் தோழர் ஆ.வீரமர்த்தினி அவர்களே, இங்கே சிறப்பாகக் கலந்து கொண்டிருக்கிற ஆன்றவிழ்ந்து அடங்கிய கொள்கை சான்றோர்களாக இருக்கக்கூடிய பல்வேறு அருமைப் பெரியோர்கள், புலவர்கள், கல்வியாளர்கள், கழகப் போராளிகள் இப்படிப் பலதரப்பட்ட அறிஞர்கள் அவையில் பேசுவதிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன். எல்ேலாரையும் பார்க்கிறோம், இது ஓர் ஆய்வுச் சொற்பொழிவு என்று சாதாரணமாகப் பார்த்த நேரத்தில், கூர்மையானது என்ன? அந்தக் கூர்மை மழுங்குவதே இல்லை. அப்படிப்பட்ட ஒன்றைப் பார்க்கிற போது, திரும்பத் திரும்ப நான் பலமுறை சொன்ன கருத்துதான் இது. இந்த அவைக்கும், கேட்பாளர்களுக்கும் இது ஒன்றும் புதிதாக இருக்காது. மேலும் படிக்க படிக்க, அதாவது ‘நவில்தொறும் நூல் நயம் போலும்’ என்று சொல்கிற மாதிரி, மீண்டும் மீண்டும் படிக்க படிக்க, அந்த சுவையும், சுவையோடு அதனுடைய ஆழமும், நம்முடைய பக்குவத்தைப் பொருத்து இருக்கிறது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், சாமி.சிதம்பரனார் அவர்கள் 1939 இல் ‘தமிழர் தலைவர்’ புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதை எழுதுவதற்குக் காரணமாக இருந்தவர் யார் என்பதை நம்முடைய தமிழ் நூல் பதிப்பகம் அந்தப் புத்தகத்தில் குறித்திருப்பார்கள். தமிழர் தலைவர் புத்தகத்தைப் படிக்காதவர்கள் இருக்கமாட்டீர்கள். படிக்காத சிலரும் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்.
‘ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ்’பற்றி…
பழைய பதிப்பை விட, புதிய பதிப்புகளில் பல சேர்க்கைகளைப் பார்க்கலாம். அய்யா கருத்தைக் கேட்டவர்களும் சரி, புதிதாகக் கேட்கிறவர்களும், இனி கேட்க வேண்டியவர்கள் ஆனாலும், அது அவரவருடைய பக்குவத்தையும் பொறுத்தது. இன்று காலையில் நம்முடைய செல்வராஜ் அவர்கள் ஒரு புத்தகம் கொடுத்தார். இந்த நுண்ணறிவுக் காலத்தில், ‘ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ்’பற்றி அண்மையில் வந்திருக்கிற புத்தகம் அது. நான் காரில் பயணம் செய்யும்போது, எழுதிக் கொண்டிருப்பேன், அல்லது படித்துக் கொண்டிருப்பேன். அப்படித்தான் இந்தப் புத்தகத்தைப் படித்தபொழுது, ஒரு புதிய சொல்லாக்கத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நுண்ணறிவு என்பது ‘ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ்’ என்று சொல்கிறார்கள் பாருங்கள், அந்த நுண்ணறிவு எந்திரத்தின் மூலமாக, மிகப்பெரிய அளவுக்கு ஜிபிடி என்றெல்லாம் போடுகிறார்கள் என்றாலும், அது கருவி களால் நம்மை அச்சுறுத்தப்படக்கூடிய ஒரு செய்தி.
மனிதனுடைய மூளையில்
பயன்படுத்தப்பட்ட பகுதி மிகக் குறைவு; பயன்பட வேண்டிய பகுதி மிகமிக அதிகம்!
நாம் எல்லோரும் என்ன ஆகுமோ என்று பயப்படக்கூடிய ஒரு செய்தியாக இருக்கிறது. அதில் என்ன சொல்கிறார்கள் என்று, மிக ஆழ மாகச் சிந்தித்துப் பார்த்தோம் என்றால், ஏஅய் தொழில்நுட்பமாக இருந்தா லும், கணினியாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், மனித மூளை தான் அதற்கு அடித்தளம். மனிதனுடைய மூளையில் பயன்படுத்தப்பட்ட பகுதி மிகக் குறைவு; பயன்பட வேண்டிய பகுதி மிகமிக அதிகம். இதுதான் அறிவியலாளர்கள் சொல்லக்கூடிய ஒரு செய்தி. அப்படி அறிவியலாளர்கள் சொல்லும்போது, எனக்கு வியப்பாக இருந்தது.
