இந்தியாவில் தற்காலத்தில் இளை ஞர்கள் சந்தித்து வரும் மிக முக்கியப் பிரச்சினைகளாக வேலைவாய்ப்பின்மை, அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவுகள் போன்றவை உருவெடுத்துள்ளன. தங்களின் எதிர்காலத்திற்காகப் போராடும் இளைஞர்களை நோக்கி, ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும், சில முக்கியத் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்தனர். குறிப்பாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே சமையலறை, உணவு மேசையை மாசுபடுத்தும் ‘கரப்பான் பூச்சிகள்’ (Cockroaches) என வேலைவாய்ப் பின்மைக்காகப் ‘போராடும் இளைஞர்களை’ ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறப்படும் கருத்து, இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஒரே நாளில் வீழ்த்தப்பட்ட பா.ஜ.க.வின் சாதனை?
இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சமூக வலைத்தள ஆர்வலரான அபிஜீத் திப்கே என்பவர் எக்ஸ் தளத்தில் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ என்ற பெயரில் ஒரு பகடிக் கணக்கைத் தொடங்கினார்.

அதிர்ச்சியூட்டும் விதமாக, இந்தக் கணக்கு தொடங்கிய ஒரே நாளில் ஒரு கோடியே 2 லட்சம் பின்தொடர்பவர்களைப் பெற்றுப் புதிய சாதனையைப் படைத்தது. உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சி என்று பா.ஜ.வினர் பெருமையுடன் கூறிக் கொள்ளும் வேளையில், அவர்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தின் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை சுமார் 88 லட்சமாக மட்டுமே இருந்தது. ஆனால், இளைஞர் களின் கோபத்தின் வெளிப்பாடாக உருவான இந்தக் கணக்கு, ஒரே நாளில் ஆளுங்கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தின் எண்ணிக்கையை முந்தியது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.
கணக்கு முடக்கம்: பின்னணி என்ன?
ஒன்றிய அரசின் இளைஞர் விரோதப் போக்குகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் தேர்வு முறைகேடுகள் குறித்த விமர்சனங்களை இந்தக் கணக்கு தொடர்ந்து நெட்டிசன்களிடையே கொண்டு சேர்த்தது. இதனால், இந்தத் தளம் இளைஞர்கள் மத்தியில் காட்டுத்தீ போல வேகமாகப் பரவத் தொடங்கியது.
ஆளுங்கட்சிக்கு இணையாகவும், இளைஞர்களின் குரலாகவும் உருவெடுத்த இந்தக் (‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’) (‘Cockroach Janta Party’) கணக்கு தற்போது திடீரெனத் தடை செய்யப்பட்டு முடக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அரசின் மீதான விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அதிகார பலத்தைப் பயன்படுத்தி இந்தக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகப் போராட்டக் குழுவினரும் சமூக வலைத்தளப் பயனர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தக் கணக்கு முடக்கப்பட்டாலும், வேலைவாய்ப்பிற்காகப் போராடும் இளைஞர்களின் குரலை நசுக்க முடியாது என்று சமூக வலைத்தளங்களில் புதிய விவாதங்கள் கிளம்பியுள்ளன.
