சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026-2027 கல்வியாண்டு முதல் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வருகிறது. ஏற்ெகனவே புதுச்சேரி உள்ளிட்ட சில இடங்களில் இதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே இந்த மும்மொழிக் கொள்கை விதிகள் காரணமாகச் ‘சமஸ்கிருத’ மொழிக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வித் துறையில் மாற்றம் என்ற பெயரால் ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்குத் தீவிரம் காட்டப்படுகிறது.
குறிப்பாக, ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் பல பள்ளிகளின் தேர்வாகச் சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதுதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆங்கிலம்- தமிழ் – ஹிந்தி ஆகியவை தேர்வாக உள்ள நிலையில், பெரும்பாலான வட மாநிலங்களில் ஆங்கிலம்- ஹிந்தி- சமஸ்கிருதம் என நிலைமை மாறியுள்ளது. அதாவது வட மாநிலங்களில் இரு மொழிக் கொள்கை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பல்வேறு மொழிகள் இருந்தாலும், பெரும்பாலான ஆங்கில வழி சிபிஎஸ்இ பள்ளிகள் சமஸ்கிருதத்தையே மூன்றாவது மொழியாகத் தேர்வு செய்கின்றன. இதற்குப் பின்னால் செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு உயிரூட்டும் வேலை நடக்கிறது.அதாவது ‘ஆர்.எஸ்.எஸ். கொள்கைக்கான செயல் திட்டம்’ அரங்கேறுகிறது.
பல பள்ளிகளில் ஏற்ெகனவே 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை சமஸ்கிருதம் ஒரு பாடமாக இருந்துள்ளது. அதாவது ‘கட்டாயம்’ (Mandatory) இல்லை என்றாலும் அதை ஒரு ‘விருப்பம்’ (Option) என வைத்திருந்தனர். இப்போது 3ஆவது மொழி ‘கட்டாயம்’ என வந்தவுடன் சமஸ்கிருதமே அவர்கள் முதல் தேர்வாக இருக்கிறது. இதனால், புதிய ஆசிரியர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய அவசியம் இல்லையாம்!
தமிழ், பெங்காலி, மராத்தி அல்லது பஞ்சாபி போன்ற மொழிகளைக் கற்பிக்கப் புதிய ஆசிரியர்களைத் தேடிப் பிடிப்பது எளிதில் நடக்கக் கூடியதல்ல. ஆனால், ஹிந்தி ஆசிரியர்களே சமஸ்கிருதத்தையும் கையாள முடிவதால், அவர்களின் திட்டத்திற்கு எளிதாகிறது. என்சிஇஆர்டியின் ‘தீபகம்’ போன்ற பாடப்புத்தகங்கள் ஏற்ெகனவே பயன்பாட்டில் இருப்பதால், புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதில் சிரமம் இல்லையாம்.
இதுவரை சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற மொழிகள் அதிகம் படிக்கப்பட்டு வந்தன. ஆனால், புதிய விதிகளின்படி இவை பாடத்திட்டத்தின் பிரதானப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் இனி இந்த வெளிநாட்டு மொழிகள் கூடுதல் பாடங்களாக மட்டுமே இருக்கும். அதாவது, அந்த மொழிகளுக்குத் தனி வகுப்புகள் அல்லது மதிப்பெண்கள் பழைய அளவுக்கு இருக்காது. பன்னாட்டு வேலைவாய்ப்புகளுக்காகத் தங்கள் பிள்ளைகளைத் தயார் செய்ய நினைத்த பெற்றோருக்கு இது ஒரு பின்னடைவு என்பதில் அய்யமில்லை.
இந்தத் திடீர் மாற்றம் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் சமஸ்கிருதத்தை ஏற்றாலும் கூட பலரும், “இதுவரை ‘விருப்ப’ப் பாடமாக இருந்த ஒன்று இப்போது ‘கட்டாய’மாக்கப்பட்டுள்ளது. ‘மூன்றாவது மொழியைக் கற்கலாம்’ என்று நினைப்பவர்களில்கூட ‘இது மாணவர்களுக்குத் தேவையான மொழியாக இருக்க வேண்டும்’ என்றே கருதுவார்கள். மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கவலையாக இருக்கிறது.
‘‘ஹிந்தி, சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாகத் திணிக்கவில்லை – வேறு இந்திய மொழிகளில் ஒன்றைக் கற்கலாம்’’ என்று நாக்கில் தேன் தடவியவர்கள் இப்பொழுது எந்த இடத்திற்கு வந்து நிற்கிறார்கள் பார்த்தீர்களா?
மக்கள் நலனில் உண்மையிலே அக்கறை இருக்குமானால் – ஓர் அரசாங்கத்தின் கவலையும், அக்கறையும் நூறு விழுக்காடு கல்வி அனைவருக்கும் கிடைத்திருக்கிறதா என்பதில் கருத்தும், செயல்பாடும் இருக்க வேண்டும்.
அதைவிட்டு, இந்தியாவின் மொழிப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு ‘சமஸ்கிருதம்’ என்கிற ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கால்வால்கரின் சித்தாந்தத்தைத் திணிப்பதில் ஒன்றிய பிஜேபி அரசு மூர்க்கத்தனமாக செயல்படுமேயானால் அது இந்திய ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாகத் தான் இருக்கும் – எச்சரிக்கை!
