மேற்கு வங்க தேர்தல்: பிஜேபியின் தில்லுமுல்லும் நீதிபதி விலகலும்!

3 Min Read

மேற்கு வங்க மாநிலத்தின் வாக்காளர் அடையாளப் பதிவேடு தொடர்பான மேல்முறையீடுகளை விசாரிக்கும் சிறப்புத் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியிலிருந்து, கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் திடீரென விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், கடந்த 22 நாள்களில் மட்டும் 1,777 மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து உத்தரவிட்டுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அவர் ஒரு மனுவைக் கூட நிராகரிக்கவில்லை.

பராக்கா தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது மகதாப் ஷேக்கின் வாக்குரிமை மீட்பு, புகழ்பெற்ற ஓவியர் நந்தலால் போஸின் பேரன் மற்றும் அவரது மனைவியின் வாக்குரிமையை உறுதி செய்தது, ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ அமைப்பைச் சேர்ந்த 30 கன்னியாஸ்திரிகள் வாக்களிக்க அனுமதி வழங்கியது அவற்றில் குறிப்பிடத்தக்கதாகும்.

தனது பதவி விலகல் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ள நீதிபதி சிவஞானம், தற்போதைய நடைமுறையில் உள்ள சவால்களைப் பட்டியலிட்டுள்ளார்.

அதிகப்படியான பணிச்சுமை: “தற்போதுள்ள வேகத்தில் செயல்பட்டாலும், கொல்கத்தா பகுதியில் உள்ள மனுக்களை மட்டும் முடிக்க 4 ஆண்டுகள் ஆகும். இன்னும் 1 லட்சம் மனுக்கள் நிலுவையில் உள்ளன.”

தொழில்நுட்பச் சிக்கல்கள்: “இணைய வழியில் வார்த்தைக் கட்டுப்பாடுகள் இருப்பதால், விரிவான உத்தரவுகளைப் பிறப்பிக்க முடிவதில்லை. இதனால் 4 அல்லது 5 வரிகளில் மட்டுமே தீர்ப்புகளை வழங்க வேண்டிய சூழல் உள்ளது.”

“தினமும் காலை 8:30 முதல் மாலை 5 மணி வரை பணியாற்றியதோடு, ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊழியர்கள் இன்றி வழக்குகளை முடித்து வந்தேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

மாநில அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்ததாகவும் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்ப ரீதியான தடைகள் மற்றும் கால அவகாசம் கருதி இப்பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சுஜாய் பால் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத் தேர்தல் நடைமுறைகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை திட்டமிட்டுப் பறிக்கப்பட்டிருப்பதாகவும் எழுந்துள்ள புகார்கள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வாக்காளர் பட்டியல் சீராய்வு தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆய்வு செய்த நீதிபதி திரு. சிவஞானம், அதிரடியான சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த ஆயிரக்கணக்கான வாக்காளர் சீராய்வு மனுக்களும் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டதில், அந்த மனுக்கள் அனைத்துமே சரியானவை என்றும், அவர்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, மேற்கு வங்கத்தில் சுமார் 50 லட்சம் வாக்காளர்களின் மனுக்கள் சீராய்வு பட்டியலில் (Review List) வைக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள இந்த வாக்காளர்களைத் திட்டமிட்டுத் தேர்தல் நடைமுறையிலிருந்து ஒதுக்கி வைத்ததன் மூலம், அவர்களின் ஜனநாயகக் கடமை தடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

பாஜகவின் வெற்றிக்குச் சாதகமாகச் செயல்படும் நோக்கில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மறைமுக உதவியுடன் இந்தத் தந்திரமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

தகுதியான வாக்காளர்களைப் பட்டியலில் சேர்க்காமல் தவிர்த்தது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் தேர்தல் முடிவுகளைச் சாதகமாக்கியது போன்ற குற்றச்சாட்டுகள் நீதிபதியின் இந்த அறிக்கைக்குப் பிறகு வலுப்பெற்றுள்ளன.

“மக்களாட்சியின் முதுகெலும்பான வாக்குரிமையில் இத்தகைய முறைகேடுகள் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது” என அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தகுதி யுள்ள 50 லட்சம் வாக்காளர்களின் மனுக்கள் நிலுவையில் இருக்கும் போதே தேர்தல் நடத்தப்பட்டு வெற்றி அறிவிக்கப்பட்டது, அந்த வெற்றியின் நம்பகத்தன்மையையே கேள்விக் குறியாக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த விவகாரம் குறித்துத் தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து முறையான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நீதிபதி திரு. சிவஞானம் பதவியில் இருந்து விலகி கொல்கத்தாவிலிருந்து தனது சொந்த ஊரான சென்னைக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதீய ஜனதா கட்சி என்றால் பாசிசத்தின் புதிய பெயர் என்பதை இப்போதாவது நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தன்னதிகாரம் படைத்த அத்தனை அமைப்புகளையும் தன்கைக்குள் போட்டுக் கொண்டு, எந்த எல்லைக்கும் செல்ல சட்ட விரோத, நியாய விரோத, அரசமைப்புச் சட்ட விரோத செயல்களில் கூச்ச நாச்சமின்றி செயல்பட்டு வருவதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ளத் தவறினால், அதன் பாரதூர கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – எச்சரிக்கை! எச்சரிக்கை!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *