பாபநாசம், தஞ்சை தொகுதிகளில் ஏணி, உதயசூரியன் சின்னங்களுக்கு வாக்கு சேகரித்து கழகத் தலைவர் பரப்புரை!

சுட்டெரிக்கும் வெயிலில் கழகத் தலைவர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்!
கருப்புச் சட்டையும், கருப்பு கொடியும் கொள்கை எதிரிகளை மிரள… வைக்கிறது!
தமிழ்நாடு என்பது திராவிடக் கற்பாறை! – தாமரை மலரவே மலராது…
திராவிடர் கழகம்

கபிஸ்தலம், ஏப். 23- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதி நாளில்… சுட்டெரித்த வெயிலில்… 93 வயதில்… காலை, மாலை என இரண்டு நேரங்களிலும்… ஏணி மற்றும் உதயசூரியன் சின்னங்களுக்கு, திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாக்கு சேகரித்தார். அப்போது, “சேற்றில் வேண்டுமானால் தாமரை மலரலாம். ஆனால், தமிழ்நாடு என்பது திராவிடக் கற்பாறை! அதில் தாமரை ஒருபோதும் மலரவே மலராது” என்று, உத்தரவாதம் அளித்து உரையாற்றினார்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பாபநாசம் சட்டமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஏ.எம்.ஷாஜகான் அவர்களை ஆதரித்து, பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் 21.04.2026 அன்று, காலை 9 மணிக்கு கபிஸ்தலம் பாலக்கரை கடைவீதியில் பரப்புரைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்விற்கு, குடந்தை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமை ஏற்க, மாவட்டச் செயலாளர் துரைராஜ் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் அய்யா ராசு, தி.மு.க. ஒன்றியச் செயலாளர் தாமரைச்செல்வன், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வி.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். உரிய நேரத்துக்கு வருகை தந்திருந்த வேட்பாளர் தனக்கு வாக்கு சேகரித்தும், கழகத் தலைவர் வருகைக்கு நன்றி தெரிவித்தும் உரையாற்றினார். நிறைவாக, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், காலை 9:25 மணிக்கு உரையாற்றினார்.

அவர் தமது உரையை, “திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பை, வெளிமாநிலங்கள் மட்டுமல்ல வெளிநாடுகள் கூட கற்றுக் கொள்கின்றன; பின்பற்றுகின்றன; இது வெற்றிடம் அல்ல; கற்றிடம்” என்று உற்சாகமும், பெருமிதமும் கலக்கும் தொனியில் தொடங்கினார். அடுத்து, “தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ்கின்றனர். அதற்குக் காரணம், திராவிட மாடல் அரசு தான்!” என்று, உரத்த… குரலில் கூறி, மக்களிடையே பெருத்த… எழுச்சியை உண்டாக்கி விட்டார். அதை ஒட்டியே, “வருகிற 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் போது, மறுபடியும் கோட்டையில் இரண்டாம் முறையாக அமரப்போவது மு க ஸ்டாலின் அவர்கள் தான்!’ என்று மக்கள் விருப்பத்தை பிரதிபலித்தார். அதை உணர்ந்த மக்களும் மகிழ்ந்து கைதட்டி, ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து, திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களின் சாதனைகளை பட்டியலிட்டார். அதைத் தொடர்ந்து, “இந்த ஆட்சியில் தான் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான முதலீடுகள் வந்திருக்கின்றன. அதற்குக் காரணம், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பது தான்” என்று கூறி, சிறுபான்மை, பெரும்பான்மை என்றெல்லாம் இல்லாமல், யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்று ஒருபான்மையுடன்; அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம். அப்படித்தான் இந்த ஆட்சியும் நடக்கிறது” என்பதையும் நினைவூட்டினார்.

மேலும் அவர், “இந்த அடிப்படையில் தான் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள், நாடாளுமன்ற நிர்ணய சபையின் விவாதங்களில் பங்கேற்று, இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் தான் வர வேண்டும்” என்று வாதாடியதை நினைவூட்டினார்” மேலும் அவர், “இதுவரை போராடிப் பெற்ற உரிமைகளை எல்லாம் தக்கவைக்க வேண்டும் என்றால்; தொடர வேண்டுமென்றால்; திராவிட மாடல் அரசு தான் வெற்றி பெற வேண்டும்!” என்று, தீர்மானமாக குறிப்பிட்டார். தொடர்ந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சர் கல்வியுரிமை, மொழியுரிமை, மாநில உரிமைகள் ஆகியவற்றில், எப்படியெல்லாம் துணிச்சலுடன் செயல்பட்டார் என்பதை, கடந்த ஆட்சியில் நடந்த ஒன்று இரண்டு சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நற்சான்றளித்தார். அடுத்து, தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 50 தலைப்புகளில் அளித்துள்ள சில வாக்குறுதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அதை மக்களிடம் விளக்கி, திராவிட மாடல் அரசின் முக்கியத்துவத்தை மக்கள் மனங்களில் ஆழமாக பதிய வைத்தார்.

மேலும் அவர், “அதிக நெல் உற்பத்திக்கு தமிழ்நாடு அரசு வழங்கி வரும் ஊக்கத்தொகையான ரூ.2,500 அய் நிறுத்தச் சொல்லி, ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ள கொடுமையை எடுத்துரைத்து, “இந்த ஒன்றுக்காகவே அவர்களை தண்டிக்க வேண்டாமா? என்று, பொருத்தமான கேள்வியை எழுப்பினார். தொடர்ந்து, தொகுதி மறு வரையறை என்ற சூழ்ச்சியை சுட்டிக்காட்டி, பெரியார் மண்ணிலே! அண்ணா மண்ணிலே! கலைஞர் மண்ணிலே! காயிதே மில்லத் மண்ணிலே! நாம் சுயமரியாதையுடன் வாழ வேண்டாமா? என்ற கேள்வியை எழுப்பி, அந்தக் கேள்விக்குப் விடையாக, “மறுபடியும் திராவிட மாடல் அரசை கொண்டு வருவதற்கு, ஏணி சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.

தஞ்சாவூர்

இரண்டாம் கூட்டமாக, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் தஞ்சை சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் மேயர் சண்.இராமநாதன் அவர்களை, உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து, தஞ்சாவூர் மாநகர ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில், 21.04.2026 அன்று, மாலை 4 மணிக்கு, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் – பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு அருகில், பரப்புரை கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை ஏற்க, தோழர் தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை மாநகரத் துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, மாவட்டச் செயலாளர் அருணகிரி, மாவட்டக் காப்பாளர் அய்யனார், மாவட்டத் துணைத் தலைவர் நரேந்திரன், மாநகரச் செயலாளர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.

முன்னதாக திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்க உரையாற்றினார். அதைத்தொடர்ந்து, தஞ்சை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் மேயர் சண்.இராமநாதன் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டியும், தனக்கு வாக்கு சேகரிக்க வருகை தந்திருக்கும் திராவிடர் கழகத் தலைவருக்கு நன்றி தெரிவித்தும் சுருக்கமாக உரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், சிறப்புரை வழங்கினார்.

அவர் தமது உரையை, “இந்தியாவே… ஏன்? உலகமே… இப்படி ஒரு முதலமைச்சரா? என்று, பாராட்டத்தக்க; தேசிய அளவிலான தலைவர்களின் பாட்டுடைத் தலைவனாக இருக்கின்ற, நம்முடைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவராக இருந்து, மேயர் சண்.இராமநாதன் அவர்களை இங்கே வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார்” என்று, உற்சாகமாகவும், உணர்ச்சியைத் தூண்டக்கூடிய வகையிலும், உரத்த குரலில் தொடங்கினார். தொடர்ந்து, தான் இதுவரை உணராத ஒரு தகவலான, தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் அதிக அளவில் பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்பதை சுட்டிக்காட்டி, “அது ஒன்றே திராவிட மாடல் அரசு மறுபடியும் வெற்றி பெறப் போகிறது என்பதைக் காட்டுகிறது” என்று பேசி, மக்களின் உற்சாகத்தை கூட்டினார்.

மேலும் அவர், ‘ஸ்டாலின் தான் நமக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்! தமிழ்நாட்டில் ஸ்டாலின் அலை வீசுகிறது! அதற்குக் காரணம், அவருடைய உழைப்பு! செய்திருக்கும் சாதனைகள்!” என்று, சுட்டிக்காட்டி உரையாற்றினார். அடுத்து அவர், “பாஜகவினர் கலப்பில்லாமல் பொய் பேசக்கூடியவர்கள்” என்று குறிப்பிட்டு, “தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டியில் ஒரு மாணவி மதம் மாற்றப்பட்டுவிட்டார் என்று ஆகா… ஓகோ… என்றெல்லாம், பொய்யை; புரளியை பா.ஜ.க.வினர் பரப்பியதையும், பின்னர் சிபிஅய் விசாரித்து, அந்தக் குற்றச்சாட்டுக்கு அடிப்படையே இல்லை” என்று, உறுதிப்படுத்தியதையும் ஆதாரமாகக் காட்டினார்.

அடுத்து, திமுகவினர் ஊழல் செய்கின்றனர் என்ற பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசியவர், “தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் பொன்முடி மீது வழக்கு இருந்தது. அது தள்ளுபடி ஆயிற்று! ஜெகத்ரட்சகன் மீது ஊழல் வழக்கு இருந்தது. அதுவும் தள்ளுபடி ஆயிற்று!” என்று அதற்கு பதிலடி கொடுத்துப் பேசிவிட்டு, “ஆகவே, தமிழ்நாட்டில் காவிகள் காலூன்ற முடியாது” என்றும், “கருப்புச் சட்டையும், கருப்புக் கொடியும் கொள்கை எதிரிகளை மிரள… வைக்கிறது” என்றும், குறிப்பிட்டார். தொடர்ந்து, “ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பது ஒரு தனி நபர் ஸ்டாலினுக்காக அல்ல; எங்களுக்காக அல்ல; வேட்பாளருக்காக அல்ல; உங்களுக்காக; உங்கள் சந்ததிகளுக்காக. ஆகவே, மேயர் சண்.இராமநாதன் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று கூறி, தனது உரையை நிறைவு செய்து கொண்டார். 5 மணி வரை அனுமதிக்கப்பட்ட நேரம் என்று முன்னதாகவே குறிப்பிட்டிருந்தார். அதற்கு முன்னதாகவே பேசி முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை, மாலை நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு கழகத் தலைவரின் கருத்துக்களை கேட்டுத் தெளிந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *