தி.மு.க. தலைவரின் ஜனநாயகக் குரல்! தமிழ்நாட்டில் புதிய அரசு அமைய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு ஆளுநருக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

2 Min Read

சென்னை, மே.9–  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (8.5.2026) வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாட்டில் கடந்த மாதம்
23–ஆம் தேதி சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்றது.

நான்கு முனைப் போட்டியாக நடந்து முடிந்த சட்டமன்றத்  தேர்தலின் வாக்குகள் இம்மாதம் 4–ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் விஜய் கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று அதிக இடங்களை பெற்ற கட்சியாக இருந்தது. ஆனாலும் அக்கட்சிக்கு அறுதி பெரும்பான்மை (118) கிடைக்காத காரணத்தால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க தம்மை அனுமதிக்க வேண்டும் என்றும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன் என்றும் குறிப்பிட்டு, ஜோசப் விஜய் தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை சந்தித்து கடிதம் கொடுத்தார்.

கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆளுநர், மெஜாரிட்டியான 118 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் பட்டியல் கொடுத்தால்தான் ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என்று விஜயை மறுநாள் நேரில் அழைத்து தெரிவித்தார்.

இதற்கிடையே வேறு சில கட்சிகளின் ஆதரவும் தமக்கு உள்ளதாக விஜய் மீண்டும் தெரிவித்து அதற்கான பட்டியலையும் நேற்று வழங்கினார்.

மெஜாரிட்டி இல்லாவிட்டாலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும் என்று பலரும் ஆளுநருக்கு வலியுறுத்தி இருந்தனர்.

ஆனாலும் நேற்றிரவு வரை ஆட்சி அமைப்பது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் ஆளுநர் தரப்பிலிருந்து வரவில்லை.

விஜய் ஆட்சி அமைக்க தி.மு.க. குறுக்கே நிற்காது என்று திராவிட  முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாடு ஆளுநர், ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்படுத்துவதை யடுத்து,  மு.க.ஸ்டாலின் அவர்கள் புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

காலத்தின் கட்டாயம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்ெகனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து ஆளுநர் அவர்கள் ஆணை யும் பிறப்பித்து விட்டார்.

இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!

இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியலமைப்புச் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அப்பதிவில் குறிப் பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *