சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்விக்கான காரணங்கள் தொகுதிவாரியாக 19 குழுவினர் தயார் செய்த ரகசிய அறிக்கை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

2 Min Read

சென்னை, ஜூன் 11 நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை இடங்களை பிடிக்க முடியாமல் ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, அதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய முடிவு செய்யப்பட்டது. இதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 14-ஆம் தேதி முக்கியக் குழு ஒன்றை அமைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், தலைமை நிலைய செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் என மொத்தம் 36 நிர்வாகிகளை உள்ளடக்கிய 19 குழுக்கள் இதற்காக உருவாக்கப்பட்டன.

தொகுதி வாரியான நேரடி ஆய்வு

இந்த 19 குழுக்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டன. அங்குள்ள உள்ளூர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தனித்தனியாகச் சந்தித்து, தேர்தலில் எங்கு தவறு நடந்தது என்பது குறித்த விரிவான கருத்துக்களைக் கேட்டறிந்து, தனித்தனி அறிக்கைகளாகத் தயார் செய்தனர்.

தோல்விக்கான காரணங்கள் என்ன? நிர்வாகிகள் பட்டியலிட்ட புகார்கள்

நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் நடத்திய ஆலோசனையில், தி.மு.க-வின் தோல்விக்கு பின்வரும் முக்கிய காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:

கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப் பின்மை: பல தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் தேர்தலின் போது சரிவர ஒத்துழைக்கவில்லை.

சில குறிப்பிட்ட இடங்களில் தி.மு.க-வுக் குள் இருந்த உட்கட்சிப் பிரச் சினைகளைத் தலைமை உரிய நேரத்தில் சரி செய்யவில்லை.

வெற்றி வாய்ப்புள்ள மற்றும் செல்வாக்கு மிக்க சில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காமல், புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது தோல்விக்கு வழிவகுத்தது. தகுந்த காரணமின்றி வேட்பாளர்களை மாற்றியதும் பின்னடைவை ஏற்படுத்தியது.  கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்கியதில் உள்ளூர் நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தி நிலவியது. தேர்தலின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் சரிவரப் பணியாற்றாமல் ஒதுங்கி இருந்தனர்.

19 குழுவினரும் தொகுதி வாரியாகத் தயார் செய்த இந்த இரகசிய அறிக்கையை ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் அவரிடம் முறைப்படி சமர்ப்பித்தனர்.

முக்கியப் பரிந்துரைகள்

இனிவரும் தேர்தல்களில் தி.மு.க எந்தவொரு கூட்டணியும் இன்றி தனித்தே போட்டியிட வேண்டும் என்று அடிமட்டத் தொண்டர்கள் பலமாக வலியுறுத்தியுள்ளனர்.

ஒருவேளை கூட்டணி அமைத்தால், அந்தந்த தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு உண்மையில் செல்வாக்கு இருக்கிறதா என்பதை கீழ்மட்ட அளவில் விசாரித்து அறிந்த பிறகே தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.  கட்சியைப் பலப்படுத்த தி.மு.க-வில் இனி 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் நியமிக்கப்பட வேண்டும்.

அவசர ஆலோசனை

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மற்றும் மூத்த நிர்வாகி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் கட்சியில் விரைவில் அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *