ஆடத்தெரியாதவனின் ‘மேடை கோணல்’ சாக்கு: மோடி அரசின் நிதி நிர்வாகத் தோல்விகளும், பொருளாதாரச் சரிவும்!- பாணன்

8 Min Read

ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றான்” என்ற தமிழ் நாட்டார் பழமொழி, தன் குறையை மறைக்கப் பிறர் மீது பழி போடும் மோடியின் ஏமாற்றும் வித்தையைச் சுட்டுகிறது. ஒரு நாட்டின் நிர்வாகத்திற்கும் இது மிகத் துல்லியமாகப் பொருந்தும். கடந்த 12 ஆண்டுகால இந்தியப் பொருளாதாரப் போக்கை உற்று நோக்கினால், மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மை, ஹிந்து – முஸ்லீம், முகலாயர், மசூதி, பசு, மாட்டு மூத்திரம் இதை விட்டால் வேறு என்ன அவர்கள் உறுப்படியாக மக்களிடையே அறிமுகப்படுத்தி உள்ளனர்? கடந்த 12 ஆண்டுகளாக (2014-2026) இந்திய அரசின் நிதி நிர்வாகத்தில் தொடர்ந்து காணப்படும் பலவீனங்களை சரியாகப் பிரதிபலிக்கிறது ஜிடிபி (GDP). வளர்ச்சி, சாதனைகள் என்று மோடியின் துதிபாடும் ஊடகங்கள் வாயிலாக தம்பட்டம் அடித்தாலும், உற்பத்தித் துறை சரிவு, ஏற்றுமதி வளர்ச்சியில் நிலையற்ற தன்மை, விலைவாசி ஏற்ற இறக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவை தொடர்ந்து பெரும் சவால்களாக உள்ளன.  மோடி அரசின்  உள்நாட்டு நிர்வாகக் குளறுபடிகளையும் திட்டமிடல் தோல்விகளையும் மறைக்க, ‘ஈரான் – அமெரிக்கப் போர்ச் சூழல்’, ‘உலகளாவிய மந்தநிலை’ போன்ற வெளிக்காரணங்களை மோடி தொடர்ந்து சாக்காகக் காட்டி வருவதை நாம் காண முடிகிறது.

வெளிநாட்டுக் காரணியும்,
உள்நாட்டு யதார்த்தமும்!

பொருளாதார நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், பன்னாட்டுப் பதற்றங்களை (உதாரணமாக, ஈரான் – அமெரிக்க மோதல்கள், கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள்) காட்டி தப்பித்துக் கொள்வது மோடியின் அரசுக்கு வழக்கமாகிவிட்டது. ஆனால், வலுவான அடித்தளம் கொண்ட ஒரு பொருளாதார அமைப்பு ஈரான் போர் போன்ற சிறு சரிவுகளால் இவ்வளவு பெரிய சரிவைச் சந்திக்காது. கடந்த 12 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பலவீனமான பொருளாதார முடிவுகளே இன்றைய நிலைக்குக் காரணம் என்பதைப் புள்ளிவிவரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

தொழிற்துறை மற்றும் உற்பத்தித் துறைச் சரிவு

‘மேக் இன் இந்தியா’ போன்ற முழக்கங்கள் மூலம் கடந்த பத்தாண்டுகளாக  பல்வேறு வித்தைகள் காட்டப்பட்டாலும், கள நிலவரம் வேறாக உள்ளது.

பொருளாதார வளர்ச்சியின்
முகமூடி பின்னால் மறைந்த சரிவு

அதிகாரப்பூர்வமான தரவுகளின்படி, இந்திய ஜிடிபி வளர்ச்சி சராசரியாக 6-7 சதவீதமாக இருந்தாலும், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி ஆகியவை நிலையான வளர்ச்சியை அடையவில்லை. 2014-இல் இருந்து பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், உற்பத்தித் துறையில் பொருளாதார வளர்ச்சிக்கான பங்கு குறைந்து கொண்டே வந்தது – சுமார் 13-15 சதவீதம் அளவில் தேங்கியது.

தொழில் நிறுவனங்களில் வளர்ச்சி விகிதம் (IIP) மற்றும் தயாரிப்பு மேலான்மை ஆய்வு மய்யங்களின் தரவுகள் அடிக்கடி ஏற்ற இறக்கத்தைக் காட்டுகின்றன. 2025-இல் அமெரிக்க வரிவிகிதம் மற்றும் உலகளாவிய தேவை குறைவு காரணமாக ஏற்றுமதி சரிந்தது. தொழிற்சாலைகள் முழுத் திறனுடன் இயங்கவில்லை; பல சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டன. சிலவற்றைப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விழுங்கிவிட்டன.

இதனால், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. பணமதிப்பிழப்பு மற்றும் அவசரக்கோல ஜி.எஸ்.டி (GST) அமலாக்கத்தின் பாதிப்பிலிருந்து இந்தத் துறை இன்னும் முழுமையாக மீளவில்லை. உள்நாட்டுத் தனியார் முதலீட்டாளர்கள்  புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கத் தயங்குகின்றனர். இதனால் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் பயன்பாடு  முழு அளவை எட்டாமல் தேங்கிக் கிடக்கிறது.

ஏற்றுமதித் துறையின் தேக்கநிலை

பன்னாட்டுச் சந்தையில் இந்தியாவின் போட்டித்திறன் குறைந்து வருவதை ஏற்றுமதிப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

வர்த்தகப் பற்றாக்குறை  இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி (பொருட்கள் + சேவைகள்) சில மைல் கற்களை எட்டியதாக அரசு கூறினாலும், கச்சாப் பொருட்கள் மற்றும் மின்னணுப் பொருட்களின் இறக்குமதி மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. 2025-2026 நிதியாண்டில் மொத்த இறக்குமதி சுமார் 979 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியதால், வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து, நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை  அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது.

பொருட்கள் ஏற்றுமதி முடக்கம்: தகவல் தொழில் நுட்பச் சேவை ஏற்றுமதி ஓரளவு கைகொடுத்தாலும், வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்கும் ஜவுளி, தோல் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற பாரம்பரியப் பொருட்கள் ஏற்றுமதி பன்னாட்டளவில் போட்டிகளை எதிர்கொள்ள முடியாமல் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் இந்திய நிறுவனத் தயாரிப்புகளில் நிலையான வளர்ச்சி இல்லை; மேலும் தயாரிப்பு மூலப் பொருட்களுக்காக நாம் வெளிநாட்டு இறக்குமதியை அதிகம் சார்ந்திருப்பதால் 2025 இறுதிவரை தொடர்ந்து ஏற்றுமதி சரிவு விகிதத்தில் பதிவானது.

கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு (Inflation)

உணவுப் பொருட்கள், எரிபொருள் விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்தன. உள்நாட்டுத் தேவைக்கான உற்பத்திப் பற்றாக்குறை சில காலங்களில் 5-6 சதவீத அளவில் இருந்தது; உணவுப் பற்றாக்குறை அதிகமாக இருந்த சமயங்களில் மக்களின் வாழ்க்கைச் செலவு பெரிதும் உயர்ந்தது. ரிசர்வ் வங்கி மற்றும் அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இருந்தபோதும், அடிப்படை காரணங்களான உற்பத்தி சரிவு, இறக்குமதி சார்பு ஆகியவை தீர்க்கப்படவில்லை.

அரசாங்கம் பணவீக்கப் புள்ளிவிவரங்களை 3 சதவீதம் முதல் 4 சதவீதம் என்ற கட்டுக்குள் வைத்திருப்பதாகக் கூறினாலும், சாமான்ய மக்களின் சமையலறை யதார்த்தம் முற்றிலும் வேறானது.

உணவுப் பணவீக்கம்: பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் சில்லறை விலை நாளுக்கு நாள் விண்ணைத் தொடுகிறது.

கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் வரி: ஈரான் – அமெரிக்கப் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்வதாகக் கூறும் அரசு, பன்னாட்டுச் சந்தையில் விலை குறையும் போது அதன் பலனை மக்களுக்கு வழங்குவதில்லை. மாறாக, எரிபொருட்கள் மீது விதிக்கப் படும் கூடுதல் வரிகள் சரக்குக் போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்தி, அனைத்துப் பொருட்களின் விலையையும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாத உயரத்தில் கொண்டு நிறுத்தியுள்ளது.

வேலையின்மைப் பெருக்கம்!

இந்தியப் பொருளாதாரத்தின் மிகக் கொடிய முகமாகத் திகழ்வது இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலையின்மைப் பிரச்சினை ஆகும்.

அதிகாரபூர்வத் தரவுகள் வேலைவாய்ப்பின்மை விகிதத்தை 4.9-5.2 சதவீதம் என்று காட்டினாலும், அரசு சாரா புள்ளியியல் நிறுவனங்களின் தரவுகள் அதை 6-9 சதவீதம் வரை காட்டுகின்றன. இளைஞர்கள்  மற்றும் பட்டதாரிகளிடையே வேலையின்மை மிக அதிகம்.

அன்றாடம் ஆயிரக்கணக்கான அரசு வேலை விண்ணப்பங்கள் குவிகிறது. ஆனால், பணியமர்த்தல் மிகக் குறைவு.  இதனால் தனியார் மற்றும் ஒப்பந்த முறையில் பணிபுரியும் 90 சதவீதம் தொழிலாளர்கள் பாதுகாப்பின்றி உள்ளனர்.

நகர்ப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களின் வேலையின்மை விகிதம்  8 சதவீதத்துக்கும் அதிகமாகவே நீடிக்கிறது.

