சூலூர், ஏப்.29 கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான்பேட்டையை அடுத்த மலைப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தென்சேரி மலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோயிலுக்குச் சென்ற புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி கோயில் மண்டபத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வழிபாடு செய்தார். அப்போது தான் கொண்டு வந்திருந்த ஜாதகத்தை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார், சோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி இந்த கோவிலில் ஜாதகம் வைத்து சிறப்பு பூஜை செய்தால் முதலமைச்சராக கட்டாயம் ஆகிவிடலாம் என்று கூறியதை அடுத்து இந்த சிறப்பு பூஜை செய்தார் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் 33 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்
தேர்தலில் போட்டியிட முடியாது
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டில்லி, ஏப்.29 கடந்த மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தேர்தல் செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்யத் தவறிய 529 வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் 33 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 10ஏ-இன் கீழ் செலவு கணக்குகளை முறைப்படி தாக்கல் செய்யாத 529 வேட்பாளர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. கடந்த மார்ச் 16 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 பேர் உட்பட நாடு முழுவதும் உள்ள 529 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது அடிப்படைத் தேர்தல் உரிமைகளை இழக்கின்றனர்.
சட்ட விதிகளின்படி, தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தங்களது முழுமையான தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்வது கட்டாயம். அப்படி சமர்ப்பிக்க தவறுவோரை மூன்று ஆண்டுகளுக்குத் தகுதி நீக்கம் செய்யத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
இந்தத் தகுதி நீக்கமானது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களுக்கு மட்டுமே பொருந்தும். அதேநேரம், மாநிலத் தேர்தல் ஆணையங்களால் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு இது பொருந்தாது. இந்நிலையில் 529 வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிகபட்சமாக உ.பி.யில் 120, கருநாடகா 59, மத்தியப் பிரதேசம் 39, சத்தீஸ்கர் 36, தமிழ்நாடு 33, பீகார் 28, தெலங்கானா, பஞ்சாப் 27, உத்தரகாண்ட் 27, ஆந்திரா 25, கேரளா 16 உள்ளிட்ட மாநிலங்களின் 529 வேட்பாளர்கள் தகுதி நீக்கப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வெளியிட்ட முக்கிய கட்டுப்பாடுகள்
சென்னை, ஏப்.29 கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோருக்கு, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வழங்கியுள்ள அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:
* மாணவர்கள், பகல் 12:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, நேரடி வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள் அந்த நேரத்தில், திறந்தவெளி வகுப்புகள், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளை வழங்கக் கூடாது.
* ஆசிரியர்கள், ஒவ்வொரு பாடவேளை தொடக்கத்திலும், மாணவர்கள் நீர் அருந்த வாய்ப்பு வழங்குவதுடன், அவர்கள் போதுமான அளவு, தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* சதுரங்கம், கேரம் போன்ற உள்ளரங்க விளையாட்டுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும்.
* காபி, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் அதிக சர்க்கரை உள்ள பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
* பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணியர், முதியோர் மற்றும் இதய நோய் பாதிப்புள்ளோர், வெயிலில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
* கோடை காலத்தில் தலைவலி, தலைசுற்றல், வாந்தி, தசைப்பிடிப்பு, அதிக இதயத்துடிப்பு மற்றும் மயக்கம் போன்றவை, வெப்ப பாதிப்பின் அறிகுறிகளாக வெளிப்படும். இதுபோன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் அல்லது 108 அவசர சிகிச்சை உதவியை நாட வேண்டும்.
* கோடையில் பரவக்கூடிய அம்மை நோய், பொன்னுக்கு வீங்கி, சின்னம்மை ஆகியவற்றின் அறிகுறிகள் தென்பட்டால், மற்றவர்களுக்கு பரவாத வகையில், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

