புதுடில்லி, மே 23 என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தகத்தில் நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய பாடத்தை தயாரிக்க உதவிய மூன்று கல்வியாளர்களுக்கு விதிக்கப்பட்ட நாடு தழுவிய தடையை உச்ச நீதிமன்றம் தளர்த்தி, புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பாடப் புத்தக சர்ச்சை
நாடு முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பாடத்திட்டங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வழங்குகிறது. கடந்த பிப்ரவரி மாதம், 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், “நீதித்துறையில் பல்வேறு மட்டங்களில் நிலவும் ஊழல்” என்ற தலைப்பில் ஒரு பாடப்பிரிவு இடம் பெற்றது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, என்.சி.இ.ஆர்.டி., நிர்வாகம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி, அந்த சர்ச்சைக்குரிய பாடப்பிரிவை உடனடியாகத் திரும்பப் பெற்றது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் 11 அன்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்: “சர்ச்சைக்குரிய பாடத்தை தயாரித்த கல்வியாளர்களான பேராசிரியர் மைக்கேல் டானினோ, சுபர்ணா திவாகம், அலோக் பிரசன்ன குமார் ஆகியோர், 8-ஆம் வகுப்பு மாணவர் களிடம் இந்திய நீதித் துறை குறித்து ஒரு எதிர்மறையான பிம்பத்தை உரு வாக்கும் நோக்கில், உண்மைகளை வேண்டுமென்றே திரித்துக் கூறியுள் ளனர்.” என்று கூறி, அவர்கள் மூவரும் நாடு முழுதும் எந்தவொரு கல்விப் பணி யிலும் ஈடுபடக் கூடாது என அதிரடி தடை விதித்தது.
உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு
இந்தத் தடையை எதிர்த்து மூன்று கல்வியாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “பாடப் புத்தகத்தின் உள்ளடக் கத்தை வரைவு செய்வதில் எந்தவொரு தனிநபருக்கும் தனிப்பட்ட அதிகாரம் இல்லை; இது பலரது பங்களிப்புடன் நடைபெறும் ஒரு கூட்டு செயல்முறை” என்று தங்களது தரப்பு விளக்கத்தை முன்வைத்தனர். இந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மார்ச் 11 அன்று பிறப்பித்த தங்களது முந்தைய உத்தரவில் சிறிய மாற்றம் செய்து தற்போது தீர்ப்பளித்துள்ளது.
புதிய உத்தரவின் விவரம்
சம்பந்தப்பட்ட மூன்று பேராசிரியர் களையும் கல்விப் பணிகளில் பயன் படுத்திக் கொள்வதா வேண்டாமா என்பது குறித்த இறுதி முடிவை: அரசு நிதி உதவி பெறும் பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள், ஆகியவற்றின் சொந்த முடிவுக்கே விட்டுவிடுவதாக உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் மீதான நேரடித் தடை நீக்கப்பட்டு, நிறுவனங்களின் முடிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
