“மின்மினிப் பூச்சிகளால் இருளை விரட்டிவிட முடியாது. பூச்சிகள் ‘பளிச்’ என சிறிதுநேரம் தெரியலாம். ஆனால், உடனே மங்கிவிடும். மின்சாரம்தான் நிரந்தர வெளிச்சத்தைத் தர முடியும். திமுக தலைமையிலான அணி மின்சாரத்தைப் போன்றது. அதன் பாதை நிரந்தரமானது” என திராவிடர் கழகத் தலைவர் கூறுகிறார். நடிகர் – அரசியல்வாதியான விஜய் பற்றி – “அவர் செய்திடும் அரசியல் ‘வீட்டிலிருந்து பணி செய்வது’ போன்றது” என்கிறார்.
நேர்காணல்: எம்.நச்சினார்க்கினியன், திருச்சி
93 வயதை எட்டிய நிலையிலும், கடந்த பல வாரங்களாக தமிழ்நாடு முழுவதும் சலிப்பின்றி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் ஆசிரியர் கி.வீரமணி. அவர் இதுவரை 17 பொதுத் தேர்தல்களுக்குப் பிரச்சாரம் செய்துள்ளார். நடைபெறவுள்ள தேர்தல் மாறுபாடானது என்கிறார். அரசியல் கட்சிகளுக்கிடையில் நடைபெறும் போட்டி அல்ல; இது கொள்கை ரீதியிலான போர். அவருடனான உரையாடலில், திராவிடர் கொள்கைகள் பற்றியும், ஜாதி ஒழிப்பில் நிலவிவரும் வரையறைகள், கூட்டாட்சி பற்றிய நெருக்கடி, இவை சார்ந்த திராவிடர் கழகத்தின் பணிகள் பற்றியும் கூறுகிறார். அதன் சுருக்கம்:
நீங்கள் பல பொதுத் தேர்தல்களில் பணி ஆற்றியிருக்கிறீர்கள். இந்தப் பொதுத் தேர்தலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் இதுவரை பார்த்த தேர்தல்களிலிருந்து நடைபெறவுள்ள தேர்தல் மாறுபட்டது. சிலர், ‘தொங்கு சட்டசபை’ அமையும் என்கின்றனர். நான் அப்படிக் கருதவில்லை.
மாநில ஆட்சியாளர்களைப் பற்றிய அதிருப்தி இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. மக்களும் அதனை அங்கீகரித்துள்ளனர். என்னுடைய பிரச்சாரங்களில் பெண்களின் ஆதரவு, அங்கீகாரம் அபரிமிதமாக உள்ளது. பெருமளவில் பிரச்சாரக் கூட்டங்களைக் கேட்க வருகிறார்கள். இத்தகைய விழிப்புணர்வினை முந்தைய தேர்தல்களில் நான் பார்க்கவில்லை.
திமுக முன்னணி, அதிமுக, விஜய்யின் த.வெ.க. – மூன்றுமே திராவிடர் கழக நிறுவனர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களை முன்னிறுத்துகின்றனவே! அத்தகைய செயல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களைக் குறிப்பிடாமல் யாரும் அரசியல் நடத்திட முடியாது. ஆனால், பெயரைப் பயன்படுத்துவது என்பது ஒரு நிலை; கொள்கை வழி நடப்பது என்பது வேறு. ‘திராவிட’ என்பது வெறும் உச்சரிப்பு சார்ந்ததோ, ஒரு முத்திரையோ அல்ல – அனைவருக்குமான சமத்துவம், சமூகநீதி, தமிழ்நாட்டின் தெளிவான பண்பாட்டு விழுமியமான எந்தவித ஆதிக்கத்தினை – அடக்குமுறையினையும் எதிர்த்து செயல்படுதல் ஆகியவை சார்ந்தது. இத்தகைய நிலைகளில் நல்லொருவரின் செயல்பாடுகள், திராவிடக் கொள்கைகளை வார்த்துக் கொண்டதற்கான அடையாளம்.
எடுத்துக்காட்டாக, ‘நீட்’ நுழைவுத் தேர்வு. தி.மு.க.வின் நிலைப்பாடு தெளிவானது. ‘நீட்’ நுழைவுத் தேர்வினை எதிர்த்து அதன் நிலைப்பாடு, போராட்டம் வெளிப்படையாகத் தெரிகிறது. அ.தி.மு.க. நீட் தேர்வினை எதிர்ப்பதாகக் கூறுகிறது. ஆனால், ஆபத்து வந்தபொழுது அதனை எதிர்க்கவில்லை.
டில்லிக்குச் சென்று எதிர்ப்பினைக் காட்ட முனையவில்லை. குறைந்தபட்சம், இப்பொழுது அவர்கள் ஏற்படுத்தியுள்ள கூட்டணிக்கான நிபந்தனையாகக் கூட அறிவிக்கவில்லை. கொள்கையைச் சொல்வது என்பது ஒருநிலை. அதற்காகப் போராடுவது என்பது வேற்றுநிலை.
த.வெ.க.வைப் பொறுத்த அளவில் அது இன்னும் ஒரு கட்சியாக – அமைப்பாக செயல்படத் துவங்கவில்லை. கொள்கை சார்ந்த செயல்பாடு இல்லை. அதனைப் பொறுத்த அளவில் கொள்கை என்பது அணிந்து கொள்ளக்கூடிய கண்ணாடி மட்டுமே! கொள்கைப் பின்புலன் கிடையாது. திட்டங்கள் இல்லை. திராவிட அரசியல் என்று சொல்வதற்கான சாரம் எதுவும் இல்லை.
‘நீட்’ நுழைவுத் தேர்வு, ஹிந்தித் திணிப்பு, இடஒதுக்கீடு, மாநில உரிமைகள், ஜாதி ஒழிப்பு – என எதிலும் கருத்து கிடையாது. ‘வீட்டிலிருந்து பணி ஆற்றுவது’ எனும் வேலைப் பண்பாடு தற்சமயம் உள்ளது. திரு. விஜய் அவர்கள் அந்தப் பண்பாட்டை அரசியலுக்குப் பயன்படுத்தி வருகிறார்.
அவர் அனைவரையும் அவரிடம் வரவேண்டும் எனக் கூறுகிறார். அரசியலில் அவர்தான் அனைவரிடமும் செல்ல வேண்டும். மின்மினிப் பூச்சிகள் இருளை விரட்ட முடியாது- ‘பளிச்’ என்று சற்றுநேரம் தெரிந்துவிட்டு முடிந்துவிடும். மின்சாரம்தான் நிலையான வெளிச்சத்தைத் தர முடியும்; தக்க வைக்க முடியும். அத்தகைய மின்சாரத்தைப் போன்றதுதான் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. அதனது பாதை நிலையானது; நிலைத்திருக்கக் கூடியது.
சீமான் நடத்திடும் நாம் தமிழர் கட்சிப் பெரியாரைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்தும், குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து தமிழ் தேசியப் பார்வையாளர்களும் தெரிகிறார்கள். திராவிடத்தின் தாக்கம் உள்ள நிலையிலும் அவர்களது குரல் கேட்கிறதே!
எந்தக் காலத்திலும், எந்த இயக்கத்திலும் காட்டிக் கொடுப்பவர்கள் இருப்பார்கள். வரலாறு முழுவதும் இந்த நிலை தொடர்கிறது. விபீஷணன் தன்னுடைய மன்னனுக்கு துரோகம் செய்தான். ‘சிரஞ்சீவி’ – நிரந்தரமானவன் எனும் பட்டத்தைப் பெற்றான். துரோகம் இழைப்பது காலங்காலமாக தொடர்ந்து வருகின்ற ஒன்று. முற்போக்கு இயக்கங்களை எதிர்ப்பவர்கள் சில நேரங்களில் கவனம் பெறுவதுண்டு. ஆண்டாண்டுக் காலமாக திராவிடர் இயக்கத்தை எதிர்த்து வந்த மா.பொ.சிவஞானம் கடைசியாக அதனுடடான ஆதரவு நிலைப்பாட்டில் அய்க்கியமானார். கலைஞர் (மு.கருணாநிதி) மா.பொ.சி.க்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு சிலையினை நிறுவினார். பயிர்கள் வளரும்பொழுது, களைகளும் சேர்ந்து வளரத்தான் செய்யும்.
பகுத்தறிவும், ஜாதி மறுப்பும் திராவிட இயக்கத்தின் மய்யக் கொள்கைகளாகும். தி.மு.க. அரசின் செயல்பாடு இந்த இரண்டு தளங்களில் எப்படி அளவீடு செய்யப்படுகிறது?
ஜாதி என்பது பெரும் கேடு விளைவிப்பது. வெளிப்படையாகச் சொன்னால் – ஜாதியானது சமூகத்தை மனிதத் தன்மையிலிருந்து விலகிச் செல்ல வைக்கிறது. திராவிட இயக்கமானது மனிதத் தன்மையினை நோக்கி மீட்டுச் செல்லுகிறது. இந்தப் போராட்டத்தை தி.மு.க. அரசு முன்னெடுத்துச் செல்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவது, 69 விழுக்காடு இடஒதுக்கீடு – அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாக்கப்பட்டது (அ.தி.மு.க. அரசு), பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் -இவையனைத்தும் ஜாதிப் பிரிவினைக்கு எதிரானவையே! அனைத்து ஜாதிக் குழந்தைகளும் ஒரே நிலையில் அமர்ந்து சாப்பிடுவது; கோயில்களில் ஓதுவார் பணிக்குப் பெண்களை நியமித்தது, ஆணவக் கொலையினைத் தடுத்திட சட்ட வடிவத்தை உருவாக்க முனைவது -இவையனைத்தும் தொடர்பில்லாத திட்டங்கள் இல்லை. ஜாதி ஒழிப்பில் தொடர்புள்ளவையே.
5000 ஆண்டுகாலமாக மக்கள் மனதில் நிலைத்துவிட்ட ஜாதி உணர்வினை 50 ஆண்டுகால ஆட்சி களைந்துவிட முடியுமா? ஜாதி என்பது வெளிப்படையாகத் தெரியும் கட்டமைப்பு அல்ல; தகர்த்து விடுவதற்கு – மூளையில் போடப்பட்ட விலங்கு போன்றது – கண்ணுக்குத் தெரியாதது; ஆழமாக வேரூன்றியுள்ளது. மக்களின் மனநிலையினை மறுக்கும் வகையில் சட்டங்கள் உருவாகிட வேண்டும். திராவிடர் கழகமும், அதன் தோழமை முற்போக்கு அமைப்புகளும் அதற்கான அடித்தளத்தினைக் கட்டமைத்து வருகின்றன.
நாடாளுமன்ற தொகுதி வரையறை முயற்சியை தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளிவிட்டது; ஆனால், கூட்டாட்சி முறையில் நிலவிடும் சமமின்மை தொடர்கிறது. ஆளும் கட்சியே அனைத்து 39 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், தமிழ்நாடு மாநில நலன்களைக் காப்பாற்றிட முடியவில்லை. மாநில சுயாட்சி பற்றிய விவாதம் எப்படிச் செல்ல வேண்டும்?
இந்தியா எப்பொழுதும் முழுமையான கூட்டாட்சி முறையிலானது அல்ல; சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அரையளவிலான – கூட்டாட்சி முறை சார்ந்தது. அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய வரைவுக் குழுவில் இருந்த ஆறு உறுப்பினர்களில் நான்கு பேர் உயர் ஜாதியினைச் சார்ந்தவர்கள். அதனால்தான் தந்தை பெரியார் அந்த சட்டத்தை சமூக நீதிக்கு எதிரானது என்று கூறினார்.
மாநில சுயாட்சியினை ஒழித்து மத்தியில் அதிகாரக் குவியலை உருவாக்கிடுவதே ஆர்.எஸ்.எஸ்.இன் திட்டம். ஆனால், அரசியலமைப்புச் சட்டம் அதற்கு எதிராக உள்ளது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். ‘ஒன்றிய அரசு’ எனும் கருத்தாக்கம் ஒரு சட்டப் புனைவே. ஒன்றிய அரசுக்கென்று தனியாக மக்கள் திரள் இல்லை. மாநிலங்களின் மூலமாகத்தான் ஒன்றிய அரசு செயல்பட முடியும். மாநில சுயாட்சி என்பதும், பிரிவினை என்பதும் வெவ்வேறு கோட்பாடுகளாகும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது இரண்டு கோட்பாடுகளையும் வேண்டுமென்றே இணைக்கப் பார்க்கிறது. இந்த நிலைகள் பற்றிய விழிப்புணர்வு தமிழ்நாடு அளவில் மட்டுமே இருந்த நிலையிலிருந்து பிற மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. கருநாடகம், வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், இன்னும் சொல்லப்போனால் உத்தரப் பிரதேசத்திலிருந்தும் கூட்டாட்சிக்கான கோரிக்கைகள் வெளிக் கிளம்பத் தொடங்கி விட்டன. மண்டல் குழு எப்படி சமூகநீதி பற்றிய உணர்வினை மக்களிடம் நாடு தழுவிய அளவில் உருவாக்கியதோ, அதே மாதிரி, கூட்டாட்சி பற்றிய கருத்தாக்கங்கள் உருவாகிடும் நிலை தற்பொழுது உள்ளது.
இன்றைய நிலையில் திராவிடர் கழகத்தின் பொருத்தப்பாடு என்ன?
முதலில் கருப்புச் சட்டை பற்றிய கருத்து. மதுரையில் முன்பொரு காலத்தில் கருப்புச் சட்டை பொதுவெளியில் எரிக்கப்பட்டது. ஆனால், இன்றோ தனது கட்சித் தொண்டர்களுக்கு கருப்புச் சட்டை தைத்துக் கொடுக்காத கட்சியே இல்லை – காங்கிரஸ் உள்பட – அதன் உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் கருப்புச் சட்டை அணிந்து செயல்படும் நிலையினைப் பார்க்க முடிகிறது. திராவிடர் கழகம் தனக்காக வாக்குக் கேட்கும் நிலை கிடையாது. நாங்கள் பொதுமக்களிடம் கருத்தியலையும், அபிப்பிராயத்தையும் உருவாக்குகிறோம்; அரசியல் தெளிவை ஏற்படுத்துகிறோம். மக்களின் உரிமைக்காகப் போராடுபவர்களை நோக்கி மக்களை நெறிப்படுத்துகிறோம்.
எங்களுக்கு கருப்புச் சட்டை அணிந்து கண்ணுக்குத் தெரியும் தொண்டர்கள் இருக்கிறார்கள். கருப்புச் சட்டை அணியாமல் – கண்ணுக்குத் தெரியாத – கொள்கை உணர்வுமிக்கோர் அனைத்துக் கட்சியிலும் உள்ளனர். எங்களுடைய திராவிடர் கழகம் ஒரு கட்சியல்ல; இது ஓர் இயக்கம். ஜாதிகள் இருக்கின்றவரை, பகுத்தறிவின் பாதுகாப்புத் தேவை நீடிக்கின்ற வகையில் திராவிடர் கழகத்தின் பணி தொடரும்; தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
நன்றி: ‘தி இந்து’ ஆங்கில நாளேடு
(தமிழில்: வீ.குமரேசன்)

