சென்னை, ஜூன் 2- காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை துணை மின் நிலையங்களுடன் இணைப்பதற்கான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கவோ, ஆவணங்களில் கையொப்பமிடவோ கூடாது என தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் பிறப்பித்துள்ள உத்தரவு, இத்துறையில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலீட்டை ஈர்க்கும் தமிழ்நாடு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான இயற்கை சூழல் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான தனியார் நிறுவனங்கள் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தியில் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து வருகின்றன.
இத்திட்டங்களைச் செயல்படுத்த, நிறுவனங்கள் முதலில் பசுமை எரிசக்தி கழகத்திடம் அனுமதி பெற்று, பின் மின் பாதுகாப்புத் துறையின் ஒப்புதலோடு மின் வாரியத்தின் மூலம் துணை மின் நிலைய இணைப்பைப் பெற வேண்டும் என்பது நடைமுறை.
திடீர் தடையால் முடங்கிய திட்டங்கள்
இந்த நிலையில், திருநெல்வேலி, உடுமலை உள்ளிட்ட பல மாவட்ட மரபுசாரா மின்சாரப் பிரிவு மேற்பார்வை பொறியாளர்களுக்கு பசுமை எரிசக்தி கழகம் ஒரு முக்கிய உத்தரவை அனுப்பியுள்ளது.
அதில், புதிய மின் இணைப்பு: விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதையும், அது தொடர்பான ஆவணங்களில் கையொப்பமிடு வதையும் தற்காலிகமாக நிறுத்தும்படி கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, ஏற்கெனவே கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து பணிகளை முடித்துள்ள முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
முதலீட்டு விவரம்: ஒரு மெகாவாட் சூரிய மின் நிலையத்திற்கு சராசரியாக $\text{Rs. 4}$ கோடியும், காற்றாலைத் திட்டத்திற்கு $\text{Rs. 7}$ கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பருவகால இழப்பு: தற்போது சூரிய ஒளி உற்பத்தி அதிகரித்துள்ள துடன், காற்றாலை பருவமும் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் மின் இணைப்பு மறுக்கப்படுவது பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
முதலீட்டாளர்கள் கவலை
“புதிய அரசு கொண்டு வரும் வெளிப்படைத்தன்மை முயற்சிகளை வரவேற்கிறோம். ஆனால், தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் விரைவாக வழங்கப்படும் என அரசு அறிவித்து வரும் நிலையில், இதுபோன்ற தடைகள் புதிய முதலீடுகளைப் பாதிக்கும்” என்று முதலீட் டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தமிழ்நாட்டின் முன்னணி நிலையைத் தக்க வைக்கவும், நிலுவையில் உள்ள மின் இணைப்பு விண்ணப்பங்கள் குறித்து அரசு விரைவில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.
