தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய நாட்டின் பல மாநிலங்களிலும் பெரும் தலைவலி பிரச்சினையாகவும், மனிதர்கள், குழந்தைகள் தெருவில் நடமாடுவோர் ஆகியோரைக் கடித்துக் குதறி, அவர்களது வாழ்வுக்கு உலை வைக்கக் கூடிய ‘உயிர்ப் பிரச்சினையாக’வும் பேருரு(விஸ்வரூபம்) எடுத்துள்ளது கட்டுப்பாடற்று ஆங்காங்கு நடமாடி பேராபத்தை ஏற்படுத்தும் தெரு நாய்கள் பிரச்சினையாகும்!
இதுபற்றி உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் கொடுத்த பற்பல தீர்ப்புகளும், ஆணைகளும் சரியான தீர்வாக அமையவில்லை. சிலவற்றை நடைமுறைப்படுத்த அரசுத் துறைகளால் இயலாத நிலையும், இயன்ற துறைகளிலும்கூட பட்டியில் அடைத்தல் – நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்தல் போன்ற பலவித கருத்துரு யோசனைகளும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளும், செயல்களும் சரியாக எதிர்பார்த்த பலன்களைத் தரவே இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது – தெரிகிறது.
இதற்கிடையே தெருவிலும், வீட்டிலும் விளையாடிய குழந்தைகள் – பிறந்து சில வாரங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகளின் உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வேதனையான நிகழ்வுகள் தெருநாய் பட்டாளங்களால் தொடர் நிகழ்வுகளாகவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தொடர்ந்து கொண்டே உள்ளன. முன்பு நீதிமன்றங்கள் கூறிய யோசனைகள் முற்றும் தோல்வி என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகளே உணர்ந்து அலுத்த நிலையில், தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்யலாம் என்று ஆணையிட்டு இருப்பதை நாம் வரவேற்கிறோம்.
பிராணிகள் நல வாரியங்கள் உடனே ‘ஆகா ஊகா’ என்று பதற்றப்படலாம்!
அவர்கள் முன்பு உள்ள கேள்வி மனித உயிர்கள் – பச்சிளங் குழந்தைகள் பாதுகாப்பு – தெருவில் நடமாடி கடைவீதி, காய்கறி வாங்கச் செல்லும் வீட்டுத் தாய்மார்கள், பள்ளிகளில் விளையாடும் மாணவர்கள் – இவர்களின் பாதுகாப்புக்கு உயிர் உத்தரவாதத்திற்கு வேறு என்ன செய்வது?
கொசுக்கள், மூட்டைப் பூச்சுகள், கிருமிகள், ஓநாய்கள் போன்றவைகளிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்ற எதிர் நடவடிக்கையாக, சிகிச்சைகள், மருந்துகள் மூலம் ஒழிக்கும் திட்டம், மலேரியா, அம்மைக் காய்ச்சலை ஒழிக்க மருத்துவத் தீர்வாக இருக்கிறது!
ஆடு, கோழி, மாடு, பன்றி முதலிய பிராணிகள் உணவுக்குப் பகிரங்கமாக வளர்க்கப்பட்டு வெட்டுப்பட சட்டம் அனுமதிக்கும்போது, அலையும் தெரு நாய்களைக் கொல்வது எப்படித் தவறு?
Pet Animal ஆக வளர்ப்பு நாய்களை, உரிய ‘லைசென்ஸ்’சோடு வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் நாய்களை நாம் சொல்லவில்லை. அதனை உரிய முறையில் பாதுகாக்கும் பொறுப்பு அதனை வளர்க்கும் சொந்தக்காரர்களின் பொறுப்பு. அவ்வப்போது சரியான பராமரிப்புடன் வைத்துக் கொள்வதில் நம் யாருக்கும் மறுப்பு ஏதும் இல்லை.
(அதனால் பல வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்போரிடம் நடக்கும் வாய்ப் போர், அடிதடி வரும் நிலைகள் வேறு. அதைப் பற்றி இதில் குறிப்பிடத் தேவையில்லை)
எனவே கட்டுப்பாடின்றி திரியும் தெரு நாய்களைப் பிடித்து, கொல்லுதல் தான் சரியான ஒரே தீர்வு – அவசரமான தேவையான மனித குல பாதுகாப்புக்கு!
மத உணர்வுகள் என்ற பெயரில் இதில் நாய் ‘பைரவ வாகனம்’ என்றும், கோமாதாவைக் (பசு) காக்க பா.ஜ.க. ஆளும் வட மாநிலங்களில் பசுப் பாதுகாப்புப் படை (Cow vigilante) என்ற சாக்கில் ஹிந்துத்துவத்துவத்தைப் பரப்புவோர் மனிதக் கொலைகளை நியாயப்படுத்தி பசுவைப் பாதுக்கிறோம் என்று சொல்லும் நிலை போன்று, இதில் குறுக்கே கொண்டு வராமல், மனித குலத்தை பச்சிளம் பாலர் முதல் வயதான பெரியவர்கள் வரை பாதுகாப்புகாக்கப்பட இது அவசர அவசியம்.
தீராத நோயால் அவதியுறும் மனிதர்களையும்கூட அவர்கள் சம்மதத்துடன் கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றமே அனுமதித்து தீர்ப்பை அளித்துள்ளது. பொது நலன் கருதி கடினமான முடிவுகளை சில நேரங்களில் எடுக்க வேண்டியது தவிர்க்கப்பட முடியாதது.
எனவே, ஆறறிவு, பகுத்தறிவு படைத்த மனிதர்களின் வாழ்வுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு முக்கியமா? அல்லது வீதியில் திரிந்து, போவோர், வருவோரைக் கடித்துக் குதறும் நாய்களுக்குப் பாதுகாப்பு முக்கியமா?
என்பதுதான் சமூகத்தின்முன் உள்ள முக்கிய பிரச்சினை!
(கி. வீரமணி)
ஆசிரியர்