தகுதிக்கேற்ற வேலையின்மை: தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் விநியோகப் பிரதிநிதிகளாகவும் தற்காலிகத் தொழிலாளர்களாகவும் மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் அவலநிலை நீடிக்கிறது. விவசாயத் துறையை நம்பி வாழும் கிராமப்புற உழைப்பாளர்கள் நகர்ப்புற வேலைவாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் கிராமங்களுக்கே சென்று முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிதி நிர்வாகக் குறைபாடு (கடந்த 11 ஆண்டுகள்)

அரசு மற்றும் தனியார் அமைப்புகளிடமிருந்து எடுத்த புள்ளிவிவரங்களின்படி  பொருளாதார மற்றும் புள்ளியியல், வேலைவாய்ப்பு, உற்பத்தித் துறை, ஏற்றுமதி போட்டித்தன்மை, விலை நிலைத்தன்மை ஆகியவற்றில் தொடர்ச்சியான தோல்வி தெரிகிறது. இதற்கு மூல காரணம் மோடி அரசு 2016ஆம் ஆண்டு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு. அதனை அடுத்து உடனடியாகக் கொண்டுவந்த ஜிஎஸ்டி (GST) செயல்படுத்தல், கோவிட் காலத்தில் அரசின் திட்டமிடாத பொருளாதர நிர்வாகம் போன்ற முடிவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.

இப்போது ஈரான்-அமெரிக்கப் போரைக் காரணமாகக் காட்டி, எண்ணெய் இறக்குமதி ஆகியவற்றை மட்டும் குறை கூறுவது, சொந்த நிர்வாகப் பலவீனங்களை மறைக்கும் முயற்சியே. உண்மையான நிதி நிர்வாகம் என்பது உள்நாட்டு வலிமையை உருவாக்குவது – இறக்குமதி சார்பைக் குறைப்பது, தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவது.

முக்கியக் குறிப்பு: பன்னாட்டுக் காரணிகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த முடியாமல், கடன் சுமையை அதிகரித்து, உள்நாட்டு நுகர்வை முடக்கியதற்குப் பொறுப்பற்ற நிதி நிர்வாகமே முதன்மைக் காரணம்.

சாக்குப்போக்குகள் தீர்வாகாது!

“ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்” என்பது போல, உள்நாட்டுக் கொள்கைகளில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல், அமெரிக்கா மற்றும் ஈரான் விவகாரங்களை அரசு இன்னும் எத்தனை நாட்களுக்குக் காரணம் காட்டப் போகிறது?

“கடந்த வாரம் பிரதமர் அய்தராபாத்தில் பேசும் போது வீட்டிலிருந்து வேலை பாருங்கள், தங்கம் வாங்கவேண்டாம், விமானப்பயணம் வேண்டாம், சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்து அல்லது தவிர்த்துவிடுங்கள் என்று எல்லாம் ஊருக்கு உபதேசம் கூறினார்.
அதே போல் நார்வே சென்ற மோடி ‘இனி வரும் பொருளாதார சூறாவளி நமது 10 ஆண்டு உழைப்பை மண்ணாக்கி விடும்’ என்று வசனம் பேசினார்.
இதற்கு காரணமாக ஈரான் அமெரிக்க இசுரேல் போரை மட்டுமே காரணமாகக் கூறினார். ஆனால், உண்மை?”

பொருளாதாரச் சீர்குலைவிற்குப் பழியை வேறு யார்மீதும் போடலாம். ஆனால், மக்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உண்மையை அறிவார்கள். இந்தியப் பொருளாதாரம் வலுவான அடித்தளம் கொண்டது. ஆனால், திறமையான, தரவு சார்ந்த, நீண்டகால நோக்குடன் கூடிய நிர்வாகம் தேவை. வெறும் சாக்குப் போக்கால் அல்ல. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறியது பெரும் குறை.

நாட்டின் பொருளாதாரச் சரிவைச் சீரமைக்க வேண்டுமானால், வெறும் புள்ளிவிவர வித்தைகளை விடுத்து, கள நிலவரத்தை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைத் தாண்டி, அடித்தட்டு மக்களின் வாங்கும் திறனை உயர்த்துவதிலும், சிறுகுறு தொழில் துறையை மீட்டெடுப்பதிலும், உண்மையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே இந்தியா இந்த நியாயமான விமர்சனங்களில் இருந்து தப்பிக்க முடியும்.

கீழ்க்காணும் அட்டவணை கடந்த 11 ஆண்டுகால நிதி நிர்வாகத்தின் முக்கியக் குறைபாடுகளையும் அதன் விளைவுகளையும் விளக்குகிறது:

அரசாங்கத்தின் தவறான நிதி நிர்வாக நடவடிக்கை அதனால் ஏற்பட்ட நேரடிப் பொருளாதார விளைவு
பணமதிப்பிழப்பு (2016):

முறைசாரா பொருளாதாரம் மற்றும் MSME துறையின் முதுகெலும்பை முறித்தது.

சிக்கலான ஜிஎஸ்டி கட்டமைப்பு: சிறு வணிகர்களின் வரிச் சுமை அதிகரித்து, வணிக நடைமுறைகள் முடங்கின.
கார்ப்பரேட் வரிக்குறைப்பு: அரசின் வருவாய் குறைந்ததே தவிர, தனியார் முதலீடுகள் எதிர்பார்த்த அளவு பெருகவில்லை.
எரிபொருள் மீதான அதிகப்படியான வரி: தொடர் விலைவாசி உயர்வு மற்றும் சாமானிய மக்களின் வாங்கும் திறன் சரிவு.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *