2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட ‘பொதுநல’ மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி அன்று தள்ளுபடி செய்துள்ளது. ‘ஜாதி குறித்த இவ்வளவு பெரிய அளவிலான தரவுகளைச் சேகரிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை; அரசியல்வாதிகளும் பெருநிறுவனங்களும் ஜாதித் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன’ என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. ஜாதியை எல்லா நிலைகளிலும் தங்களுக்கு வசதியாகப் பயன்படுத்திக் கொண்டு, ‘சான்றிதழ்களிலும், கணக்கெடுப்புகளிலும் மட்டும் ஜாதி இருக்கக் கூடாது’ என்று பேசும் பார்ப்பனியக் குயுக்தி தான் இந்த வாதத்திலும் இருந்து. இந் நிலையில் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மாலா பாக்சி, விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் அரசின் கொள்கை முடிவு என்றும், இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் கூறியுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர், எவ்வளவு பேருக்கு நலத்திட்டங்கள் தேவை என்பதை எந்த அரசும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். 2027ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஏப்ரல் 2026 முதல் செப்டம்பர் 2026 வரை வீடுகள் பட்டியல் தயாரித்தல் பணி தொடங்கி, பிப்ரவரி 2027-இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாண்டுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கடைசியாக 2011-இல் நடத்தப்பட்டது. 2020-இல், வீட்டுவசதித் தரவுகள் சேகரிக்கப்படும் இப்பணியின் முதல் கட்டத்தைத் தொடங்கவிருந்த நிலையில், கோவிட்-19 பெருந்தொற்று தாக்கியதால் அதைத் தாமதப்படுத்தப்பட வேண்டியதாயிற்று ஆனால், கோவிட் தொற்று முடிந்து பல தேர்தல்கள், பெரும் கூட்டங்கள், திருவிழாக்கள் எல்லாம் நடந்தாலும் கூட, மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு தள்ளிப் போட்டுக் கொண்டு வந்ததற்கு, அதோடு இணைத்து பா.ஜ.க. நிறைவேற்றிக் கொள்ள விரும்பிய தொகுதி மறுசீரமைப்பு, மக்கள் தொகை அடிப்படையில் தென்னிந்திய மாநிலங்களின் தொகுதியைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சூழ்ச்சிக் காரணங்கள் இருந்தன என்றாலும், ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தாமல் இருப்பது தங்கள் உயர் ஜாதி நலனைப் பாதுகாக்கப் பயன்படும் என்ற பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். கருத்தியல் நோக்கமே பிரதானம். அதற்குத் தங்களால் ஆன மட்டும் முயற்சிகளைச் செய்து பார்த்தார்கள். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர்களைப் பிரதமர் முதல் பா.ஜ.க. அமைச்சர்கள் வரை தரக் குறைவாக விமர்சித்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்தியாவில் கடைசியாக 1931-இல் தான் அனைத்து ஜாதிப் பிரிவினரின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போர் காரணமாக 1941-ஆம் ஆண்டு நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. சுதந்திர இந்தியாவில், 1951 முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கைகள் அனைத்தும் பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினரின் மக்கள்தொகையைக் குறிப்பிடும் தரவுகளை மட்டும் வெளியிட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட மற்ற சமூகங்களின் விவரங்கள் எடுக்கப்படவும் இல்லை; கொடுக்கப்படவும் இல்லை. 2011-இல் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தனியே எடுக்கப்பட்ட சமூக – பொருளாதாரக் கணக்கெடுப்புத் தரவுகள் (Secc data) முறையாக எடுக்கப்படாமல், பகுக்கப்படாமல் குழப்பத்தை ஏற்படுத்தின. ஜாதிகளின் எண்ணிக்கையே அளவிட முடியாத வகையில் (46 லட்சத்திற்கு மேல்) இருந்தது. எனவே அது வெளியிடப்படவில்லை.
இதனிடையே பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை குறித்த விவரங்கள் இல்லை என்று கூறி, இதையே வாய்ப்பாகக் கருதி, இட ஒதுக்கீடு, சமூகநீதி தொடர்பான வழக்குகள் வரும்போதெல்லாம் ‘அளவிடற்குரிய தரவு (Quantifiable Data) இருக்கிறதா? அது இல்லாமல் எப்படி இவ்வளவு ஒதுக்கீடு கேட்கிறீர்கள்’ என்றெல்லாம் கடந்த காலங்களில் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். ஆனால், தவறிப்போயும், எந்த நீதிபதியும் ‘அத்தகைய விவரங்கள் அடங்கிய ஜாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுங்கள்’ என்று எந்த ஆணையும் இடவில்லை; பரிந்துரையும் வழங்கவில்லை. இந்த விவரங்கள் இல்லாததை சமூகநீதி மறுப்புக்கான வாய்ப்பாகவே பயன்படுத்திக் கொண்டனர்.
எனினும் சமூகநீதிப் போராளிகளின் தொடர் முயற்சி தான், இந்தியா முழுவதும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை எல்லா கட்சியினரையும் உணரச் செய்தது. வேறு வழியில்லாமல், பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற தங்களுக்குச் சார்பான மாநிலங்களிலேயே எழுந்த இக்குரலை நிறைவேற்றி, தங்கள் வாக்கு வங்கியைக் காத்துக் கொள்ளவே ஒன்றிய பா.ஜ.க. அரசின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஏப்ரல்
2025-இல் கூடி, அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பதற்கு ஒப்புதல் அளித்தது.
அப்படியும் பா.ஜ.க. பல்வேறு குறுக்குச்சால்களை ஓட்டிப் பார்த்தது; கடைசியாக உச்சநீதிமன்றத்தின் கதவையும் ஒருவர் தட்டிப் பார்த்துவிட்டார். மக்கள் கருத்து முன்னே சென்றால், சட்டம் தட்டுத் தடுமாறி பின்னே வரும் என்ற முதுமொழி மீண்டும் உறுதியாகியுள்ளது.
வட புலத்திலேயே சமூகநீதிக்கான குரல் ஓங்கி வளர்ந்ததன் நல்விளைவுதான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுப்பதற்கான தடைகள் தகர்ந்திருப்பதாகும். இனியும் எந்தத் தாமதமும் இன்றி ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும். கடந்த முறை ஏற்பட்ட குழப்பங்களைப் போலன்றி, தெளிவான விவரங்கள், வரையறைகள், விளக்கங்களுடன், உச்சநீதிமன்றம் உள்ளிட்டவை எவ்வகையான விவரங்களைக் கோருகிறார்களோ, அதை வழங்கும்படியாக அந்தக் கணக்கெடுப்பு அமைய வேண்டும்.
