சென்னை, ஜூன் 11 தமிழ்நாடு முன்னாள் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட 7 அய்ஏஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், “மூன்றாம் நபர் எப்படி இந்த விவகாரத்தில் வழக்கு தொடர முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்து தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது.
பதவி உயர்வு வழக்கு
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பாலகிருஷ்ணன் என்பவர் பொதுநல மனு ஒன்றைத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் உதயசந்திரன் உள்ளிட்ட 7 அய்ஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
வெறும் ஊதிய உயர்வுக்காக மட்டுமே இந்த பதவி உயர்வு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பதவி உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வைக்கப்பட்ட வாதங்கள் வருமாறு:
ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, “மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக், புள்ளியியல் துறை செயலாளர் ஜெயா, சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு தொழில் மேம்பாடு துறை செயலாளர் சர்மா, நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், சர்வேயர் கட்டுப்பாடு ஜெனரல் மக்வானா, பள்ளி கல்வி துறை செயலாளர் மோகன் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு பதவி உயர்வு வழங்கியதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறவில்லை” என்பதை உறுதிப்படுத்தினார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், “இந்த பதவி உயர்வு என்பது ஒரு தற்காலிக உத்தரவுதான்” என்று விளக்கம் அளித்தார்.
நீதிபதிகளின் கேள்வி
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அய்ஏஎஸ் அதிகாரிகள் பணி மற்றும் பதவி உயர்வு தொடர்பான விவகாரத்தில், சம்பந்தமில்லாத ஒரு மூன்றாம் நபர் (Third Party) எப்படி வழக்கு தொடர முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்வது குறித்த விரிவான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கவுள்ளது என்று கூறி, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
மேல்முறையீட்டு மனுக்கள்
நிலுவையில் இருந்தால் கைதிகளுக்கு பரோல் வழங்க முடியுமா?
5 நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடக்கம்!
சென்னை, ஜூன் 11 குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட கைதிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அவர்களுக்கு பரோல் வழங்க முடியுமா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய விரிவான அமர்வு தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கைதிகளுக்கு பரோல்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள், பல்வேறு காரணங்களுக்காக தங்களுக்கு பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்குகள் ஏற்ெகனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளபோது பரோல் வழங்குவது குறித்து உயர் நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டினர். இந்தச் சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், வழக்கை தலைமை நீதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பி கடந்த 2025 நவம்பர் 19 அன்று உத்தரவிட்டனர்.
5 நீதிபதிகள் அமர்வு
இதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தலைமையில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா நீதிபதி எம்.நிர்மல்குமார் நீதிபதி சுந்தர் மோகன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய 5 பேர் கொண்ட சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது
இந்தச் சிறப்பு அமர்வு, தமிழ்நாடு தண்டனை நிறுத்திவைப்பு விதிகளின் கீழ் பின்வரும் முக்கியக் கேள்விகளுக்கு விடை காண விசாரணையைத் தொடங்கியுள்ளது:
மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, கைதிக்கு பரோல் வழங்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா?
அதே சூழலில், பரோல் வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா? முதற்கட்ட விசாரணையின் போது, மேல்முறையீடு நிலுவையில் இருந்தாலும் பரோல் வழங்க உயர் நீதிமன்றத்திற்கும், அரசுக்கும் அதிகாரம் உள்ளது என்றே அனைத்து தரப்பினரும் வாதாடினர்.
“இந்த விவகாரத்தில் ஏதேனும் மாற்று கருத்துகள் இருக்கிறதா என்பதை ஆராயவும், நீதிமன்றத்திற்கு உதவியாக இருக்கவும் ஒரு வழக்குரைஞரை நியமிக்கிறோம். என்று 5 நீதிபதிகள் அமர்வு கூறியது
இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசார ணையை வரும் ஜூன் 19-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
