சென்னை, ஜூன் 9– தமிழ்நாட்டில் ஆகஸ்டு 1ஆம் தேதி தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு
இந்தியாவில் மக்கள் தொகை கணக் கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு கரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 2025-2026ஆம் ஆண்டு காலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன.
இந்திய வரலாற்றில், 2025-2026ஆம் ஆண்டு கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடக்கிறது. மக்கள் தங்களை பற்றிய தகவல்களை கைப்பேசி செயலி மூலம் தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது. இது தரவுகளை விரைவாக சேகரிக்கவும், துல்லியமாக பகுப்பாய்வு செய்யவும் உதவும்.
புதுச்சேரியில் தொடக்கம்
ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி, மக்கள் தொகையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுகிறது. எத்தனை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் தேவை என்பதை தீர்மானிக்க இது அவசியமாகும்.
பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. புதுச்சேரியில் கடந்த 1ஆம் தேதி முதல் இந்தப் பணிகள் ஆரம்பமாகி உள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது. மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ, 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
33 கேள்விகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 33 கேள்விகள் கேட்கப்படும். குறிப்பாக, வசிக்கும் கட்டடம் எண், வீட்டு எண், வீட்டு தரை, சுவர், கூரையின் பிரதான கட்டுமானப் பொருள், வீட்டின் பயன்பாடு, வீட்டின் நிலை, குடும்ப எண், வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை, குடும்பத் தலைவர் பெயர், தலைவரின் பாலினம், குடும்பத் தலைவரின் அட்டவணை வகுப்பு, வீட்டின் உரிமை நிலை, அறைகளின் எண்ணிக்கை, திருமணமான இணையர்களின் எண்ணிக்கை, குடிநீருக்கான முக்கியமான ஆதாரம், குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம், விளக்கு ஒளிக்கான முக்கியமான ஆதாரம், கழிப்பிட வசதி, கழிவு நீர் வெளியேற்றும் இணைப்பு, குளிக்கும் வசதி, சமையலறை வசதி மற்றும் எரிவாயு இணைப்பு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கியமான எரிபொருள், வானொலி, டிரான்சிஸ்டர், தொலைக்காட்சி, இணையதள வசதி, மடிக்கணினி, கணினி, தொலைப்பேசி, கைப்பேசி, திறனறி கைப்பேசி, சைக்கிள், ஸ்கூட்டர், மேட்டார் சைக்கிள், கார், ஜீப், வேன், முக்கியமான உணவு தானியங்கள், கைப்பேசி எண் ஆகிய 33 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் பதிவு செய்யப்படுகிறது என்று முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கூர் பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் கூறியுள்ளார்.
