தென்னங்குடி பாளையம் அண்ணாதுரை!-வி.சி.வில்வம்

தேர்தலுக்கு முன்னர், “இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை”, என்கிற வரிகள் சமூக ஊடகங்களில் அதிகம் காணப்பட்ட வரிகளாகும். “அரசியல் பேசாதீர்கள்” எனச் சில இடங்களில் எழுதி வைத்திருப்பார்கள். பிரச்சினை ஏற்படும் என்பதற்காக மட்டுமல்ல; அரசியல் நமக்குத் தேவையற்றது, நாம் நம் வேலையைப் பார்ப்போம், என்கிற எண்ணத்தை ஏற்படுத்துவதே!

நமக்கான அரசியலை நாம் பேசாவிட்டால், நம் அரசியலை எதிரிகள் எடுத்துக் கொள்வார்கள் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை. அதேநேரம் வரலாறு தெரியாமல் வளர்கிறவர்கள் எவ்வளவு ஆபத்து என்பதையும் நடப்பில் பார்த்து வருகிறோம். “திராவிடம் என்ன செய்தது? பெரியார் என்ன செய்தார்? நாங்கள் உழைக்கிறோம்; நாங்கள் சாப்பிடுகிறோம்; எந்தத் தத்துவமும் எங்களுக்கு உதவவில்லை” என விவரம் போதாமலும், விளையாட்டுப் போக்கிலும் பேசி வருகிறார்கள். கருத்தியல் ரீதியாக உணர்ந்து ஒருவர் மாற வேண்டும்; காலம் தான் மாற்ற வேண்டும் என்றால் அந்தளவு காலம் போதாது. இதோ… திராவிடத் தத்துவத்தால் நான்கு தலைமுறைகள் அடைந்த நற்பயன்களைக் கீழே வாசியுங்கள்!

“ஒவ்வொரு கருப்புச் சட்டைத் தோழருக்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது” எனத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறுவார்கள். அது எவ்வளவு உண்மை என்பதை அவர்களுடன் பேசிப் பார்த்தால் தான் தெரியும். கல்லக்குறிச்சியில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு 81 வயது நிறைந்த அண்ணாதுரை வந்திருந்தார். சற்றொப்ப 9 மணி நேரம் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில், பார்வையாளராக வந்து அமர்கிறார் என்றால், எவ்வளவு ஆர்வம் இருக்கும்; கொள்கையில் எவ்வளவு ஆழம் இருக்கும்! ஞாயிறு மலருக்காகச் சந்திக்கலாமா என்றதும் மகிழ்ச்சியோடு மாடிப்படி ஏறி வந்தார்.

அய்யா, தங்கள் ஊர் எது?

ஆத்தூர் மாவட்டம், தென்னங்குடி பாளையம் எனது ஊர். அம்மா செல்லம்மாள், அப்பா வெங்கடாசலம். அந்தக் காலத்திலே எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கில வழியில் பயின்றவர் அப்பா. இருபது ஏக்கர் அளவிற்கு நிலமும் இருந்ததால் விவசாயமும் நல்ல நிலையில் இருந்தது. எங்கள் கிராமத்தில் அப்போது பள்ளிக்கூடம் இல்லை. எனவே எங்கள் அப்பா தமது சொந்த முயற்சியில், சொந்த இடத்தில் ஓராசிரியர் பள்ளியைத் தொடங்கினார். அதற்கு ஆசிரியர் வேண்டும் எனத் தேடிய போது, பெரம்பலூரில் இருந்து நல்லபெருமாள் என்பவர் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர் வந்துதான் எங்கள் குடும்பத்திற்கே திருப்புமுனை வந்தது.

என்ன திருப்புமுனை?

நல்லபெருமாள் அவர்கள் ஆசிரியராகப் பணி செய்தபோது, எங்கள் வீட்டில் கோயிலுக்குப் பூஜை செய்திருக்கிறார்கள். அப்போது எங்கள் அப்பா, நல்லபெருமாள் அவர்களைச் சாமி கும்பிட அழைத்துள்ளார்கள். அவரோ, “நான் பெரியார் இயக்கத்தில் உள்ளவன், சாமி கும்பிடமாட்டேன்”, எனக் கூற, எங்கள் அப்பாவிற்கு வியப்பு. பிறகு விவரமாகக் கேட்டு, அதன்வழி கொள்கைக்கு வந்தவர் எங்கள் அப்பா வெங்கடாசலம். எங்கள் கிராமத்தில் பீடா கடை வைத்திருந்த எஸ்.வி.பொன்னையா அவர்கள், ‘விடுதலை’ நாளிதழை விற்பனை செய்ததோடு, அவரும் பெரியார் தொண்டராக இருந்துள்ளார். அவரின் அறிமுகம் கிடைத்தவுடன், தினமும் விடுதலை வாசகர் ஆகிவிட்டார் அப்பா. திராவிடர் கழகம் எனப் பெயர் சூட்டப்பட்ட சேலம் மாநாட்டிற்கு, எங்கள் அப்பா கிராமத்தில் இருந்து 10 பேரை அழைத்துச் சென்றுள்ளார்.

உங்களுக்கு இயக்கத் தொடர்பு எப்படி வந்தது?

எங்கள் அப்பா வெறும் கொள்கையாளராக மட்டும் இல்லாமல், செயல்படக் கூடியவராகவும் இருந்ததால், இளம்வயதிலேயே எனக்கும் அந்தத் துடிப்பு வந்துவிட்டது. அப்பா படிப்பதில் ஆர்வம் உள்ளவர். அதிலும் ஒருமுறைக்கு, இருமுறை கூர்ந்து படிப்பவர். அறிஞர் அண்ணா நினைவாக எனக்கு அண்ணாதுரை எனப் பெயர் வைத்தார். அதேநேரம் இந்தப் பெயரைக் கேட்டதும் எனது பார்ப்பன ஆசிரியர் என்னை அடித்த நிகழ்வெல்லாம் உண்டு.

1949 ஆம் ஆண்டு தென்னங்குடி பாளையம் கிராமத்தில் எங்கள் அத்தைக்குச் சுயமரியாதைத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. நாவலர் நெடுஞ்செழியன், சி.பி.சிற்றரசு இருவரும் நடத்தி வைத்து, நான்கு நாட்கள் எங்கள் வீட்டிலேயே தங்கியுள்ளனர். அதேபோல ஆத்தூரில் அக்னித் திருவிழா என்பது பிரபலமானது. கோயிலில் பூக்குழி 20 அடியில் உருவாக்கினால், திராவிடர் கழகத்தினர் 22 அடி வளர்த்து, மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.‌ 1953இல் இந்நிகழ்வுப் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பகுத்தறிவு வரலாற்றின் மூலம்தான் நான் வளர்க்கப்பட்டேன்.

நீங்கள் எங்கு பணி செய்தீர்கள்?

பழைய எஸ்.எஸ்.எல்.சி. முடித்துள்ளேன். அஞ்சல் அலுவலராக அப்பமாமுத்திரம் மற்றும் தென்னங்குடி பாளையம் ஆகிய இடங்களில் ஏழு ஆண்டுகள் பணிசெய்தேன். அகில இந்திய ஊழியர்கள் சங்கப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், பணி நீக்கம் செய்யப்பட்டேன். “போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என எழுதிக் கொடுத்தால் மீண்டும் சேர்த்துக் கொள்கிறோம்”, என்றார்கள். பலரும் அப்படி எழுதிக் கொடுக்க, “போராட்டத்தில் பங்கேற்றேன்” என நான் எழுதிக் கொடுத்தேன். அதனால் வேலையில் இருந்து நீக்கினார்கள். இருப்பினும் மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் வேலையில் சேரக் கடிதம் வந்தது. ஆனால், அதை மறுத்து,  சொந்தமாகத் தொழில் செய்து, இயக்கப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தேன்.

உங்களுக்கு எத்தனைப் பிள்ளைகள்?

சேலம் பச்சைமுத்து தலைமையில் 1966 ஆண்டு எனக்குச் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு ஒரு பெண், ஒரு பையன். 1977 ஆம் ஆண்டு பெரியார் திடலில் நடைபெற்ற “பேச்சுப் பயிற்சியில்”   ஆசிரியர், பொன்முடி உள்ளிட்ட சிலர் வகுப்பெடுத்தனர். அதில் எங்கள் மகளும் கலந்து கொண்டார். அந்தப் பயிற்சியில் குரூப் 1 தேர்வுகள் குறித்தும் கூறியிருக்கிறார்கள். அதன் விளைவாக எங்கள் மகள் அந்தத் தேர்வை எழுதி, இப்போது சமூக நலத்துறையில் இயக்குநராக இருக்கிறார். பெரியார் உலகத்திற்கு நான் 40 ஆயிரமும், எனது மகள் 50 ஆயிரமும் கொடுத்துள்ளோம்.
எங்களுக்கு இரண்டு பேத்திகள். ஒருவர் மருத்துவராக இருக்கிறார். மற்றொருவர் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார்.

பரவாயில்லையே, இரண்டு பேத்திகளும் மருத்துவரா?

இப்போது மட்டுமில்லை… எங்கள் அப்பா காலத்திலேயே கல்வியால் நாங்கள் பயன் பெற்றோம். எனது அக்கா  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து, பின்னர் பொதுப்பணித் துறையில் பணியாற்றினார். சிறிது நாட்களில் அதிலிருந்தும் விலகினார். காரணம் அக்காவிற்கு மருத்துவராகும் ஆசை இருந்தது. அதற்கு வாய்ப்புக் கிடைக்காததால் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் “பிசியோதெரபி” சேர்ந்தார். அதை முடித்து 1977 ஆம் ஆண்டில் அமெரிக்கா போய்விட்டார். அங்கேயே குடியுரிமையும் பெற்றார். 2013 ஆம் ஆண்டு தான் தமிழ்நாட்டிற்கு வந்தார்.

போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளீர்களா? திராவிடர் கழகம் எப்படி செயல்படுகிறது?

பெரும்பாலான போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். குறிப்பாகக் கோயில் நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளேன். இரண்டு, மூன்று முறை சிறைக்கும் சென்றுள்ளேன்.‌ தமிழ்நாடு அளவில் நடைபெறும் பெரிய நிகழ்வுகளிலும், மாநாடுகளிலும் பங்கேற்று வருகிறேன். ஆத்தூர் ஒன்றியச் செயலாளராக இருந்து, தற்போது நகரத் தலைவராக இருக்கிறேன்.

தந்தை பெரியார் மறைந்து அரை நூற்றாண்டுகள் கழிந்தும், திராவிடர் கழகம் இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கிறது என்றால், அதற்கு ஆசிரியர் அவர்களே காரணம்! ஆசிரியரின் உழைப்பு என்பது அளவு கடந்தது.”

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *