சென்னை, ஏப்.27– ஒரு மொழியை அழிப்பதற்கு வாளோ, துப்பாக்கியோ தேவையில்லை. ஓர் இணையதளத்தின் முகப்பு பக்கத்தை மாற்றினால் போதும். ஓர் அரசாணை யின் ஒரே வரியில் லட்சக்கணக்கான மனித உரிமைகள் மவுனமாக மரணிக்கின்றன.
இந்தியாவின் மிகப் பழைமையானது அறிவியல் நிறுவனங்களில் ஒன்றான இந்திய வானிலை ஆய்வு மய்யம். அதாவது அய்.எம்.டி, தனது அதிகாரப் பூர்வ இணையதளமான mausam.imd.gov.in-இன் முதன்மை மொழியை, நெடுங்காலமாக இருந்த ஆங்கிலத்தி லிருந்து திடீரென ஹிந்தியாக மாற்றியுள்ளது. இது ஒரு தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல. ஓர் அரசியல் திட்டமிடலின் நடைமுறை வெளிப்பாடு.
வானிலை அறிவிப்பு என்பது
வாழ்வின் கேள்வி
இந்திய வானிலை ஆய்வு மய்யம் 1875 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. புயல் எச்சரிக்கைகள், கனமழை அறி விப்புகள், வெப்ப அலை உயிரிழப்பு முன்னறிவிப்புகள், விவசாயிகளுக்கான பருவமழை கணிப்புகள், கடல் மீனவர்களுக்கான கடல் நிலை அறிக்கைகள். இவை யாவும் இந்த மய்யத்தின்இணையதளத்தை நம்பியே நிகழ்கின்றன.
ஒரு விவசாயி நாற்று நட வேண்டுமா?வேண்டாமா? என்று முடிவெடுப்பது இந்த இணைய தளத்தைப் பார்த்தே. ஒரு மீனவர் கடலுக்குள் செல்லலாமா? வேண்டாமா? என்று தெரிந்து கொள்வதும் இதனைப் பார்த்தே.
இப்படி உயிர்களோடு நேரடியாக பிணைந்த இந்த இணையதளத்தின் முகப்பு பக்கம் இப்போது ஹிந்தியில் காட்சி தருகிறது.
தமிழ்நாட்டிலோ,கேரளத்திலோ, வங்காளத்திலோ உள்ள ஒரு சாமான்யன் அந்த இணையதளத்தை திறக்கும்போது, அவன் முதலில் காண்பது தன் மொழி யில் அல்ல ஹிந்தியில். உள்ளே நுழைந்த பிறகே ஆங்கிலத்திற்கு மாற்றிக் கொள்ளும் வசதி உண்டு என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த ‘‘உள்ளே நுழை’’ என்ற ஒரு தடை, ஒரு சாமான்யனுக்கு எவ்வளவு பெரிய தடையாக மாறும் என்பதை அவர்களுக்கு யார் புரிய வைப்பது?
ஹிந்தி திணிப்பின் புதிய முகம்
ஹிந்தி திணிப்பு என்பது புதிதல்ல. ஆனால் இன்று அது டிஜிட்டல் உலகின் வழியாக நுழைகிறது என்பதே புதிய ஆபத்து. ஒரு தலைவர் மேடையில் நின்று ‘‘ஹிந்தி பேசுங்கள்’’ என்று கோஷமிட்டால் மக்கள் எதிர்க்கலாம். ஆனால் ஒரு இணை யதளத்தின் மொழி அமைப்பை மாற்றும்போது, அது தெரியாமலே நடக்கிறது. இந்த மாற்றம் மெல்ல மெல்ல நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகி விடுகிறது.
ஒன்றிய பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல், ஹிந்தி மயமாக்கல் என்பது திட்டமிட்ட முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரயில்வே அறிவிப்புகள், அஞ்சல் துறை ஆவணங்கள், ஒன்றிய அரசு சேவை இணையதளங்கள் என ஒவ்வொன்றாக ஹிந்தி தன்னை நிலைநிறுத்திக் கொண்டே போகிறது. இப்போது இந்திய வானிலை ஆய்வு மய்யமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.
அரசமைப்புச் சட்டம் சொல்வது என்ன?
இந்திய அரசமைப்புச் சட்டம் ஹிந்தியை ஒன்றி யத்தின் அதிகாரப் பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டா லும், ‘‘ஆட்சி மொழியாக ஹிந்தி மட்டுமே’’ என்று சட்டம் எங்கும் சொல்லவில்லை.
மேலும், ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் – 1963 ஆங்கிலத்தையும் இணை மொழியாகத் தக்க வைத்திருக்கிறது. இந்நிலையில், ஒரு ஒன்றிய அரசு நிறுவனம் முதன்மை மொழியாக ஆங்கிலத்தை விலக்கி ஹிந்தியை நிறுவுவது அரசமைப்புச் சட்டத்தின் உள்ளார்ந்த நீதிக்கே சவால் விடுவதாகும்.
தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை நடை முறையில் இருக்கிறது. தமிழும் ஆங்கிலமும். ஹிந்தி இங்கு அதிகாரப்பூர்வ மொழியே அல்ல. அப்படியிருக்க, ஒரு ஒன்றிய அரசு சேவையின் முகப்பு பக்கம் ஹிந்தி யில் தோன்றுவது, தமிழ்நாட்டு மக்களுக்கு மிகத் தெளிவான ஒரு செய்தியை அனுப்புகிறது. ‘‘நீங்கள் ஹிந்தி கற்றுக் கொள்ளுங்கள்; இல்லை யென்றால் ஓரங்கட்டப்படுவீர்கள்’’ என்பதே!
ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு
இது என்ன செய்யும்?
தமிழ்நாடு, கேரளம், கருநாடகம், ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்காளம் இந்த மாநிலங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஹிந்தி அன்னிய மொழி. அவர்கள் வாழ்நாளில் ஹிந்தி கற்றதில்லை, கற்க வேண்டிய கட்டாயமும் இல்லை.
இந்நிலையில், ஒரு கடற்கரை மீனவர் கடலின் நிலையை அறிய வானிலை இணையதளத்தை திறக்கும்போது, முதலில் ஹிந்தியில் ஒரு பக்கம் தோன்றுகிறது. அவர் படித்தவராக இருந்தாலும் ஹிந்தி தெரியாவிட்டால் அந்நொடி திகைப்பில் நிற்கிறார். படிக்காதவராக இருந்தால் கேட்கவே வேண்டாம்.
வானிலை தகவல் என்பது அலட்சியமான ஒரு விஷயமல்ல. ஒகி புயல் தாக்கியபோது உயிரிழந்த மீன வர்களை நினைத்துப் பாருங்கள். சரியான நேரத்தில் சரியான மொழியில் தகவல் கிடைத்திருந்தால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும்? மொழி என்பது வெறும் பண்பாட்டு அடையாளம் மட்டுமல்ல.அது ஒரு உயிர் காக்கும் கருவியும் கூட.
இது தனிச் சம்பவமல்ல
இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் இந்த மாற்றம் திடீரென நிகழ்ந்த ஒன்றல்ல. இது ஒரு நீண்ட சங்கிலியின் இன்னொரு கண்ணி மட்டுமே. கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசின் பல்வேறு துறைகளில் ஆவணங்கள், சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் ஆங்கிலத்திலிருந்து ஹிந்திக்கு மாற்றப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தில் ஆங்கி லத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு ஹிந்தியில் பதில் வருகிறது. கல்விக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைத்திலும் ஹிந்தி ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விரிகிறது.
இந்தத் திட்டமிட்ட மொழி ஆக்கிரமிப்பிற்கு எதிராகத் தமிழர்கள் போராடியது புதிதல்ல. 1937ஆம் ஆண்டிலும், 1965ஆம் ஆண்டிலும் இரத்தம் சிந்தி, உயிரை மாய்த்துக் கொண்டு தமிழர்கள் ஹிந்தித் திணிப்பைத் தோற்கடித்தனர். அந்த வரலாற்று தியா கங்களின் நினைவை மனதில் கொண்டு, இன்றைய டிஜிட்டல் திணிப் பையும் நாம் தீவிரமாக எதிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
இந்த விஷயத்தில் வெறும் கோபம் மட்டும் போதாது. விழிப்புணர்வும், ஒன்றிணைந்த குரலும் தேவை. இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் இணைய தளத்தை உடனடியாக பன்மொழி வடிவில், முகப்பிலேயே அனைத்து மாநில மொழிகளிலும் மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசும், பிற ஹிந்தி பேசா மாநில அரசுகளும் ஒன்றிணைந்து கோரிக்கை வைக்க வேண்டும்.
ஒரு மரம் வேரிலிருந்து அறுபட்டால் பூக்காது; ஒரு மொழி தன் மண்ணிலிருந்து அகற்றப்பட்டால் வளராது. இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் இணையதளம் ஹிந்தி மயமானது சிறிய செய்தியாகத் தோன்றலாம். ஆனால் நூறு சிறிய நீரோடைகள் சேர்ந்தே பெரும் வெள்ளமாகும் என்பதை வரலாறு நமக்குச் சொல்லியிருக்கிறது.
தமிழன் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு டிஜிட்டல் மாற்றத்தையும், ஒவ்வொரு அரசாணையையும், ஒவ்வொரு இணைய தளத்தின் மொழி மாற்றத்தையும் கண்காணிக்க வேண்டும்.
ஏனெனில் இன்று வானிலை மய்யம், நாளை வேறு ஒன்று, நாளைக்கு மறுநாள் இன்னொன்று இப்படி மெல்ல மெல்ல நம் வாழ்வின் அனைத்து அலுவல் இடங்களிலும் ஹிந்தி புகுந்து விட்டால், அப்போது நாம் போராடினாலும் மிகத் தாமதமாகிவிட்டிருக்கும்.
மொழி உரிமையைக் காக்கும் போராட்டம் இன்று, இப்போது, இங்கே தொடங்க வேண்டும்.
