இதுவரை கிடைத்திடாத அரிய வகை மண்பாண்டம் கீழடியில் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், இதுவரை இல்லாத வகையில் மிகச்சிறிய மற்றும் வித்தியாசமான வடிவம் கொண்ட குறுகிய வாய் உடைய சுடுமண் பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கெண்டி மூக்கு பானைகள் மற்றும் மூடியுடன் கூடிய சிவப்பு நிற பானைகள் கிடைத்துள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்தப் பானை முற்றிலும் புதிய கட்டுமான அமைப்பை கொண்டுள்ளதாக தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.

2026-2027 கல்வியாண்டு:
4.11 கோடி பாடநூல்கள் விநியோகம்

பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை!

சென்னை, ஏப்.23 2026-2027ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, 4.11 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பும்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ், 44 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 70 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கான பாடநூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, வரும் 2026-2027-ஆம் கல்வியாண்டில் மொத்தம் 4.11 கோடி பாடநூல்கள் அச்சிட்டு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 88 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 2.71 கோடி புத்தகங்கள், விற்பனைக்காக 1.4 கோடி புத்தகங்கள் என மொத்தம் 4.11 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படவேண்டும். இதில் 1, 2, 3-ஆம் வகுப்பு தவிர, இதர வகுப்புகளுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு,அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

1, 2, 3-ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அவற்றின் பாடநூல்கள் தயாரிப்பு முடியும் தருவாயில் உள்ளது. எனினும், அந்தப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.இதுதவிர, தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள் விற்பனை ஏப்.10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னையில் நுங்கம்பாக்கம் டிபிஅய் வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகியவற்றில் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில்

தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்

உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஏப்.23 மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் கோயில் குடமுழுக்குகளில் மந்திரங்கள் ஓதும் போது சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழ் மந்திரங்களையும் ஓத வேண்டும் என பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் கோயில்களில் குடமுழுக்கின் போது சமஸ்கிருத மந்திரங்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களிலும் குடமுழுக்கில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் மந்திரங்களை பயன்படுத்துவதற்காக குடமுழுக்கு தொடர்பாக அறநிலையத் துறை அமைத்துள்ள உயர்மட்டக் குழுவின் அறிக்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு செப்.17-இல் நடைபெறுகிறது. மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு உட்பட அனைத்து கோயில்களில் குடமுழுக்கின்போது சமஸ்கிருத மந்திரத்துக்கு இணையாக தமிழ் மந்திரங்களையும் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பரதசக்கரவர்த்தி  விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்கள் எம்.கே.சுரேஷ், திலக கார்த்திகா வாதிட்டனர்.

பின்னர் நீதிபதி, ‘மதுரை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரம்.

தமிழுக்கு சிறப்பு செய்யும் மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் மற்ற கோயில்களை விட தமிழ் மந்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

கோயில் குடமுழுக்கு தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவு நகல் தமிழிலும் வழங்கப்படும். விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *