சென்னை, ஏப். 27- இந்திய தொழில்நுட்பக் கழகம் (அய்அய்டி) மெட்ராஸ், இந்தியாவின் எரிசக்தி துறையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில், கைவிடப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளில் இருந்து ஜியோதெர்மல் (புவிவெப்ப) எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மின்சார உற்பத்தி
குஜராத் மாநிலம் சூரத் அருகே யுள்ள ஓஎன்ஜிசி தளத்தில் இந்த பைலட் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இத்திட்டத்திற்காக ரூ. 15.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக 450 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அய்அய்டி மெட்ராஸ் பேராசிரி யரும், கிரீன் ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ரோகார்பன்ஸ் டெக் கன்சார்டியத்தின் முக்கிய உறுப்பினருமான ராஜேஷ் நாயர் இந்த திட்டத்தை வழிநடத்துகிறார். வழக்கமாக, எண்ணெய் எடுக்கப் பட்டு கைவிடப்பட்ட கிணறுகள் எதற்கும் பயன்படாமல் அப்படியே விடப்படும்.
ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம் அந்த கிணறுகளின் ஆழத்தில் இருக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். “இந்த பைலட் திட்டம் வெற்றி பெற்றால், இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான உற்பத்தியற்ற கிணறுகள் ‘தூய்மையான எரிசக்தி’ ஆதாரங்களாக மாறும்.
இதன் மூலம் பல ஜிகாவாட் அளவிலான மின்சாரத்தை 24 மணி நேரமும் தடையின்றி பெற முடியும்,” என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சூரிய சக்தி மற்றும் காற்று வீசும் நேரத்தைப் பொறுத்தே அமையும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றைப் போலன்றி, ஜியோதெர்மல் எரிசக்தி ஆண்டு முழுவதும், எல்லா நேரங்களிலும் நிலையான மின்சாரத்தை வழங்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முயற்சி இந்தியாவின் ‘நிகர பூஜ்ஜிய உமிழ்வு’ (Net Zero) இலக்கை அடைவதில் ஒரு முக்கியப் பங்கினை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
