தாழ்வில்லா வாழ்வு
1927-1973 முடிய உள்ள காலகட்டத்தைக் கணக்கீடாகக் கொண்டு பெரியாரியத்தின் எழுச்சியையும், தாழ்ச்சியையும் கணித்துப் பார்க்கலாம். 1879இல் தோன்றிய பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை அவரது இளமை முதலே அவருள் முகிழ்ந்திருந்தாலும் 1926இல் அவர் காங்கிரசிலிருந்து வெளியேறிய பின்னரே முழு ஈடுபாடாக, இயக்கமாக வெளிப்பட்டது. அவரது இறுதி மூச்சுவரை அவரது மூச்சாகவே விளங்கியது. தோராயமாகச் சொல்வோமானால் அவரது வாழ்வின் சமபாதிக்காலம், அவர் ஜாதி ஒழிந்த சமநிலை காணவே தம் வாழ்வை ஒப்புக்கொடுத்தார். இதில் முதல் கட்டம் 1927
- ஆங்கிலேயர் ஆட்சிக்காலம். 2ஆவது கட்டம் 1947-1973 நம்மவர் ஆட்சிக்காலம் எனப் பிரிக்கலாம்.
1927-1947 எதிர்ப்புடன் எழுந்தார்
‘குடிஅரசு’ இதழே பெரியாரின் போர் வாளும் கேடயமும். சொல்மாரி பொழிவதே அவர் விற்போர். சமுதாயப் போர்க்களத்தில் நாளும் நாளும் அறப்போர்தான். சிறைக்கூடமே ஓய்வு இல்லம். பெரியார் கண்ட நன்னம்பிக்கை முனைகளே அவர் நடத்திய மாநாடுகள். செங்கற்பட்டு, விருதுநகர், ஈரோடு. சேலம், தூத்துக்குடி, சென்னை எனத் திசை எட்டிலும் கூட்டிய மாநாடுகளில் கூடிய சுயமரியாதை வீரர்களுக்குக் கொள்கை உரம் ஊட்டப்பட்டது. சுயமரியாதை மாநாடு, சமதர்ம மாநாடு, மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு. பெண்கள் மாநாடு, மது விலக்கு மாநாடு, இந்தி எதிர்ப்பு மாநாடு எனக் கொள்கை விளக்கப் பயிற்சிப் பாசறைகளாக மாநாடுகள் பயன்பட்டன. தமிழர்கள் ஆயிரம் ஆயிரம் பேராய்ப் பெரியார்பின் அணிதிரண்டனர். 1938இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றுத் தமிழ் நாட்டிற்கே பெரியார் ஆனார்.
எதிர்ப்பு எழாத இடமே இல்லை
நகரங்களில் மாநாடுகளுக்கு இடம் பெறுவதிலிருந்து சிற்றூர்களில் படிப்பகம் திறப்பது வரை மேலாதிக்கக்காரர்களின் தூண்டுதலால் நம்மவர்களிடமிருந்தே எழும் ஏச்சும் எதிர்ப்பும் எழாத இடமே இல்லை. இதில் காங்கிரஸ்காரர்களின் பங்கு கணிசமானது. தீவைக்கப்படாத படிப்பகமோ. கலகம் விளைவிக்காத கூட்டமோ அரிதுதான். மதுரையில் மாநாட்டுப் பந்தலையே தீக்கிரையாக்கினார்கள். எழுச்சிப் பேரணிகள் எதிரிகளால் கலைக்கப்பட்டு முடிவு இடம் வருமுன்னரே முடிவடைந்தன. பெரியாரின் குடியரசு இதழுக்கு எதிராகத் தேசபந்து, நவசக்தி. சுதேசமித்திரன் எனத் தமிழ் நாட்டின் எல்லா இதழ்களும் எதிர்ப்பைக்கக்கின.
தோள்கொடுத்த அறிஞர்கள்
துணைவந்த தலைவர்கள்
‘குடிஅரசு’ இதழில் பெரியாருக்குத் தோள்கொடுக்கச் சிந்தனை ஆழம் கொண்ட, அறிஞர்குழு ஒன்று ஆர்வமுடன் செயல்பட்டது. பெரியார் ஓரிடத்தில் பேசிய கருத்தை ஆயிரம் இடங்களில் பேசிப் புரியவைக்க எழுச்சி மிக்க பேச்சாளர் கூட்டமும் திசையெங்கும் புறப்பட்டது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பாரில் சமுதாய மதிப்புப் பெற்ற தலைவர்களில் பெரியாரைப் புரிந்துகொண்டவர்கள் பலரும் பெரியாருக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கினர். ‘குடிஅரசு’ப் பதிப்பகம் மூலம் பெரியாரின் பேச்சும் எழுத்தும் நூல் வடிவம் பெற்றுக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன. இந்த நூல்களை எழுதியமைக்கும் வெளியிட்டமைக்கும் வழக்குகளைச் சந்திப்பதும் சிறைத் தண்டனை பெறுவதும் வாடிக்கையாயின. பெரியாரின் அரசியல் ஈடுபாடும், காங்கிரஸ் எதிர்ப்பும் இந்தி எதிர்ப்பாக வெளிப்பட்டது. இந்தித் திணிப்பை எதிர்த்து 1938இல் மிகப் பெரிய கிளர்ச்சியையும் சிறை நிரப்பும் போராட்டத்தையும் தமிழறிஞர்கள், சமூகத்தலைவர்கள், தொண்டர்கள், மாணவர்கள் ஆதரவுடன் பெரியார் நடத்தினார். ஆயிரக்கணக்கானவர்கள் சிறை சென்றனர். தொண்டர் பலர் உயிர்ப்பலி ஆயினர். பெரியார் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருக்கும்போதே நீதிக் கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில்தான் ‘திராவிட நாடு திராவிடர்க்கே’ ‘தமிழ் நாடு தமிழர்க்கே’ என்ற பிரிவினை வாதத்திற்கான காரணங்களைப் பெரியார் ஆழமாகப் பேசத் தொடங்கினார். அரசியலிலும் ஆட்சியிலும் தமிழர் நலம் அழிக்கப்படுவதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். 1944இல் நீதிக்கட்சி. திராவிடர் கழகம் ஆயிற்று. பெரியார் திராவிடர் கழகத் தலைவரானார். ஆங்கிலேயர் கொடுத்த கவுரவப்பட்டங்கள், கவுரவப் பதவிகளைத் திராவிடர் கழகத்தார் விட்டு விட வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆங்கிலேயர் ஆதரவுக் கட்சி என்று நீதிக்கட்சிக்கிருந்த பழியை இதன் மூலம் பெரியார் போக்கினார்.
1948-1973 பெரியாரியம்
பேரொளி பரப்பியது
பெரியாரின் இருபதாண்டுகாலப் புரட்சியும் போராட்டமும் தமிழ்ச் சமுதாயத்தைப் புரட்டிப் போட்டியிருந்தது. பெரியார் கொள்கை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட எழுச்சிக் காலம் தொடங்கியது. கற்றவர், அரசு அலுவலர், ஆட்சியாளர், பெரியார் பணியால் சமுதாயத்தில் முழுப்பயன் அடைந்தவர் கூட்டம் பெரியாரைக் கொண்டாடத் தலைப்பட்டது. தமிழ் நாட்டின் ஒவ்வொரு அசைவிலும் பெரியார் கருத்திற்கு இடம் ஏற்பட்டது. 1951இல் அரசியலமைப்புச் சட்ட முதல் திருத்தத்தால் வகுப்புரிமை வாய்ப்பை உறுதிப்படுத்தினார் பெரியார். 1952,இல் குலக்கல்வித் திட்டத்தால் படிநிலைச் சமுதாய அமைப்பை நிலைநிறுத்தத் திட்டமிட்ட பார்ப்பனச் சூழ்ச்சியை முறியடித்தார். தமிழன் ஆட்சித்தலைவன் ஆவதால், பெருந்தலைவர் காமராசரை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவதற்கு முழுத்துணை புரிந்தார். 1956இல் எழுந்த தட்சிண பாரதத்திட்டத்தை எதிர்த்து மொழிவாரி மாநிலம் ஏற்படக் கிளர்ச்சி செய்தார். திராவிடர் கழகத்தின் துணை அமைப்புகளாகப் பொதுமக்களும். ஆசிரியர்களும், அரசு அலுவலர்களும் பங்கேற்கும் பகுத்தறிவாளர் கழகம், சிந்தனையாளர் கழகங்களைப் பரவச் செய்தார். தேரடியிலும், தெருமுனையிலும், நாற்சந்தியிலும், பொட்டல்வெளியிலும் பெரியார் பேச்சைக் கேட்டவர்கள். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக அரங்கங்களில் பெரியார் பேச்சைக் கேட்டனர். அவ்வரங்கங்களில் பெரியார் பெருமை பேசப்படுவதையும் தமிழ் நாட்டினர் கேட்டனர். பெரியாரும் குன்றாத போர்க்குணத்துடன் எப்போதும் களப்பணியாற்றிக்கொண்டிருந்தார். பெரியாரியத்தின் வெற்றியாக அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது உருவச் சிலைகள் ஊர்தோறும் உயர்ந்து நின்றன.

