பழகு முகாம் நான்காம் நாள்… திருச்சிக்கு ஒருநாள் சுற்றுலா சென்று திரும்பிய பெரியார் பிஞ்சுகள் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்களுடன் மகிழ்ச்சியுடன் அளவளாவினர்!

தஞ்சை, மே 3 அய்ந்து நாட்கள் நடைபெற்ற பழகும் முகாமின் நான்காம் நாளில், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகழ்நிலைப் பல்கலைக்கழகம்) வேந்தர் கி.வீரமணி அவர்களுடன், 90 பெரியார் பிஞ்சுகள் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். உடன் பழகு முகாமின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான வீ.அன்புராஜ், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சிறீவித்யா, பல்கலைக்கழக வளாக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி சரவணன் மற்றும் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு எனாரெசு பெரியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‘பெரியார் பிஞ்சு’ மாத இதழ், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நிறுவனம் (நிகர் நிலை பல்கலைக்கழகம்) இரண்டும் இணைந்து 27.04.2026 முதல் 1.5.2026 வரையிலான 5 நாள்கள் நடத்திய, “பெரியார் பிஞ்சு” களுக்கான, பழகு முகாமின் 4 ஆம் நாளில் (30.04.2026), முழுமையாக சுற்றுலா செல்லும் நாளாக அறிவிக்கப்பட்டு, திருச்சியில் உள்ள, “அண்ணா அறிவியல் மய்யம்” மற்றும் சோழ மன்னன் கரிகாலன் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய, “கல்லணை” ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பல்கலைக்கழகத்தின் வளாக முதன்மை ஒருங்கிணைப்பாளரான ஆர்த்தி சரவணன் தலைமையில்‌ 20 க்கும் மேற்பட்டோர், கண்காணிப்பு மற்றும் பராமரிப்புக்காக பிஞ்சுகளுடன் சென்றனர்.

உடற்பயிற்சிகள்

அதிகாலையில் எழுந்து, வழக்கமான உடற்பயிற்சிகள் மற்றும் உணவுக்குப் பிறகு, காலை 9.30 மணிக்கு, திருச்சிக்கு சுற்றுலா புறப்பட்டனர். முதலில், அண்ணா அறிவியல் மய்யம் சென்றனர். அங்கு வாகனத்திலிருந்து இறங்கிய உடனே, குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, முப்பரிமாண கண்ணாடி அணிந்து கொண்டு, ‘டைனோசர்’ பற்றிய  ‘வலுத்தது வாழும்’ என்ற‌ கருத்துள்ள, அனிமேசன் குறும்படம் கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, கோளரங்கம்’ எனும் தலைப்பில், ‘விண்வெளி ஆய்வு தொடர்பான பல்வேறு தகவல்கள் அடங்கிய ஒளிப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டனர். அடுத்து, ‘விண்ணரங்கம்’ என்ற பெயருடைய  குளுமை அரங்கத்தில் நுழைந்து, பிரபஞ்சத்தின் தோற்றம்; வளர்ச்சி; இயக்கம் குறித்த வரலாற்றை தெளிவான தமிழ் மொழி விளக்கங்களுடன் 360° கோணத்தில், திரையிடல் நடத்திக் காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து ‘அறிவியல் விளையாட்டு’ (Fun Science) எனும் பெயருடைய அரங்கத்தில் நுழைந்தனர். அங்கு மூளைக்கு வேலை கொடுக்கும் பல்வேறு அறிவியல் விந்தைகளை பெரியார் பிஞ்சுகளே செயல் முறையில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அண்ணா அறிவியல் மய்யத்திலிருந்து, பெரியார் பிஞ்சுகளை வெளியே அழைத்து வருவது என்பது மிகுந்த சிரமத்துக்குரிய ஒன்றாக மாறிவிட்டது அந்த அளவுக்கு அவர்கள் அதை ரசித்து மகிழ்ந்தனர்.

கரிகாலன் கட்டிய கல்லணை

அதற்குப் பிறகு, பெரியார் பிஞ்சுகள் அங்கிருந்து திருச்சியில் இருக்கும் சோழ மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இறங்கியவுடன் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு காட்சிப்ப டுத்தப்பட்டிருந்த யானை மீது அமர்ந்திருக்கும் கரிகாலன் சிலை; அந்த அறைக்குள் இருக்கும் அந்தக் கல்லணையின் வரலாறு தொடர்பான பதிவு கள்; ஒளிப்படங்கள்; ஓவியங்கள் ஆகியவற்றை கண்டுகளித்தனர். இறுதியாக கரிகாலன் சிலைக்கு முன்பாக ஒரு குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். 3:30 மணிக்கு, அங்கிருந்து புறப்பட்டு மறுபடியும் பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 4:30 மணிக்கு, பல்கலைக்கழகத்தில் இறங்கியவுடனேயே, பிஞ்சுகள் அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது.

திறந்தவெளி அரங்கத்தில்….

சிறு இடைவேளைக்குப் பிறகு, மாலை 5 மணிக்கு  திறந்த வெளி அரங்கமான முத்தமிழ் அரங்க மேடையில், பல்கலைக்கழகத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்களுடன், பெரியார் பிஞ்சுகள் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். உடன், பழகு முகாமின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான வீ.அன்புராஜ், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சிறீவித்யா, பழகு முகாமின் வளாக முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி சரவணன் மற்றும் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட பழகு முகாமின் ஒருங்கிணைப்பாளர்கள் அதில் பங்கேற்றனர்.

கைகுலுக்கி வாழ்த்து…

இந்நிகழ்வின் போது குழுப் படம் எடுத்துக் கொண்ட பிறகு, பெரியார்  பிஞ்சுகள் அனைவரும் வேந்தர் கி.வீரமணி அவர்களை, சுற்றிலும் நின்று கொண்டு,  அய்யா… அய்யா… என்று, தங்கள் கைகளை நீட்டி, அவரது கைகளைப் பற்றி மரியாதை செய்தது, காணக் கிடைக்காத ஒரு காட்சியாக இருந்தது. அவர்களிடமிருந்து விடை பெற்றுச் செல்வது வேந்தருக்கும்  சற்று சங்கடமாகத்தான் இருந்தது. பிஞ்சுகளிடமிருந்து வேந்தரை தனியாக பிரித்து வெளியில் அழைத்து வருவதும் தோழர்களுக்கும் சற்று சிரமம் ஆகிவிட்டது. அந்த அளவுக்கு எதிர்கொண்ட பிஞ்சுகள் அனைவருக்கும் கைகுலுக்கி வாழ்த்துகளைக் கூறி, பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடைபெற்றுச் சென்றார்.

‘மந்திரமா? தந்திரமா?’

அதன் பிறகு கட்டட எழில் கலைத்துறை வளாகத்தில் உள்ள கார்பூசியர் அரங்கத்தில், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் ஈட்டி கணேசன் இதை நடத்திக் கொடுத்தார். பெரியார் பிஞ்சுகள் இந்த வகுப்பை மிகவும் ரசித்து மகிழ்ந்தனர். பழகு முகாமின் மூன்றாம் நாள் இறுதியில் முழுமையான ‘பெரியார்’ திரைப்படம் திரையிடப்பட்டது. நேரமின்மை காரணமாக இரண்டு மணி நேரம் மட்டுமே திரையிடப்பட்டு, பின்னர் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற‌வாக்குறுதி வழங்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த முக்கால் மணி நேர படத்தை, நான்காம் நாள் இறுதியில் திரையிடப்பட்டது. பெரியார் இறந்து போகும் காட்சி வரும் இடத்தில் பிஞ்சுகள் பெரும்பாலானோர் கண்கள் கலங்கினர். பின்னர் அதை நம்மிடத்தில் கூறவும் செய்தனர். அந்த அளவுக்கு பெரியார் திரைப்படம் அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஒழுக்க நெறிகள்

‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சிக்கு முன்னதாக, பழகு முகாமின் ஒருங்கிணைப்பாளரும், திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளருமான ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள், ‘பெரியார் பிஞ்சுகள்’ கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் பற்றி அரை மணி நேரம் வகுப்பெடுத்தார். அந்த வகுப்பில், “யார் எதைச் சொன்னாலும் அதை, ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்டு, அதற்கு பதில் கிடைத்த பிறகே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும், “அந்த யார் என்பதில் தற்போது திரைப்படத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்திருப்பவர்களும் அடங்குவர்” என்றும், குறிப்பிட்டார்.

பெற்றோருடன் பேசுவதைவிட, நண்பர்களுடன் விளையாடுவதே….

தொடர்ந்து, இரவு உணவுக்குப் பிறகு பெரியார் பிஞ்சுகள் தங்களது அறைகளுக்குச் சென்று, வழக்கமான தங்களது பணிகளை செய்துவிட்டு, நள்ளிரவு தாண்டி உறங்கச் சென்றனர். பலருக்கும், ‘நாளை ஒரு நாள் தான் பாக்கி இருக்கிறது’ என்கின்ற செய்தி  பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட, ஆட்டோகிராப் வாங்கும்  நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். வேறு எந்த பழகு முகாமை விட இந்தப் பழகு முகம் பெரிதாக பிஞ்சுகள் யாரும் வீட்டை நினைத்து பெரிதாக அளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியும் பெற்றோர்கள் சிலர் இரவு நேரத்தில் பேச முயன்ற போது, பெற்றோர்களிடம் பேசுவதை விட நண்பர்களுடன் விளையாடுவதை பெரிதாகக் கருதி, அந்த தொலைபேசி தொடர்பை விரைந்து துண்டித்தது பெற்றோர்களுக்கே நம்ப முடியாததாக இருந்தது. இப்படியாக, நான்காம் நாள் காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கடந்தது தெரியாமல் கரைந்து போனது.

உங்களைக் காப்பதற்கு கருஞ்சட்டைக் கவசம் இருக்கிறது. ஏற்கெனவே நீங்கள் கருப்புதான்; அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. கருப்பு, இப்பொழுது டில்லியையே உலுக்கிக் கொண்டிருக்கிறது; நாடாளு மன்றத்தையே கலக்கிக் கொண்டிருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *