சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும்!
அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம்!
சென்னை, ஏப்.27 சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும். அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம். சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு; மனக் கோட்டை – மற்ற அணிகளுக்கு! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்
இன்று (27.4.2026) வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாள். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமறு:
‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்!’
‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற திராவிடர் இயக்கம் முதன்முதலாக உருவாவதற்குத் தலைமை யேற்ற, வெள்ளுடை வேந்தர் என்று உலகத்தாரால் அறிமுகப்படுத்தப்பட்ட, வரலாற்றுப் பெருமை மிகுந்த ஒரு வாழ்வை அமைத்த சர். பிட்டி. தியாகராயர் அவர்களுடைய பிறந்த நாள் இன்று!
‘திராவிட மாடல்’ ஆட்சி இன்றைக்கு உலகம் போற்றக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறது. ‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’ என்று தொடங்கப் பெற்று, அது ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று பதிவு செய்யப்பட்டு, ‘ஜஸ்டிஸ்’ கட்சி என்று மக்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் இயக்கத்தினுடைய முப்பெரும் தலைவர்களில், சர்.பிட்டி தியாகராயர் அவர்கள்தான் தலைமையேற்றவர். திராவிடர் ஆட்சியை அமைப்பதற்கு வழிகாட்டியவர்கள். அதனுடைய அடித்தளம் ஆனவர்கள்.
‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை!’
1916 ஆம் ஆண்டு ‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை’ (Non Brahmin Manifesto) என்று உருவாக்கி, அதன்மூலம் கல்வி, உத்தியோகத் துறைகளில், எப்படியெல்லாம் நம்முடைய உரிமைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டன என்பதை புள்ளி விவர ரீதியாக எடுத்துச் சொல்லி, தெளிவுபடுத்தி, ஒரு பெரிய இயக்கத்தை உருவாக்கிய பெருமை, அவருக்கும், அவரைச் சார்ந்த தளபதிகளாக இருந்த டி.எம்.நாயர் அவர்களுக்கும், சி.நடேசனார் அவர்களுக்கும் உரியது.
அந்த அடித்தளத்தின்படி – அதற்குப் பிறகு 17 ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சி நடந்தது. பல ஆண்டுகள் கழிந்தும் கூட, மற்றவர்கள் சொன்னார்கள், ‘நீதிக்கட்சியைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டோம்’’ என்று.
அதற்குப் பிறகு பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மிகத் தெளிவாக ‘‘நீதிக்கட்சியின் பேரனான நான் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறேன்’’ என்றார்.
அதைத் தொடர்ந்து கலைஞர் அவர்கள், அந்த ஆட்சி யினுடைய பெருமைகளை, சாதனைகளை உயர்த்தினார்.
இந்தியாவே திரும்பிப் பார்க்கக்கூடிய ஓர் அற்புதமான ஆட்சி – ‘திராவிட மாடல்’ ஆட்சி!
அவருக்குப் பிறகு, அதனை மேலும் ‘திராவிட மாடல்’ ஆட்சியாக்கி, இன்றைக்கு இந்தியாவே திரும்பிப் பார்க்கக்கூடிய ஓர் அற்புதமான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்து வருகிறார்.
சிலையாக மட்டுமல்ல, நமக்கெல்லாம் வழிகாட்டக்கூடிய சீலமாகவும் விளங்குகிறார்!
எனவே, ஒரு நீண்ட பாரம்பரியத்திற்கு அடித்தளமாக, காரணமாக இருந்து அடிக்கட்டுமானத்தை உருவாக்கிய அந்த மாபெரும் தலைவருடைய பிறந்த நாள். தந்தை பெரியார் அவர்கள் அதனை ஒருங்கிணைந்து, நீதிக்கட்சியையும் – சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்து ‘திராவிடர் கழகமாகி’ – திராவிடர் கழகம் பிறகு இரட்டைக் குழல் துப்பாக்கியாக – திராவிடர் கழகம் – திராவிட முன்னேற்றக் கழகமாக வளர்ந்த ஓர் அரசியல் சரித்திரத்தின் தொடக்கத்திற்கு உரியவர்தான் இன்றைக்குச் சிலையாக மட்டுமல்ல, நமக்கெல்லாம் வழிகாட்டக்கூடிய சீலமாகவும் இருக்கக்கூடிய சர். பிட்டி தியாகராயர் அவர்கள்.
அவருடைய பிறந்த நாளை, நாம் ஒவ்வொரு ஆண்டும் சடங்காக, சம்பிரதாயமாகவோ கடைப்பிடிப்பதில்லை – சரித்திர அடையாள நாளாகக் கடைப்பிடித்து, அதன்மூலமாகத் தமிழ்நாடு யாருக்கும் அடிமையாக்கப்படக் கூடாத ஒன்று – உரிமை முழக்கம் செய்யவேண்டிய ஒன்று என்பதை நாம் தொடர்ந்து அனைவருக்கும் விளக்கவேண்டும்.
கல்வி, வேலை வாய்ப்புகள், சமூகநீதி என்ற அந்தத் தொடக்கவுரையை அவர்தான் உருவாக்கி வைத்தார். அந்த எழுச்சியை இன்றைக்குப் பார்க்கிறோம்.
வீறுநடை – வேக நடை போட்டு எழுச்சியை உருவாக்குவோம்!
தேர்தல்கள் ஒரு களம், அவ்வளவுதான்.பண் பாட்டுப் புரட்சியை அந்தத் தலைவர்கள் தெளிவாக உருவாக்கினார்கள். அதைத் தொடர்வோம், சூளுரைப்போம், சுயமரியாதை உணர்வைப் பெறுவோம்! அவர் வழியில் என்றென்றைக்கும் வீறுநடை – வேக நடை போட்டு எழுச்சியை உருவாக்குவோம்.
செய்தியாளர்: மே 4 ஆம் தேதி வெளிவரக்கூடிய தேர்தல் முடிவை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? 2006 ஆம் ஆண்டு விஜயகாந்த் வாக்குகளைப் பிரித்தது போன்று, 2026 ஆம் ஆண்டு விஜய் வாக்குகளைப் பிரிப்பார். தனிப்பெரும்பான்மை என்பது எந்தக் கட்சிக்கும் கிடைக்காது. கூட்டணி ஆட்சிக்குத்தான் வாய்ப்பு என்று சொல்கிறார்களே?
1971 ஆம் ஆண்டு நிலை –
மே 4 ஆம் தேதிக்குப் பிறகு வரும்!
தமிழர் தலைவர்: 2006 ஆம் ஆண்டோடு நிறுத்தி யிருக்கிறார்கள். அதற்கு முன்பு அவர்கள் போகவேண்டும். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 184 இடங்களைப் பெற்று தி.மு.க. வரலாறு படைத்தது.
‘‘இதோடு முடிந்தது. இனி தி.மு.க. ஆட்சிக்கு வராது’’ என்று ஆருடம் கணித்தவர்கள் எல்லாம், அடையாளம் தெரியாமல் ஓடிவிட்டார்கள் – துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று! 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற அதே நிலை, மே 4 ஆம் தேதிக்குப் பிறகும் வரும்.
இதே இடத்திற்கு வந்து, சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும். அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம்.
அதை நீங்கள் விரைவில் காணுவீர்கள்.
சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு;
மனக்கோட்டை – மற்ற அணிகளுக்கு!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