மெஷின் என்னென்ன ஆபத்து செய்யுமோ என்று நினைக்கிறோம். அதில், முதல் கட்டம், இரண்டாவது கட்டம், மூன்றாவது கட்டம் என்று வரும்போது எல்லோரும் அதைப்பற்றிச் பேசுகிறார்கள். ஆனால், இப்பொழுது என்ன சொல்கிறார்கள் என்றால், ஆபத்து வராது; ஒவ்வொரு முறையும் ஓர் அறிவியல் மாற்றங்களும், வளர்ச்சியும் வரும்போது, பாதிக்கப்படத்தான் செய்யும்; அதனுடைய பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்யும். அதனால், பக்க விளைவுகளுக்கு மருந்து கொடுக்க வேண்டும். பக்க விளைவைவிட, சில நேரங்களில் மருந்து தொல்லைகளை அதிகமாக்கும், இது வழக்கமானது.
ஏஅய் + மனிதன் மூளை = ‘டூயலிசம்’ (Dualism)
ஆகவே, அப்படிப்பட்ட நிலை வரும்போது, அதற்குத் தீர்வு என்ன? என்று சொல்லும்போது, அடிப்படை மனித மூளையினுடைய சிந்திப்பு. இந்த சிந்தனையும், அந்த எந்திரங்கள் மூல மாக இப்போது செயற்கை நுண்ணறிவு வரு கிறது பாருங்கள், ஏஅய் + மனிதன் மூளை – இரண்டும் சேர்ந்தவுடன், ‘டூயலிசம்’ என்ற ஒரு வார்த்தையைப் போடுகிறார்கள். ‘டூயலிசம்’ என்றால், இரட்டை என்று அர்த்தம். அப்படி இரட்டை என்று வரும்போது, மனித மூளை அதிகமான அளவுக்கும், எந்திரங்கள் மூலமாக வேகமாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் பாருங்கள், நுண்ணறிவு செயலி. இந்த இரண்டும் இணைந்தால், ஆபத்து இல்லை.
அடித்தளம் மனித மூளைதான்!
ஆகவே, நீங்கள் என்ன கண்டுபிடித்தாலும், அடித்த ளம் எது என்று பார்த்தால், மனித மூளைதான். அந்த மூளை இருக்கிறது பாருங்கள், அதன் சிந்தனைக்களம்.
அய்யா அவர்கள், பள்ளிக்கூடத்துக்குப் போகாதவர், கல்லூரிக்குப் போகாதவர். இரண்டாவது சுய சிந்த னையாளர், ஒப்பற்ற சுய சிந்தனையாளர். பூரண பகுத்தறிவுவாதி என்கிற விளக்கத்தைத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது சொல்கிறார். ‘‘நான் ஒரு சுதந்திர மனிதன். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. நான் நினைக்கிற கருத்தை, யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். முடிவு பண்ணிவிட்டேன் என்றால், அந்த முடிவை ஏற்பாடு செய்வதற்கு, அதை செயல்படுத்துவதில் எப்படியும் நான் வெற்றி காண்பேன். இது அவருடைய சிறிய வயதிலிருந்து, வாலிப வயதிலிருந்து, வயோதிகமாக இருக்கிற வரையில், ஏன் பெரியார் வாழ்நாள் முழுவதும் முயன்று முயன்று, அவர் தோற்றதே இல்லை, வெற்றிதான் கண்டிருக்கிறார். அது சிறிய சம்பவமாக இருக்கலாம். பெரிய கிளர்ச்சியாக இருக்கலாம், போராட்டமாகக்கூட இருக்கலாம்.
‘தந்தை பெரியார் சிந்தனையின் கூர்மை’ என்பதுதான் இந்தக் கூட்டத்தினுடைய தலைப்பு.
கூர்மையாக இருப்பது மட்டுமல்ல,
சமூகத்துக்குப் பயன்படக்கூடியதாக இருக்கும்!
அந்தக் கூர்மை எப்படி வந்தது? மேலும் மேலும் அது மெருகேறிக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது நமக்கு, நம்முடைய சிந்தனையினுடைய கூர்மை வர வேண்டும். பெரியாருடைய சிந்தனை என்ற அந்தச் சாணையில் வைத்து நாம் தீட்டிக் கொண்டால், நம்முடைய சிந்தனையும் கூர்மையாக இருக்கும். கூர்மையாக இருப்பது மட்டுமல்ல, சமூகத்துக்குப் பயன்படக்கூடியதாக இருக்கும். ‘‘தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்று இருக்கக்கூடிய சின்னதோர் கடுகு உள்ளம்’’ இருக்காது!
முதல் பதிப்பினுடைய விலை ஒரு ரூபாய்!
அதுதான் மிக முக்கியம். அய்யாவுக்கு எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டது என்று சொல்லும்போது, ‘தமிழர் தலைவர்’ புத்தகத்தை நான் 20 முறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு பதிப்பையும் படித்திருக்கிறேன். முதல் பதிப்பைத் தேடிக் கண்டுபிடித்து படித்தேன். முதல் பதிப்பினுடைய விலை ஒரு ரூபாய். அந்த காலத்தில் (1939 இல்) பதிப்பிக்கப்பட்ட அந்த ஒரு ரூபாய் பதிப்பையும் பத்திரமாக வைத்திருக்கிறோம். தமிழ்நூல் நிலையம் பதிப்பகத்தார், ஆசிரியர் குருசாமி அவர்கள் தான் இப்புத்தகம் வெளியிவருவதற்குக் காரணமாக இருந்தவர். அவர் மட்டுமல்ல, அவருடைய மாமனார் சுப்பிரமணியம், குஞ்சிதம் அம்மையார், அதே மாதிரி காந்தம் அம்மையார். இந்த இருவருக்கும் தந்தையார் அவர்தான். முதன்முதலில் அவர்தான் இந்தக் கொள்கைக்கு வந்தவர். திருவாரூரைச் சேர்ந்த அவருக்கு டி.எஸ்.சுப்பிரமணியம் என்று பெயர். திருவல்லிக்கேணியில் இருந்த அவருடைய வீட்டில்தான், அய்யா தங்குவார். அவர்கள் எல்லாம் சேர்ந்துதான், ‘‘தமிழ்நூல் நிலையம்’’ என்று அதற்குப் பெயர் வைத்தார்கள். சாமி. சிதம்பரனார் தான் பெரிதும் எழுதினார். ஆற்றலாளர், கொள்கையாளர், மிகப்பெரிய ஆய்வாளர் சாமி.சிதம்பரனார் அவர்கள். இவருடைய மாணவர் யார் தெரியுமா? உங்களுக்கு வியப்பாக இருக்கும்; நம்முடைய இலக்குவனார் அவருடைய மாணவர். அது மட்டுமல்ல, ‘தமிழர் தலைவர்’ புத்தகத்தைப் பொறுத்தவரையில், இதை அடித்தளமாக வைத்துத்தான் மற்றவற்றைச் சொல்லவிருக்கின்றேன். அய்யாவைப் பார்த்து, ‘‘சுயசரிதை’’ எழுதச் சொல்கிறார்கள். ஆனால், அய்யா அவர்களுக்கு அதில் விருப்பம் இல்லை. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறச்சாலைக்குப் போய் விடுகிறார். ‘தமிழர் தலைவர்’ புத்தகத்தின் முன்னுரையில் இந்தத் தகவல்கள் இருக்கின்றன.
‘தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை!’
அதற்குப் பிறகு, சிறையிலிருந்து வெளியில் வந்த அய்யா அவர்களிடம், ‘‘அய்யா, உங்கள் வாழ்க்கை வரலாற்றில் நடைபெற்ற ஒரு சில சம்பவங்களை எழுதி இருக்கிறோம். அதைப் பார்த்துவிட்டு, திருத்தி எழுதுறீங்களா?’’ என்று கேட்டனர். தன்னுடைய சுயசரியாதையை பிறகு எழுதினார் தந்தை பெரியார் அவர்கள். ஒரே ஒரு பகுதியை எழுத ஆரம்பித்தார்; அதற்குப் பிறகு அது தொடர்ச்சி அடையவில்லை. ஆனால், ‘தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை’ என்று ஒரு புத்தகம் இருக்கிறது. அதனுடைய கையெழுத்துப் பிரதி மாளிகையில், எங்களுக்குக் கிடைத்தது. புலவர், நாங்களும் அதை மிக பத்திரமாகப் பாதுகாத்து, உடனே அதை உடனே ஒரு புத்தகமாக அச்சிடவேண்டும் என்று முடிவெடுத்தோம்.
அந்தப் புத்தகத்தில் தந்தை பெரியாரைப்பற்றி மிக விரிவாக இருக்கும். எப்படி அவர் இந்த இயக்கக் கொள்கைகளில் உறுதியானார்? வியாபாரியாக இருந்தவர், ஈரோடு வெங்கட்ட நாயக்கர் அவர்களுடைய மகன் ராமசாமி நாயக்கராக இருந்த ஒருவர், இந்தக் கருத்தில் எப்படி ஊறினார்? எது அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது? அனுபவங்கள் தான் ஒவ்வொரு முறையும் பெரியாரைச் செதுக்கி இருக்கின்றன. கொள்கைகளை உருவாக்கி இருக்கிறது.
சுயமரியாதை இயக்கத்தினுடைய வரலாறு!
இந்த நேரத்தில் ஒரு செய்தி, பல கட்சிகள் இப்போது இருக்கின்றன; கட்சி ஆரம்பிக்கிறார்கள்; கட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை. கட்சிக்கு என்ன பெயர்? இன்னும் ஆறு மாதம் கழித்து சொல்கிறேங்க. கட்சிக்கு என்ன கொள்கை? கொள்கையை அப்புறம் சொல்கிறோம். சில பேர் இப்படித்தான் கட்சி ஆரம்பித்தார்கள். ஆனால், தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தினுடைய வரலாறு, அதன் தனித்தன்மை என்னவென்றால், கொள்கைகளை முதலில் அறிவித்து, அந்தக் கொள்கைகளும் அனுபவத்தின் மீது முதிர்ந்து, முற்றி போய், பூத்துக் காய்த்து, கனிந்து, பழங்களாகத் தரப்பட்டவை. இதுதான் அதனுடைய சிறப்பு.
‘தமிழர் தலைவர்’ புத்தகத்தின் முன்னுரையில்…
‘தமிழர் தலைவர்’ புத்தகத்தில், முன்னுரை எழுதியவர் யார் என்று கேட்டால், ஆச்சரியமாக இருக்கும்.
சர் ஆர்.கே.சண்முகம் அவர்கள். ஏனென்றால், தோழர்கள் நீண்ட நாள்களுக்கு முன்னால் வாங்கிப் படித்திருப்பீர்கள், மறந்திருப்பீர்கள்; அல்லது படிப்பதற்கு பாக்கி இருக்கும். மறுபடியும் இந்தப் புதிய பதிப்பை வாங்கிப் படித்துப் பாருங்கள். புதிய பதிப்பில், நிறைய இணைப்புகள் இருக்கின்றன. புதிதாகச் சேர்த்திருக்கிறோம். அய்யாவைப்பற்றி நீதிமன்றத் தீர்ப்புகள், இணைப்புகள் இவை அத்தனையும் எடுத்துச் சொல்லும்போது, அதற்குத் தொடர்பான செய்திகள் வரும்போது, இப்புத்தகத்தின் முன்னுரையில் எழுதும்போது ஒரு செய்தி சொல்லுகிறார்,
வாயளவில் அல்லது நூலளவில் இருந்தால் போதாது;
நடைமுறையில் இருக்க வேண்டும்!
‘‘பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பற்றி அறியாத வர்கள் எவரும் இலர். ஒவ்வொரு துறையிலும் அவர் மிக முற்போக்கான கருத் துடையவர். மதத்துறையில் அவர் கருத்து மிக முற்போக்குடையது. “எல்லா மதங்களும் ஒழிந்து தீர வேண்டும். மதம் மக்களுடைய அறிவைத் தடைப்படுத்தக் கூடாது. உரிமையைப் பறிமுதல் செய்யக் கூடாது. மதத்தின் மூலம் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதற்கு இடமிருக்கக் கூடாது. மக்களனைவரும் ஒன்றென்னும் உண்மை நிலவ வேண்டும். இவை வாயளவில் அல்லது நூலளவில் இருந்தால் போதாது. நடைமுறையில் இருக்க வேண்டும். இக்கொள்கைகளுக்கு ஆதரவு தருவது மதமாயினும் சரி, அல்லது அரசியலாயினும் சரி, அல்லது வேறு எதுவாயினும் சரி, அவற்றை வரவேற்க வேண்டும்.” இக்கருத்து பெரியாருக்கு உண்டு’’ என்று முன்னுரையில் கூறப்பட்டுள்ளது.
‘‘கடவுள் மறுப்பை கொஞ்சம் நிறுத்தி வையுங்கள்’’ என்பார் தந்தை ெபரியார்!
மதத்துக்காரர் தன்னை ஆதரிக்கிறார் என்றால், பெரியாரின் அணுகுமுறை என்ன? குன்றக்குடி அடிகளார் வந்திருப்பார்; அன்றைக்கு என்ன செய்வார் என்றால், எங்களை தனியே அழைத்து, ‘‘நம்ம சன்னிதானம் வந்திருக்கு; இன்றைக்குக் கடவுள் மறுப்பை கொஞ்சம் நிறுத்தி வையுங்கள்’’ என்று சொல்வார். உடனே புதிதாக வந்திருக்கிற இளைஞராக இருந்தால், ‘‘பெரியார் தன்னுடைய கொள்கையை விட்டுட்டாரே, திடீர்னு இன்றைக்குச் சொல்ல வேண்டாம்’’ என்கிறாரே என்று நினைப்பார்.
ஒரு நாள் கொள்கையைச் சொல்வது முக்கியமா? காவி உடை அணிந்த சன்னிதானம், கருப்புடைப் பக்கத்திலே வந்து கருத்துகள் சொல்வது முக்கியமா? யாருக்கு வெற்றி? அதனால்தான், இந்தச் சிந்தனையினுடைய கூர்மை என்பது, செயலாக்கத்திேலயே பிரதிபலிக்கும். வாய் அளவில் இருந்தாலும், நூலளவில் இருந்தாலும், செயலளவில் வரவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
(தொடரும்)
