வியப்பிற்குரிய சுயமரியாதைச் சுடரொளி ரங்கசாமி நூற்றாண்டு பெரிய காட்சி இல்லை; ஆனால் மாட்சி நிறைந்தது! (கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி)

நேற்று (18.5.2026)  சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வு பெற்ற கல்வியாளருமான பெருந்தகை கோ. ரங்கசாமி அவர்களது நூற்றாண்டு நாளாகும்.

அவர் புதுக்கோட்டையில் மிக எளிய குடும்பத்தில் பிறந்து –  கல்வியிலும்,  பெரியார் கொள்கை ஈடுபாட்டிலும் தொண்டறத்திலும் சிறந்து விளங்கியவர். தனது கல்விப் பணிக் காலத்திலும், பணி ஓய்வுக்குப் பின்பும்கூட இறுதி மூச்சடங்கும் வரை கொள்கை – இலட்சியவாதியாகவே திகழ்ந்தவர்! அவர் மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினர் பிள்ளைகள் உட்பட அனைவரையும் கொள்கைக் குடும்பமாக வளர்த்தவர். இன்றளவும் அவர்கள் திகழ்கின்றனர்.

பிள்ளைகளை நன்கு கல்வி கற்க வைத்து  மருத்துவர், பொறியியல், தணிக்கைத் துறை ஆடிட்டர்   என்று பல நிலைகளை அவர்கள் அடையும் வகையில் எல்லாம் பழுதற அவர் செய்து முடிக்க  முக்கியக் காரணியாக  அவரது அருமை வாழ்விணையர் திருமதி ராஜம் அம்மையார் அவர்களும் இருந்தார்கள்.

‘நூற்றாண்டு நாயகர்’ மானமிகு கோ. ரங்கசாமி அவர்கள் தமிழ்நாடு அரசின் கல்வித் துறையில் நீண்ட காலம் இயக்குநராக இருந்த திருமிகு நெ.து. சுந்தரவடிவேலு  அவர்கள் தொடங்கி, பல கல்வி இயக்குநர்களிடமும், தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகளுக்கு தணிக்கை அதிகாரியாகவும் பல பொறுப்புகளில் நாணயத்துடன் பணியாற்றிய செம்மல்.

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் அவர் பி.ஏ. படித்தபோது, அங்கே திராவிட மாணவர் கழகத்தை உருவாக்கிச் செயல்பட்டவர். பின்னர்     கல்வித் துறையில் இணைந்து தணிக்கை அதிகாரி, தலைமையாசிரியர் ஆன எந்த நிலையிலும் ஒழுக்கத்தோடு – எந்த புகாருக்கும் ஆளாகாமல் நேர்மையாகப் பணியாற்றியவர்.

அவர் பெரியார் கொள்கையின்மீது தனக்குள்ள  ஈர்ப்பை – மேலதிகாரிகளாக இருந்த பார்ப்பனர்களிடம் பணியாற்றிய போதுகூட மறைத்ததே கிடையாது! அவரது பலம் நாணயம் – நேர்மை – ஒழுக்கம் – துணிவு.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் அதுபோலவே நம்மிடத்திலும் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவராக ஒளிவு மறைவின்றி நடப்பவர்.

தனது வருவாய்க்குட்பட்டு வாழ்ந்த நேர்மைக்கு அவரது வாழ்விணையர் சகோதரி ராஜம் அம்மையார் முக்கிய அஸ்திவாரம் ஆவார். சில ஆண்டுகளுக்கு முன்  கரோனா காலத்தில்  (வயது 93இல்) மறைந்தார்.

அவர்கள்  இருவரும் இயக்கத்திடமும்,கொள்கை ஈடுபாட்டிலும் எனது குருதிக் குடும்பத்தினரிடமும் காட்டிய பாசமும், அன்பும் என்றும் எங்களால் மறக்க முடியாது.

கழக முக்கியத் தோழர்கள் சிலர் அதனை நன்கு அறிவர்.

எங்கள் வாழ்வின் முக்கியத் தருணத்தில் வீட்டோடு வந்து துணை நின்றவர்கள் – அதற்கு நாங்கள் என்றும் கடன்பட்டவர்கள்.

அந்த உறவு மறக்க முடியாத ஒரு பாசப் பிணைப்பு – கொள்கை உறவைத் தாண்டி, எல்லா இயக்கப் பணிகளுக்கும் பொருளாதார ரீதியாகத் தவறாமல் இயக்கத்திற்கு நிதி அளித்து ‘தந்தைபெரியாரால் வாழ்கிறோம்’ என்ற நன்றிக் கடன் செலுத்திய முன்மாதிரியானவர்.

அவரது நூற்றாண்டு விழாவை அவர்களது  பிள்ளைகள் டாக்டர் மீனாம்பாள், பொறியாளர் சாமிநாதன், ஆடிட்டர் ராமச்சந்திரன் ஆகியோரின் குடும்பத்தினர் –  ஆடம்பரமாகச் செய்யாமல் எங்கள் குடும்பம், அவர்கள் குடும்பச் சந்திப்பாகவும் அதையொட்டி பெரியார் மணியம்மை (நிகர்நிலைப்)  பல்கலைக் கழகத்தில் அவர் பெயரில் அறக்கட்டளை உருவாக்கி ஆண்டுதோறும், மாணவர்களுக்கு உதவித் தொகை  வழங்கிட நன்கொடை அளிப்பதையுமே முதன்மை ஆக்கினர். (நன்கொடைப் பட்டியல் தனியே காண்க)

சடங்கு போல் நடத்தாமல், கொள்கை விழாவாக பயனுறு வகையான எளிய விழாவாக  எங்கள் இரு குடும்பமும் ஒரு விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடியபோது, நன்கொடைகளை அளித்ததை எனது வாழ்விணையர் திருமதி மோகனாவும் – நானும், அன்புராஜ் ஆகியோரும் பெற்றுக் கொண்டு உணவுடன் முடித்து,  1½ மணி நேரம் நினைவுகளைப் பற்றி பேசி நிகழ்வை முடித்து விடை பெற்றோம்.

அவ்விரு பெருமக்களின் உறவினர்கள் எல்லாம் கொள்கை வழியிலேயே தொடர்கின்றனர்.

‘‘சுயமரியாதை வாழ்வு  என்றும் சுகவாழ்வு’’ என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு வேண்டுமா?

நன்றித் திருவிழா – பாசத் திருவிழா – கொள்கை வெற்றியின் பெரு விழா அவர்களை நினைவு போற்றிய அந்த விழா!

நூற்றாண்டு தாண்டி சுயமரியாதை இயக்கம் – திராவிட  இயக்கத்தின் வரலாற்றில் இது ஒரு பொன்னோடு – இல்லையா?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *