‘‘பிணை என்பது விதி; சிறை என்பது விதிவிலக்கு’’

“பிணை (Bail) என்பது விதி, சிறை (Jail)  என்பது விதிவிலக்கு” எனும் கோட்பாடு, இந்தியாவின் குற்றவியல் நீதித்துறையின் மய்யமாகத் திகழ்வதுடன், ‘சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் ஒருவரது குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவரைக் குற்றமற்றவர் என்றே கருத வேண்டும்’ என்ற குற்றவியல் சட்ட நடைமுறையையும், அரசியலமைப்பின் 21-ஆவது பிரிவின் கீழ் உறுதி அளிக்கப்பட்டுள்ள தனிநபர் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையையும் வலுப்படுத்துகிறது. இந்தக் கோட்பாட்டின் வேர் ‘ராஜஸ்தான் அரசு எதிர் பால்சந்த் (1977)’ என்ற வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் உள்ளது. அதுதான் விசாரணைக்கு முந்தைய சிறைக்காவல் குறித்த சட்டரீதியான சரியான பார்வையை வழங்கியது.

அதற்குப் பின் உச்சநீதிமன்றத்தின் பல அமர்வுகள் இதனை ஏற்றுக் கொண்டுள்ளன; உறுதிப்படுத்தியுள்ளன. 2021-இல் கேரளாவைச் சேர்ந்த கே.ஏ.நஜீப் என்பவருக்குத் தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் மூன்று நீதிபதிகள் அமர்வு (நீதிபதி அனிருத்தா போஸ், சூர்ய காந்த் (தற்போதைய தலைமை நீதிபதி), என்.வி.ரமணா) வழங்கிய தீர்ப்பில், இப் பிரச்சினை தீவிரமாக விவாதிக்கப்பட்டு, ‘நெடுங்காலமாக விசாரணை தள்ளிப் போவதால், ஒருவர் சிறையிலேயே இருந்துகொண்டிருக்க வேண்டியதில்லை’ என்று தீர்ப்பு வழங்கியது. இதே போல, 2024–இல் டில்லி மேனாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா வழக்கில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விசுவநாதன் அமர்வும் அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டது.

அரசியலைமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான கே.ஏ.நஜீப் (2021) வழக்கின் தீர்ப்பைச் சில உயர்நீதிமன்றங்களும், கீழமை நீதிமன்றங்களும், சிறப்பு நீதிமன்றங்களும் மீறுகின்றன. ஏன், உச்சநீதிமன்றமுமே சில நேரங்களில் மீறுகிறது. இதனை நேற்று (18.5.2026) கண்டித்துள்ள நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புய்யன் ஆகியோரின் அமர்வு, “பெரிய அமர்வுகளின் முடிவுகளைச் சிறிய அமர்வுகள் பின்பற்றக் கடமைப்பட்டிருக்கின்றன. பெரிய அமர்வு வகுத்த கொள்கையுடன் சிறிய அமர்வுகள் உடன்பட முடியாவிட்டால், அதை இன்னும் அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வின் பரிசீலனைக்கு வைக்குமாறு மாண்புமிகு தலைமை நீதிபதிக்கு ஒரு பரிந்துரையை அனுப்புவதே சரியான ஒரேயொரு நடவடிக்கையாகும்” என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். காஷ்மீரில் போதைப் பொருள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருக்குப் பிணை வழங்குவது தொடர்பான வழக்கில் இதனைத் தெரிவித்த இரு நீதிபதிகள் அமர்வு, டில்லி கலவர வழக்கில் நீண்ட காலமாகப் பிணை மறுக்கப்பட்டு வரும் உமர் காலித், சர்ஜீல் இமாம் ஆகிய இரு இசுலாமிய இளைஞர்களுக்குக் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி, இதே உச்சநீதிமன்றத்தின் இன்னொரு அமர்வு (நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி.அஞ்ஜாரியா) பிணை மறுத்ததுடன், மேலும் ஓர் ஆண்டுக்குப் பிணை கோரி மனு தாக்கல் செய்யவும் தடை விதித்த தீர்ப்பைக் குறித்து சட்டவிளக்கமும் அளித்துள்ளது நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புய்யன் அமர்வு.

உபா (UAPA) சட்டத்தின் 43 டி (5) பிரிவானாலும், அதுவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21, 22 ஆகிய கூறுகளை மீறி இருக்க முடியாது என்பதையும் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளனர். மனிதநேயத்தின் அடிப்படையும், குற்றவியல் நடைமுறைகளில் குடிமக்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உரிமையின் அடிப்படையும் மாற்றப்படக் கூடாது என்பதை நேற்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

பிணை மறுக்கப்படுவது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கடந்த 2024-ஆம் ஆண்டு பல அறிக்கைகளின் வாயிலாக மிக முக்கியமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.    ‘‘குற்றம் சுமத்தப்பட்டோரின் பிணை (ஜாமீன்) என்பதே உரிமை!  சிறை என்பது அதற்கான விதிவிலக்கு போன்றதே! பல வழக்குகளில், வழக்கு தாக்கல் செய்யும் அரசு தரப்பில் கூறப்படும் வாதங்களைக் கேட்டு, அதன்படி பிணை உரிமையை (Right to get bail) பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுப்பது, அதுவும் ‘தொடர்ந்து மறுப்பது’ சரியானதல்ல.

முந்தைய பல தீர்ப்புகளில் கீழமை நீதிமன்றங்களில் ‘‘மெக்கானிக்கலாக‘‘ (மனதை ஆழ்ந்து செலுத்திப் பாராமல்) பிணை மறுப்பது கூடாது என்ற எச்சரிக்கை ஆணையை, உச்சநீதிமன்றம் தந்துள்ளது – இது மனிதச் சுதந்திரக் காப்பின் முக்கியத்துவம் வாய்ந்த முத்திரை தீர்ப்பு.

அருள்கூர்ந்து இதனை நடைமுறைப்படுத்தி – அரசியல் பழிவாங்கும் வழக்குகளில் சிறையில் வாடுவோர் – அதன் தன்மைகளை நடுநிலையோடு ஆராய்ந்து சரியாகப் பயன்படுத்திடவேண்டும்.

‘நிரபராதிகள் தண்டிக்கப்படவே கூடாது – குற்றவாளிகள் தப்பினாலும்கூட’ என்பதுதானே, கிரிமினல் சட்டத்தின் முக்கிய கோட்பாடு! நியாயங்கள் நிலைக்கட்டும்!” (விடுதலை, 10.8.2024) என்று தெரிவித்திருந்த கருத்து அனைவராலும் கருதிப்பார்க்கத் தக்கதாகும்.

உபா உள்பட எந்தவொரு சட்டமும், இன்னொரு சட்டத்தைவிட உயர்ந்ததல்ல; தீவிரமானதல்ல. ஆனால் அனைத்துச் சட்டங்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவையே ஆகும். தனி மனிதரின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 21இன் பலன், சட்டப்படி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரிரு வழக்குகளுக்கானது அல்ல.; பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்குமானதாக விரிவடைய வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *