சமையலறை, படுக்கையறை வேலைகளைச் செய்ய மனித வடிவ ரோபோவை அறிமுகம் செய்த சீன நிறுவனம்!

3 Min Read

சீன நிறுவனம், சமையலறை மற்றும் படுக்கையறை வேலைகளைச் செய்யக்கூடிய ‘சீலைட் எஸ்1’ என்ற புதிய மனிதவடிவ வீட்டு ரோபோவை அறிமுகப்படுத்தி உள்ளது. இது காய்கறிகளை நறுக்குவது, படுக்கையைச் சீரமைப்பது, வாஷிங் மெஷினில் துணிகளைப் போடுவது போன்ற வேலைகளைச் செய்கிறது.

இனி சமையலறையில் வெங்காயம் நறுக்கத் தேவையில்லை, வாஷிங் மெஷினில் துணி போட சோம்பேறித்தனம் பட வேண்டியதில்லை, காலையில் எழுந்து பெட்ஷீட்டை மடிக்கவும் வேண்டாம். ஆம், நாம் படங்களில் மட்டுமே பார்த்த “ரோபோட்டிக்” வாழ்க்கை நிஜமாகப்போகிறது. இதுவரை தொழிற்சாலைகளின் மூடிய கதவுகளுக்குள் பார்சல்களை பிரிப்பது, கனமான இரும்பு பாகங்களை சுமப்பது என மெக்கானிக்கலாக இயங்கி வந்த சீனாவின் மனிதவடிவ ரோபோக்கள், இப்போது நம் வீட்டுச் சமையலறை, படுக்கையறைக்குள் கால் பதிக்கத் தயாராகிவிட்டன.

சீனாவின் முன்னணி ரோபோட்டிக்ஸ் நிறுவனமான ‘கிகாஏஅய்’ (GigaAI), தனது புதிய வீட்டு உபயோக மனிதவடிவ ரோபோ மாடலான ‘சீலைட் எஸ்1’ என்பதை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான இதன் காட்சிப் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில், இந்த ரோபோ அசால்ட்டாகக் காய்கறிகளை நறுக்குவது, படுக்கையைச் சீரமைப்பது, வாஷிங் மெஷினில் துணிகளைப் போடுவது போன்ற வேலைகளைச் செய்கிறது.

இதில் என்ன சிறப்பு? பழைய ரோபோக்கள் போல ஒரே மாதிரியான முன்-திட்டமிடப்பட்ட இயக்கங்களைச் சாராமல், இந்த ரோபோக்கள் சுற்றியுள்ள சூழலைப் புரிந்துகொண்டு உடனுக்குடன் முடிவெடுக்கும் ‘எம்ஹோடிட் ஏஅய்’ (Embodied AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. அதாவது, இதற்கு “சுயபுத்தி” அதிகம். ரோபோட்டிக்ஸ் இன்ஜினியர்களுக்குத் தொழிற்சாலைகளில் ரோபோக்களை வேலை செய்ய வைப்பது மிகவும் எளிது. ஏனெனில் அங்கு பொருட்கள் ஒரே இடத்தில் இருக்கும், பாதைகள் மாறாது.

ஆனால், நம் வீடுகள் அப்படியா? திடீரென நடுவழியில் ஒரு நாற்காலி கிடக்கலாம். குழந்தைகள் பொம்மைகளைத் தரையில் சிதறவிட்டுப் போகலாம். செல்லப் பிராணிகள் திடீரென குறுக்கே ஓடலாம். ஏன், துணிகளை மடிப்பது கூட ரோபோக்களுக்குப் பெரும் தலைவலிதான்; ஏனெனில் துணியின் மடிப்புகள் ஒவ்வொரு முறையும் மாறும். சக்கரங்கள் பொருத்தப்பட்ட அடிப்பாகம் மற்றும் 2 ரோபோ கை கொண்ட ‘சீலைட் எஸ்1’ (‘SeeLight S1’), முட்டைகளை வறுப்பது, துணிகளைக் காயப்போடுவது, ஜன்னல் திரைகளைத் திறப்பது போன்ற வேலைகளை இந்த கணிக்க முடியாத வீட்டுச் சூழலிலும் செய்யப் பழகி வருகிறது.

சீனாவில் இந்த வீட்டு உபயோக ரோபோக்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கத் தொழில்நுட்ப மோகம் மட்டுமே காரணமல்ல, அங்கு வேகமாக அதிகரித்து வரும் முதியவர்களின் மக்கள் தொகையும் முக்கியக் காரணியாகும். தனியாக வாழும் முதியவர்களுக்குத் துணிகளை எடுத்துச் செல்வது, பொருட்களை எடுத்துக் கொடுப்பது போன்ற சிறிய உதவிகள் கூட அன்றாடப் பாரத்தைக் குறைக்கும். மேலும், மருந்துகளை நினைவூட்டுவது, அவசரக்கால எச்சரிக்கைகளை அனுப்புவது மற்றும் எளிய முறையில் துணையிருப்பது போன்ற அம்சங்களையும் இந்த ரோபோக்களில் கொண்டு வர உள்ளனர். வீட்டில் குழந்தைகள் அல்லது விலங்குகள் ரோபோவின் மிக அருகில் வரும்போது, விபத்து ஏதும் ஏற்படாமல் உடனடியாகத் தன் இயக்கத்தை நிறுத்தக்கூடிய ‘அல்ட்ரா’ பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பும் இதில் உள்ளது.

விலை என்ன? எப்போது வீட்டுக்கு வரும்? விளம்பர காட்சிப் பதிவுகளில் அசத்தும் இந்த ரோபோக்கள், நிஜ வீடுகளில் தரையில் சிதறிக்கிடக்கும் சாக்ஸ்களைப் பார்த்தோ அல்லது பர்னிச்சர்கள் மாற்றப்பட்டிருந்தாலோ திணறக்கூடும். இந்த நிஜ உலகச் சிக்கல்களைத் தீர்க்க இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும். அடுத்ததாக இதன் விலை தான் அதிகம். 2027ஆம் ஆண்டிற்குள் இந்த ரோபோவின் விலையை 1,00,000 யுவானுக்கும் (11.5 லட்சம் இந்திய ரூபாய்) கீழ் குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில் இது ஆடம்பரப் பொருளாக இருந்தாலும், உற்பத்தி அதிகரிக்கும் போது சாதாரணக் குடும்பங்களின் பட்ஜெட்டுக்குள் வரும் என நம்பலாம். இந்நிறுவனம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தனது ஊழியர்களின் வீடுகளில் இதை முதற்கட்டமாகச் சோதிக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டில் வூஹான் நகரில் உள்ள சாதாரணக் குடும்பங்களின் பயன்பாட்டிற்கு இதைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

எதிர்காலத்தில் நம் வீட்டு ஹாலில் ஒரு மனிதவடிவ ரோபோ நடமாடப் போவது உறுதி. ஆனால், அது ஹாலிவுட் படங்களில் வருவது போல பளபளப்பான ஷோகேஸ் பீஸாக இருக்குமா? அல்லது வீட்டின் எதார்த்தமான குழப்பங்களைச் சமாளிக்கும் திறமையான இல்லத்தரசியாக இருக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *