ஜெய்ப்பூர், மே 19 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகள் முறைகேடாக அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அதிர்ச்சித் தகவல் சிபிஅய் விசாரணையில் வெளிவந்துள்ளது.
ஒரே குடும்பத்தில் 5 பேர்
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி, ராஜஸ்தானைச் சேர்ந்த பிவால் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அய்ந்து பிள்ளைகளும் ஒரே நேரத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாகச் சமூக வலைதளத்தில் பெருமையுடன் பதிவிட்டிருந்தனர். பள்ளிப் பருவத்தில் சராசரி மதிப்பெண்களை மட்டுமே பெற்றிருந்த இந்த மாணவர்கள், நீட் தேர்வில் மட்டும் அசாதாரண மதிப்பெண்களைப் பெற்றது தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்ஜன் –- 10ஆம் வகுப்பில் 86 சதவீதம் – நீட் தேர்வில் 92.53 சதவீதம் (வாரணாசி அரசு மருத்துவக் கல்லூரி); சானியா – 10ஆம் வகுப்பில் 63 சதவீதம் – நீட் தேர்வில் 94.07 சதவீதம் (மும்பை மருத்துவக் கல்லூரி); பாலக் – நீட் தேர்வில் 98.61 சதவீதம் (ஜெய்ப்பூர் மருத்துவக் கல்லூரி); பிரகதி – நீட் தேர்வில் 89 சதவீதம்; விகாஸ் பிவால் – நீட் தேர்வில் 86 சதவீதம் (சவாய் மாதோபூர் மருத்துவக் கல்லூரி).
முறைகேடாகச் சேர்ந்து சவாய் மாதோபூர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த விகாஸ் பிவால், கடந்த ஜனவரி முதல் வகுப்புகளுக்கு ஒழுங்காக வரவில்லை என்றும், கல்லூரியில் நடந்த தேர்வுகளில் வெறும் 30 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்றும் கல்லூரி முதல்வர் பி.பி.மீனா தெரிவித்துள்ளார்.
சிபிஅய் விசாரணை மற்றும்
கைது நடவடிக்கை
கைது நடவடிக்கை
இந்த வினாத்தாள் கசிவு மோசடி தொடர்பாகச் சிபிஅய் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, வினாத்தாளை சட்டவிரோதமாக விலைக்கு வாங்கித் தந்த பெரியப்பா தினேஷ் பிவால், மாங்கிலால் பிவால் மற்றும் மாணவர் விகாஸ் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். தினேஷ் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்தவுடன், ஜெய்ப்பூர் மருத் துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி பாலக் விடுதியிலிருந்து தலைமறை வாகியுள்ளார். தலைமறைவாக உள்ள சானியா மற்றும் கன்ஜன் ஆகியோ ரையும் காவல்துறையினர் தேடி வரு கின்றனர்.
ரூ.10 லட்சம்
இந்த மோசடியின் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு (2026) நடந்த தேர்விலும் ரிஷி பிவால் மற்றும் அமன் ஆகிய இரு மாணவர்களை இதே பாணியில் தேர்ச்சி பெற வைக்கப் பிவால் குடும்பத்தினர் வியூகம் வகுத்துள்ளனர்.
தனது மகன் ரிஷி பிவாலுக்காக தினேஷ் பிவால் ரூ.10 லட்சம் கொடுத்து நீட் வினாத்தாளை முன்கூட்டியே வாங்கியுள்ளார். ஆனால், வினாத்தாள் முன்கூட்டியே கிடைத்த போதிலும், ரிஷி பிவால் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 107 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துத் தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.
ரிஷி பிவால் 10ஆம் வகுப்பில் 44 சதவீதம் மதிப்பெண்களும், 2026இல் நடந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கூடுதல் கருணை மதிப்பெண்கள் உதவியுடன் வெறும் 50.80 சதவீதம் மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுத் தேர்ச்சி பெற்றவர் ஆவார். கைதான தினேஷ் பிவால் காவல்துறையினிடம் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் எனது மகள் ரிஷிக்காகவே நான் வினாத்தாளை விலைக்கு வாங்கியதாக கூறியுள்ளார்.
தற்போது தலைமறைவாக உள்ள ரிஷியையும் காவல்துறையின் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் சீகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு இந்த வினாத்தாள் கசிவுக்கான ஒருங்கிணைப்பு மையமாகச் செயல்பட்டதும், அங்கிருந்து சுமார் 150 மாணவர்களுக்கு வினாத்தாள் கசிந்திருக்கலாம் என்பதும் சிபிஅய் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சீகர் பகுதியில் உள்ள சில தனியார் பயிற்சி மய்யங்கள் இந்த மாணவர்களின் போலி வெற்றியைத் தங்களது விளம்பரத்திற்குப் பயன்படுத்தி யது குறித்தும் சிபிஅய் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முந்தைய ஆண்டுகளில் நடந்த நீட் தேர்வுகளிலும் இந்த முறைகேடு விவ காரம் சூடுபிடித்துள்ளதால் மருத்துவக் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
