தந்தை பெரியாரின் சுயமரியாதை மண்ணில் தளபதி மு.க.ஸ்டாலினே மீண்டும் முதலமைச்சர் என்பதை நிரூபிப்போம் – இடையில் ஒரே நாளே, உறுதி கொள்வீர்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடெங்கும் தேர்தல் பரப்புரைக்காகப் பயணம் செய்துவிட்டு, இத் தேர்தலின் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் இன்று மாலை தஞ்சையில் நடைபெறவுள்ள நிலையில், மிகுந்த எழுச்சியுடன் இருக்கும் களத்தைப் பார்த்து மீண்டும் ஸ்டாலின் தான்; திராவிட மாடல் ஆட்சிதான் என்று உறுதிப்படுத்திக் கொண்ட மகிழ்ச்சியுடன் இதை எழுதுகிறோம். வயதோ, உடல் நலனோ, கொளுத்தும் வெய்யிலோ ஒரு போதும் நம்மைத் தடை செய்ய முடியாது என்பதைக் கண்டு திராவிடர் கழகத்தின் மீதான தங்கள் மதிப்பைத் தமிழ்நாட்டு மக்கள் பேரன்புடன் வெளிப்படுத்தி னர்.
தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின்
ஓய்வறியா தேர்தல் பணிகள்!
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரு வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நம் கழகத் தோழர்கள் அனைத்துத் தொகுதிகளிலும் மிகச் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டுள்ளனர்.
புதிதாகக் கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க. உள்பட கூட்டணிக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக, முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதை எங்கும் நம்மால் காண முடிந்தது. அதற்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரின் உண்மையான ஈடுபாடும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. சார்பு ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்துவிடக் கூடாது என்னும் உறுதியும் பெரும் காரணமாகும்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கலைஞானி கமல்ஹாசனின் உணர்ச்சிவூட்டும் தேர்தல்பற்றிய பாடல்
மக்கள் நீதி மய்யத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பி னருமான கலைஞானி நண்பர் கமல்ஹாசன் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள ”தலைவன் இருக்கின்றான் திராவிடத் தலைவன் இருக்கின்றான்” பாடல் உணர்வுப் பூர்வமான அவரது உறுதியை வெளிப்படுத்துகிறது. ‘இந்திய நாட்டின் மூலை ஒன்றில் தலைவன் இருக்கின்றான்; இன்னல் வருங்கால் தடையாய் நிற்கின்றான் – திராவிடப் படையாய் நிற்கின்றான்” என்ற வரிகள் சொல்லும் உண்மையைத் தான் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே அவர்களும், காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தியும் பிரதிபலித்துள்ளனர்.
பல திசைகளிலிருந்தும்
தளபதி ஸ்டாலினுக்குப் பாராட்டு!
ஓசூரில் கார்கே அவர்கள் பேசுபோது “ஸ்டாலின் தனி ஆள் அல்ல; உங்கள் பின்னால் இந்த நாடே நிற்கிறது” என்று குறிப்பிட்டதும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் ”பிரதமர் மோடியால் ஸ்டாலினை கட்டுப்படுத்தவும் முடியாது; வீழ்த்தவும் முடியாது” என்று குறிப்பிட்டதும் அதற்கான எடுத்துக்காட்டுகள்!
இடையில் இன்னும் ஒரே நாள்! தமிழ்நாட்டைக் காக்கும் உரிமைப் போருக்கு ஏப்ரல் 23 அன்று நாள் குறிக்கப்பட்டுள்ளது. அதன் வெற்றியை மே 4 அன்று நாம் மலை போல் காண்போம்!
இது பெரியாரின் சுயமரியாதை மண் என்பதை நிரூபிப்போம்!
“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்…” என்ற குரலை மீண்டும் கேட்போம்!
இது உறுதி! உறுதி!! உறுதியே!!
தலைவர்,
21.4.2026 திராவிடர் கழகம்

