இனமானக் கேடயம் ‘விடுதலை’ 92ஆம் ஆண்டு பெரு விழா

‘சுயமரியாதைச் சுடரொளிகள்’ அ. குணசீலன் – தங்கமணி படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

 

சென்னை, ஜூன் 2 உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு, இனமானக் கேடயம், சமூகநீதியின் காப்பரணாம் ‘விடுதலை’ ஏட்டின் 92ஆம் ஆண்டு பெரு விழா – சுயமரியாதைச் சுடரொளிகள் வில்லிவாக்கம் அ. குணசீலன் – தங்கமணி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு 1.6.2026 அன்று மாலை 6.45 மணிக்கு சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் ‘விடுதலை’ பெரு விழாவின் மகிழ்வோடும், நினைவேந்தல் நிகழ்வின் நெகிழ்வோடும் சிறப்பானதொரு நிகழ்ச்சியாக நடைபெற்றது.

தமிழர் தலைவர் தலைமை

91 ஆண்டுகளை நிறைவு செய்து 92ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற ‘விடுதலை’ நாளேட்டின் 64 ஆண்டு கால ஆசிரியராகத் தொடர்ந்து தனது அயராத உழைப்பால் ‘விடுதலை’யை வளர்த்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

இந்நிகழ்விற்கு கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி, வெற்றிச்செல்வி பூங்குன்றன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில மகளிரணி துணைச் செயலாளர் வி.கே.ஆர். பெரியார்செல்வி, மாநில கழக மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

ப. திருமாவேலன் கருத்துரை

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் தலைமைச் செய்தி ஆசிரியர் எழுத்தாளர் ப. திருமாவேலன் கருத்துரையாற்றினார். அவருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புத்தகம் வழங்கிச் சிறப்புச் செய்தார்.

எழுத்தாளர் அகிலா செல்வராஜ்

அமெரிக்க பெரியார் பன்னாட்டமைப்பின் தோழர், எழுத்தாளர், “What Tree Are You” ஆங்கில நூலின் ஆசிரியருமான அகிலா செல்வராஜ் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். அவர் தமிழர் தலைவர்  விடுத்த அழைப்பினை ஏற்று உரையாற்றினார். தமிழர் தலைவரின் சோர்விலா சமூகப் பணிகளைப்பற்றி நன்றிப் பெருக்குடன் தன் உரையில் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் அகிலா செல்வராஜ் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தும், இயக்க நூல்களை வழங்கியும் பாராட்டிச் சிறப்புச் செய்தார்.

ஆசிரியர் சிறப்புரை

தொடர்ந்து நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் இனமானக்கேடயம் ‘விடுதலை’யின் 92ஆம் ஆண்டு சிறப்புகளைக் குறித்தும், சுயமரியாதைச் சுடரொளிகள் வில்லிவாக்கம் அ. குணசீலன் – தங்கமணி ஆகியோரின் உறுதிமிக்க சுயமரியாதை இயக்க நெறி வாழ்வைக் குறிப்பிட்டும்,  திராவிடர் தளபதி சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களின் 138ஆம் ஆண்டு பிறந்த நாளில் (1.6.2026) அவர் ஆற்றிய தொண்டினைப் பற்றியும் குறிப்பிட்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதினி இணைப்புரை வழங்கினார்.

படத்திறப்பு

இந்நிகழ்வில் முன்னதாக தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சுயமரியாதைச் சுடரொளிகள் வில்லிவாக்கம் அ. குணசீலன் – தங்கமணி படத்தினைத் அவர்தம் குடும்பத்தினர், கழகக் கொள்கை உறவுகள் புடைசூழத் திறந்து வைத்துப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

‘விடுதலை’ வீர வரலாற்றை விளக்கும் சிறப்பு நூல்கள்

‘விடுதலை’ களஞ்சியம் 1,2,3 தொகுதிகள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ‘‘விழுப்புண்களை ஏற்ற  ‘விடுதலை’ வீர வரலாறு’’, ‘‘விடுதலை’ ஆசிரியராக 60 ஆண்டுகள்’’ ‘‘அகவை 90இல் ஆசுிரியரின் 80 ஆண்டுப் பொதுத் தொண்டு – ஒரு தொகுப்பு’’ ஆகிய   ரூ.1840க்கு உரிய நூல்கள் ‘விடுதலை’ பெருவிழாவின் சிறப்பாக ரூ.1,500க்குத் தரப்பட்டன. தமிழர் தலைவர் ஆசிரியரிடமிருந்து தோழர்கள் வரிசையாக வந்து விலை கொடுத்து நூல்களைப் பெற்றுச் சென்றனர்.

தமிழர் தலைவருக்குப் பொன்னாடை

‘விடுதலை’ ஏட்டினை தனது உயிர் மூச்சுக்கும் மேலான தொன்றாகக் கருதி வழி நடத்தும் தமிழர் தலைவருக்கு சென்னை சார்ந்தமாவட்ட கழகங்கள் சார்பாக மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.செ. கோபால், வழக்குரைஞர் சு. குமாரதேவன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், ஆவடி மாவட்ட செயலாளர் க. இளவரசன், சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், மாவட்ட தலைவர் வேலூர் மு.பாண்டு ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர்.

திராவிடர் கழகம்

கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ. மதிவதினி ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

பங்கேற்றோர்

இந்நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன்,கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, மோகனா வீரமணி, மருத்துவர் ஆர். மீனாம்பாள், மாநில கழக மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், அச்சக மேலாளர் க.சரவணன், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில கழக கிராமப்புற பிரச்சார செயலாளர் அதிரடி அன்பழகன், நெல்லுப்பட்டு அ. இராமலிங்கம், ச. இராஜசேகரன் (S.O.), மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், புலவர் பா. வீரமணி, செல்வ மீனாட்சி சுந்தரம், பொறியாளர் த.கு. திவாகரன் மற்றும் கழகத் தோழர்கள், முக்கிய பிரமுகர்கள்  பங்கேற்றனர்.

அ. குணசீலன் –  தங்கமணி குடும்பத்தினர் 

இந்நிகழ்வில் சுயமரியாதைச் சுடரொளிகள் வில்லிவாக்கம் அ. குணசீலன் – தங்கமணி ஆகியோரின் மகள்கள் இர. ரமணி, எஸ். பொற்கொடி, பா. அறிவுமணி, மருமகன்கள் இரகுநாதன், சியாயம்சுந்தர், பார்த்திபன் மற்றும் கவுதமன், கலிங்கபாபு மகன்கள் கு. கவுதமன், கு. வீரமணி,மருமகள்கள் ஜமுனா, லதா, பெயரன்கள் அறிவுச்செல்வன், இனியவன், செம்பியன் எழிலன், பெயர்த்திகள் திவ்யா, ரம்யா, சர்மிளா, திரிதிஷா, பவித்ரா  மற்றும் உறவினர்கள் அனைவரும் கருப்புடையுடன் வந்து பங்கேற்றனர். ஏராளமான தோழர்கள் அரங்கம் நிரம்பிட இந்நிகழ்வுக்கு வந்திருந்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக அய்ரோப்பிய ஒன்றியத் தோழர் பேராசிரியர் கண்ணபிரான் ரவிசங்கர் ‘விடுதலை’ ஏட்டின் 92ஆம் ஆண்டை முன்னிட்டு எழுதி அனுப்பி வைத்தக் கவிதையை வாசித்து மாநில கழக மகளிரணித் துணைச் செயலாளர் க. இறைவி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *