மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை காவலர்களுக்கு விடுமுறை எடுக்க அனுமதி இல்லை டி.ஜி.பி. அதிரடி உத்தரவு!

3 Min Read

சென்னை, ஏப்.29 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்தும் நோக்கில் காவல்துறை தலைமை இயக்குநர் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

இதன்படி, மே 2-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் தொடங்கி உயர் அதிகாரிகள் வரை எவரும் விடுமுறை எடுக்க அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கை மய்யங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தவிர்க்க அனைத்துப் பிரிவு காவலர்களும் பணியில் இருக்க வேண்டும். முறையான காரணங்களுக்காக ஏற்ெகனவே விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக: மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு ஆகியவை தவிர வாக்கு எண்ணிக்கை நாளில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்ெகனவே விடுப்பில் இருப்பவர்கள் தவிர, மற்ற அனைவரும் உடனடியாகப் பணிக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

உண்மைத் தன்மை அறியாமல்

 தவறான செய்திகளை பரப்புவர்கள்மீது கடும் நடவடிக்கை

த.வெ.க.வினருக்கு காவல்துறை எச்சரிக்கை

சென்னை, ஏப்.29 சென்னை லயோலா கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மய்யத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நபருக்காக வரவழைத்த ஆம்புலன்ஸ் குறித்து வதந்தி பரப்பிய தவெகவினரை காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது.

சர்ச்சை கருத்து

கடந்த வாரம் சென்னை லயோலா கல்லூரி வாக்குப் பதிவு கருவிகள் வைக்கப்பட்ட அரங்கில் கூலித்தொழிலாளி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்
கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிகழ்வை சமூக வலைதளங்களில் சிலர் அரசியல் உள்நோக்கத்துடனும், உண்மைக்குப் புறம்பாகவும் திரித்துக் கூறி பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தினர் சிலர் இது தொடர்பாகச் சர்ச்சை கருத்துகளைப் பதிவிட்டனர் இது பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இது போன்ற அவதூறு கருத்துக்கள் மற்றும் காட்சிப் பதிவுகளைப் பரப்புவோர்மீது சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவின் கீழ் உள்ள சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

“உண்மைத்தன்மை அறியாமல் தவறான செய்திகளைப் பரப்புவது சட்டப்படி குற்றமாகும். வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று காவல்துறை தனது செய்திக்குறிப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

 

பார்சல் சேவைக்கு குறைந்த கட்டணம்;

கூடுதல் பாதுகாப்பு: பொதுமக்களுக்கு அஞ்சல் துறை அழைப்பு

தூத்துக்குடி, ஏப்.29 இந்திய அஞ்சல் துறை தனது பார்சல் சேவைகளை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தி வழங்குகிறது. இந்த சேவைகளை பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில், பார்சல் சேவையில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பார்சல்களைப் பெறுபவரின் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து சேர்த்தல். ரகசிய குறியீடு (OTP) அடிப்படையிலான விநியோக முறை.

வணிக நோக்கில் பார்சல்கள் அனுப்புவோருக்கு அஞ்சல் நிலையத்திலிருந்து வந்து பெற்றுக்கொள்ளும் (Pickup) வசதி. இந்தியா முழுவதும் பார்சல்களை அனுப்ப ஒரே மாதிரியான கட்டண முறை பின்பற்றப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட பார்சல்களை இணையதளம் மூலம் எங்குள்ளது (Tracking) என்பதை எளிதாகக் கண்டறியலாம். இந்தியாவிற்குள் மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கும் பார்சல்களை அனுப்பும் வசதி உள்ளது.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக தலைமை அஞ்சலகங்களில் பிரத்யேக பார்சல் பேக்கிங் மய்யங்கள் செயல்படுகின்றன. அனைத்து கிளை அஞ்சலகங்களிலும் இந்த சேவை கிடைக்கிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 9841875710 மற்றும் 9791655030 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *