சீமைக் கருவேல மரங்களை அகற்றாவிட்டால் நடவடிக்கை! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

3 Min Read

மதுரை, ஜூன் 6– சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்து மாநிலம் முழுவதும் 6 மாதங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

இதை மாவட்ட அளவில் கண்காணிக்க அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இந்த வழக்கு அதே நீதிபதிகள் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்ற வேண்டும்.

இப்பணிக்காக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஆர்டிஓ தகுதியில் உள்ள மாவட்ட அலுவலரை நியமிக்க வேண்டும். மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்காத மாவட்ட ஆட்சியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சியர் ஆஜராக உத்தரவிடப்படும்.

மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது!

தமிழ்நாடு அரசுக்கு
இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 6– இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடப்பட்ட சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டுமென வலதுசாரி அமைப்பை சேர்ந்த சிலர் வற்புறுத்தி வருகின்றனர்.

நீதிமன்றத்திலும் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். அந்த சர்வே தூணில் தீபம் ஏற்றுவதன் மூலம் அப்பகுதியில் முன்பிருந்தே இருந்து வந்த சிக்கந்தர் தர்காவை அகற்றி, மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து, மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை வரும் 22ஆம் தேதிக்குள்தெரிவிக்க வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நேற்று முன்தினம் (4.6.2026) உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய முயற்சி நமது அரசியல் சட்டத்துக்கும், மதச்சார்பற்ற விழுமியங்களுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிரானதாகும். எனவே, திருப்பரங் குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கடந்த காலத்தில் மேற்கொண்ட சரியான நிலையை இப்போதும், எதிர்காலத்திலும் உறுதியோடு முன்னெடுக்க வேண்டும்.

வலதுசாரி சார்புடைய நீதிபதிகளின் அழுத்தத்துக்கு அடிபணியாமல் திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

பணி வரன்முறை செய்யப்பட்ட
சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கு முகாம்கள்!

தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

சென்னை, ஜூன் 6– தொகுப்பூதியத்தில் பணியாற்றி பின்னர் பணி வரன்முறை செய்யப்பட்ட சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி விரைவில் அதற்கான ஆணை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 2004, 2005, 2006ஆம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 2006 ஜூன் 1 முதல் காலமுறை ஊதியத்தில் பணி வரன்முறை செய்யப்பட்டனர்.

இவ்வாறு பணி வரன்முறை செய்யப்பட்டு 2016 ஜூன் 1இல் தேர்வு நிலை, 2026 ஜூன் 1இல் சிறப்பு நிலை பெற்ற ஆசிரியர்களுக்கு உரிய ஆணை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இதை பரிசீலிக்கும் வகையில், கடந்த 1ஆம் தேதி சிறப்பு நிலை பெற்ற ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தி, அனைத்து ஆசிரியர்களுக்கும் அதற்கான ஆணை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதில் ஏதேனும் புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *