வருமுன்னர் காக்கத் தெரியாத அரசு, ஒன்றிய பா.ஜ.க. அரசு! தக்க பரிகாரம், ஆக்கப்பூர்வ நடவடிக்கை உடனடித் தேவை!

6 Min Read

*‘‘கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது’’ – ஒன்றிய நிதியமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்!
*கோயில் விழாக்கள் மூலம் பக்தி போதையை ஊட்டி, ‘மயக்க பிஸ்கெட்டு’களை மக்களுக்குத் தந்தால், பிரச்சினைகள் தீருமா?
பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான ரிசர்வ் வங்கியின் ‘எதிர்பாரா இடர் நிதி’ இருப்பு 7.5 சதவிகிதத்திலிருந்து 6.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது!

‘‘கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது’’ – ஒன்றிய நிதியமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்! கோயில் விழாக்கள் மூலம் பக்தி போதையை ஊட்டி, ‘மயக்க பிஸ்கெட்டு’களை மக்களுக்குத் தந்தால், பிரச்சினைகள் தீருமா?  பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான ரிசர்வ் வங்கியின் ‘எதிர்பாரா இடர் நிதி’ இருப்பு 7.5 சதவிகிதத்திலிருந்து 6.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது! வருமுன்னர் காக்கத் தெரியாத அரசு, ஒன்றிய பா.ஜ.க. அரசு!  தக்கப் பரிகாரம், ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நடுத்தர மக்களுக்கும், ஏழை, எளிய விவசாய மக்களுக்கும் தற்போது அன்றாட வாழ்வில் ஏற்பட்டு வரும் வேதனை மிக்க சோதனைகள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஒரு நித்திய சோகப் படலமாக உள்ளன.

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஒன்றியத்தில் ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க.!

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னால் பிரதமர் மோடி தலைமையில் அமைந்த ஆட்சி, ‘ஜூம்லாக்கள்’ என்று அவர்களே ஒப்புக்கொண்ட பொய்யான வாக்கு றுதிகளைக் கூறி, பிடிக்கப்பட்ட ஆட்சி! அதற்கடுத்து அரசு அமைப்புகளையே ஆளுங்கட்சி வயப்படுத்திய நிலையில், அதன் பின்னர் நடந்த இரண்டு தேர்தல்க ளின்போது, ‘‘வளர்ச்சி’’ என்றும், ‘‘எம் ஆட்சிதான் அமிர்தகால ஆட்சி’’ என்றெல்லாம் ஓயாது பரப்புரை செய்தனர். ஊடகங்கள், கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் கருவிகளாகப் பெரிதும் அமைந்துவிட்டதையும், அதிகமான தேர்தல் நிதி முதலிய வாய்ப்புகளையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனர்.  மூன்றாம் முறை பா.ஜ.க. பெரும்பான்மை பெற முடியாத நிலையில், ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகளின் (சந்திரபாபு நாயுடுவின், தெலுங்குதேசம், நிதிஷ்குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம்) ஆதரவோடு, ஒன்றியத்தில் ஆட்சியைத் தொடங்கி, சில மாதங்களிலேயே பீகார் ஆட்சியையும் தேர்தல் யுக்தி மூலம் தனதாக்கி, பா.ஜ.க. ஆட்சியை நடத்தி வருகிறது.

‘மோடி கியாரண்டி’ என்று கொடுத்த வாக்கு றுதிகள் பலவற்றில் விலைவாசி ஏற்றத்தைத் தடுத்துக் குறைப்போம் என்பதும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இருமடங்காகப் பெருக்க உதவுவோம் என்பதும், வேலையில்லா இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்பதும், மாநிலங்களிடையே ‘கூட்டுறவு கூட்டாட்சி’யுடன் செயல்படுவோம் என்பதும் என்னவாயின?

கடந்த 11 நாள்களில் 4 ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

மக்களின் அன்றாட வாழ்வில், அவர்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், எரிவாயு (கேஸ்) முதலியவற்றின் விலை, கடந்த 11 நாள்களில், 4 ஆவது முறையாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.61 முதல் 2.17 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை அடுத்தடுத்து தவணை முறையில் உயர்த்தப்பட்டு, மக்களின் துன்பம் நாளும் பெருகிவருகிறது.

இந்த 11 நாள்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.35–ம், டீசல் லிட்டருக்கு 7.53–ம் உயர்த்தப்பட்டு, மேலும் அதிகமாகிக் கொண்டே வரும் நிலைக்கு முற்றுப் புள்ளியே இல்லாத ஓர் அவலம்!

பிரதமர் மோடி ஆட்சியில், 2014 இல் பெட்ரோல் விலை ரூ.71.41 ஆக இருந்தது. இன்று (2026) அது ரூ.108.01 ஆக உள்ளது. அதாவது ரூ.36.6 காசுகள் (77 சதவிகிதம்) அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.56.71–லிருந்து, ரூ.99.98  ஆக உள்ளது. அதாவது ரூ.43.27 காசுகள்  அதிகரித்துள்ளது.

இது ஏதோ இரு சக்கரம், நான்கு சக்கர வாகனப் பயணிகளை மட்டுமே பாதிக்கும் பிரச்சினை அல்ல; பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், விவசாயிகள் உற்பத்தி தொடங்கி, சந்தையில் விற்கும் காய்கறிகள் முதல் எல்லா விலையேற்றமும் இதனால் தவிர்க்க முடியாத, விரும்ப முடியாத விளைவுகளாகும்.

ஒன்றிய நிதியமைச்சரின் ஒப்புதல்!

இதனை உரிய, தகுந்த பொருளாதார நிதிக் கொள்கைமூலம் கட்டுப்படுத்த வேண்டிய நடவ டிக்கைகளை எடுக்கவேண்டிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ‘‘கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.

விலைவாசி உயர்வினால் அழும் மக்களுடன் சேர்ந்து, அவரும் இப்படி ‘ஒப்பாரி’ வைத்தால், பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட முடியுமா?

பன்னாட்டு ரீதியில் – மேற்காசியப் போர் காரணமாக, கச்சா எண்ணெய் பீப்பாய் விலை உயர்வு காரணம் என்று முன்பு கூறினர். ஆனால், கச்சா எண்ணெயின் விலை உலகச் சந்தையில் குறைந்தபோது, அதன்மூலம் நுகர்வோர் பலனடையும் வகையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏதாவது விலை குறைத்தது உண்டா? அல்லது அரசு நிதி உதவி செய்தது உண்டா?

மாநிலங்களின் தலையில் அந்தச் சுமையைச் சுமத்தியதுதானே ஒன்றிய அரசின் நடவடிக்கையாக இருந்தது.

அதுமட்டுமல்ல, இந்த நிலைமைகளைச் சமாளிக்க, இப்போது ஒன்றிய அரசால் எடுக்கப்பட்டுள்ள மற்றொரு அதிர்ச்சியூட்டக் கூடிய ஒரு பொருளாதார – நிதித்துறை நடவடிக்கை என்ன தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கி 2025–2026 நிதியாண்டிற்காக இதுவரை இல்லாத அளவாக 287 லட்சம் கோடி ரூபாயை ஒன்றிய அரசுக்கு உபரிப் பணமாக மாற்ற முடிவு செய்துள்ளது.

‘எதிர்பாரா இடர் நிதி’ சதவிகிதம் குறைந்துள்ளது!

அவசர காலப் பாதுகாப்புக்காக பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக இந்திய ரசிர்வ் வங்கி வைத்திருக்கும் ‘எதிர்பாரா இடர் நிதி’தான் (Contingency Risk Fund) அது. இதன் இருப்பு 7.5 சதவிகிதமாக கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு 6.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது!

விதை நெல்லை எடுத்து விருந்து வைப்பது போன்ற ஒரு நிலைதான்.

மக்களை நம்ப வைத்து,
இன்று ஏமாற்றியிருக்கிறார், பிரதமர் மோடி!

போர் தொடங்கிய சில வாரங்களுக்குப் பின்புகூட, ‘‘கவலைப்பட வேண்டாம், நம்மிடம் ஏராளம் எண்ணெய் இருப்பு இருக்கிறது’’ என்ற ஒரு நம்பிக்கையைப் பரப்பியது பிரதமர் மோடி ஆட்சி! ‘அந்நியச் செலா வணியா – ஏராளம் நமது சேமிப்பில் இருக்கிறது; ரூபாய் மதிப்பு பன்னாட்டுச் சந்தையில் எவ்வளவு வீழ்ந்தாலும், நம்மைப் பாதிக்காது’’ என்றெல்லாம் கூறி,  மக்களை நம்ப வைத்து, இன்று ஏமாற்றியிருக்கிறார்!

‘‘உரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கப் பாருங்கள்!’’

‘‘பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் தனிநபர் வாகனங்களுக்குப் பதிலாக பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்!’’

‘‘அந்நியச் செலாவணியைப் பெருமளவில் சேமித்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, தங்கம் வாங்குவதை அடுத்த ஓராண்டிற்குத் தவிர்க்க வேண்டும்.’’

‘‘அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களை அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைக்கவேண்டும்.’’

‘‘நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்திய இளைஞர்களின் கடின உழைப்பில் தயாராகும் உள்நாட்டுத் (சுதேசி) தயாரிப்புகளை மட்டுமே அதிக ளவில் வாங்க வேண்டும்’’ என்ற ‘கீதோபதேசம்’தான் இதற்குச் சரியான வழியா?

இறக்குமதிகளைக் குறைத்து, ஏற்றுமதிகள்மூலம் நம் வருவாய் – அந்நியச் செலாவணிகளைப் பெருக்க என்னென்ன புதிய திட்டங்கள் உள்ளன என்பது பற்றித் தெளிவான கொள்கை விளக்கங்களோ, நடைமுறைகளோ இல்லை.

தக்க பரிகாரம், ஆக்கப்பூர்வ நடவடிக்கை
உடனடித் தேவை!

சோம்நாத் கோயில் விழாக்கள் மூலம் பக்திப் போதையை ஊட்டி, ‘மயக்க பிஸ்கெட்டு’களை மக்க ளுக்குத் தந்தால், பிரச்சினைகள் தீருமா?

வருமுன்னர் காக்கத் தெரியாத அரசு, ஓர் அரசுதானா?

தக்க பரிகாரம், ஆக்கப்பூர்வ நடவடிக்கை உடனடித் தேவை!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

27.5.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *