பிரதமர் மோடியின் பொய், புரட்டுகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலடி!

0 Min Read
தமிழ்நாட்டில் ரவுடியிசம் என்பதா?
• கருத்தை கருத்தால் எதிர்கொள்கிற மாநிலம் தமிழ்நாடு!
• பா.ஜ.க. ஆளும் வட மாநிலங்களில் தான்
‘பசுப் பாதுகாப்பு’ என்கிற பெயரில் ரவுடியிசம் நடக்கிறது…
• புல்டோசர் ஆட்சி நடக்கிறது…

சிதம்பரம்.ஏப். 19- என்.டி.ஏ. கூட்டணி சார்பில், கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் ரவுடியிசம் இருப்பதாக பேசியிருந்தார். அதற்கு திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் ரவுடியிசத்தத்திற்கு இன்னொரு பெயர் உண்டு. அதுதான், பசுப் பாதுகாவலர்கள். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்தான் புல்டோசர் ஆட்சி நடக்கிறது” என்று பதிலடி கொடுத்துப் பேசினார்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் தமீமுன் அன்சாரி அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க, சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், நேற்று (18.04.2026) மாலை 5 மணிக்கு, பரங்கிப்பேட்டை வண்டிக்கார தெருவில், பரப்புரை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பூ.சி.இளங்கோவன் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் கோவி.பெரியார் தாசன் அனைவரையும் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் தேர்தல் பரப்புரைக்காக, குறைந்த விலையில் தயார் செய்யப்பட்டிருந்த மூன்று புத்தகங்களை அறிமுகம் செய்து உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், மாவட்டத் துணைச் செயலாளர் முருகன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் கலையரசன், பேரூராட்சி மன்றத் தலைவர் தேன்மொழி சங்கர், ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் துரை, ஜெயபால், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி சங்கர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.எஸ்.முகமது யூனிஸ், பேரூர் தி.மு.க.செயலாளர் முனவர் உசேன், ம.தி.மு.க. பொருளாளர் கடலூர் கிழக்கு கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை 6 மணிக்கு நிகழ்விடத்துக்கு வருகை தந்தார். அவருக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பரங்கிப்பேட்டை என்பது, பெரும்பான்மையாக இசுலாமிய மக்கள் வாழக்கூடிய பகுதி. கழகத் தலைவர் இந்தப் பகுதிக்கு வருகை தந்து நீண்ட… நாட்கள் ஆகிவிட்டதால், மிகுந்த எதிர்பார்ப்புடன் இஸ்லாமியர்கள் பெண்கள் மற்றும் குடும்பத்தினருடன் வருகை தந்து, கழகத் தலைவரின் வருகையையும், அவரது உரையையும் செவிமடுக்க ஆவலுடன் காத்திருந்தனர். நிறைவாக கழகத் தலைவர் பரப்புரை வாகனத்தின் மீது இருந்து உரையாற்றினார்.

அவர் தமது உரையில், “நீண்ட… இடைவெளிக்குப் பின்னால் இங்கே உங்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். பரங்கிப்பேட்டை எனக்கு புதிதல்ல. ஏனென்றால், நானும் கடலூர்காரன்தான். இங்கே இஸ்லாமியப் பெருமக்களும் உண்டு! மீனவப் பெருமக்களும் உண்டு! அவர் களோடு என்றைக்கும் எனக்கு நல்ல உறவும் உண்டு. அந்த உறவை புதுப்பித்துக்கொள்ளத்தான் இங்கே வந்திருக்கிறேன்” என்று மிகுந்த உற்சாகமாக தொடங்கினார். கழகத் தலைவரின் உற்சாகத்தை மக்களும் அப்படியே பிரதிபலித்தனர்.

தொடர்ந்து, “இந்த மண்ணில் தாய்மார்களின் உழைப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு காலத்தில் பெண்கள் படிக்கக்கூடாது என்று ஆக்கியிருந்தார்கள். 110 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றத்தை கொடுத்தது, திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி தான்!” என்றும், அந்த நீதிக்கட்சி முன்னெடுத்த சமூக நீதியால் தான், ‘மனுதர்ம’ அடிப்படையில் இருந்த இந்த சமூகம் ‘சமதர்ம’ அடிப்படைக்கு மாறியது” என்றார்.

மேலும் அவர், மனுதர்மத்தின் அடிப்படையில் எல்லா பெண்களும் நமோ சூத்திரர்கள் தான். அப்படிப்பட்ட பெண்களை கை தூக்கி விடுவது போலத்தான்; மகளிர் உரிமைகளை பெற்றுத் தருவதற்காக திராவிடர் இயக்கம் பல்வேறு திட்டங்களை கொடுத்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சி தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான மாதம் ரூபாய் 1000 ஆகும்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறிவிட்டு, அந்த நலத்திட்டத்தின் தலைப்பில் இருக்கும் ‘உரிமை’ என்ற சொல்லுக்கு, ஆழமான விளக்கம் தந்தார். மேலும் அவர்,  “கண்களை எரியச் செய்யும் புகை நிறைந்த விறகு அடுப்புக்கு கலைஞர் விடை கொடுத்து மகளிர் துயர் துடைத்தார்” என்றும், “மறுபடியும் பிரதமர் மோடி விறகு அடுப்புக்கு கொண்டு வந்து விட்டார்” என்றும், திராவிட மாடலையும் ஆரிய மாடலையும் ஒப்பிட்டுக் காட்டி விளக்கினார்.

தொடர்ந்து, “தேர்தல் களத்தில் யார் யாரோ வந்து, அது தருகிறேன், இது தருகிறேன், என்று சொல்கிறார்கள். ஆனால், யார் சொல்வதை நம்ப வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர்” என்று சிலருக்கு குழப்பங்களை தெளிவுபடுத்தினார். அடுத்து, 33% மகளிர் இட ஒதுக்கீடு என்னும் பெயரில் தொகுதி மறு சீரமைப்பு என்ற மாநில உரிமைகளை பறிக்கும் சூழ்ச்சித் திட்டத்தை தி.மு.க. தீரத்துடன் எதிர் கொண்டதை பெருமிதத்துடன் எடுத்துரைத்தார். பின்னர் அ.தி.மு.க.வை அமித்ஷா தி.மு.க. என்றும், அடிமை தி.மு.க. என்றும் விமர்சனம் செய்தார். மேலும் அவர், “தமிழ்நாட்டில் காவிக்கு வேலையே கிடையாது” என்று கூறிவிட்டு, அதற்கு, கலவரம் செய்யும் எண்ணத்தோடு பாசிசக் கும்பல் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவதை பிரச்சினையாக்கிய போது, அதை தமிழ்நாடு அரசு எதிர்கொண்ட விதத்தை சான்றாக்கினார். பின்னர், மாநில உரிமையை பாதுகாப்பதில் தொகுதி மறு வரை மசோதா பிரச்சனையில் தி.மு.க. வின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி, மத நல்லிணக்கம் மற்றும் “அனைவருக்கும் அனைத்தும்” இந்த தத்துவம் தொடர, உதயசூரன் சின்னத்துக்கு வாக்களிப்பீர்” என்று தமது உரையை நிறைவு செய்தார். இறுதியாக, கழக ஒன்றியத் தலைவர் கு.தென்னவன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

சீர்காழி

அதைத்தொடர்ந்து, பரங்கிப்பேட்டை மக்களிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் ம.தி.மு.க. வேட்பாளர் செந்தில் செல்வன் அவர்களை ஆதரித்து பரப்புரை செய்யப் புறப்பட்டார். இரவு 7:55 மணிக்கு கழகத் தலைவர் நிகழ்விடத்துக்கு வருகை தந்தார். அப்போது திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கழகத் தலைவர் வருகை தந்ததும், இசைக் கலைஞரும், பாடகருமான கருங்குயில் கணேசன், “எத்தனை எத்தனை  தலைவர் வந்தாலும் இவரைப் போல வருமா?” என்ற ஆசிரியர் பற்றிய பாடலைப் பாடி உற்சாகமான; உணர்ச்சிகரமான வரவேற்பு அளித்தார். மயிலாடுதுறை திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுக்கு, மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் பூவை இளமாறன் அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தார். மயிலாடுதுறை தோழர் கி.தளபதிராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பித்தார்.

கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், தி.மு.க. உயர்மட்ட செயல்திட்டக் குழு உறுப்பினரும் தொகுதி பொறுப்பாளருமான குத்தாலம் பி.கல்யாணம், தேர்தல் ஆணையக் குழு பொறுப்பாளர் முத்து தேவேந்திரன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், குத்தாலம் ஒன்றியச் செயலாளர் தி.சபாபதி, மயிலாடுதுறை நகரத் தலைவர் சீனி முத்து, நகரச் செயலாளர் பூ.சி.காமராஜ், ஒன்றியத் தலைவர் சாமிதுரை, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரெ.செல்லதுரை, தங்க செல்வராஜ், கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பூ.பாண்டுரங்கன், சீர்காழி ஒன்றியச் செயலாளர் கடவாசல் செல்வம், குத்தாலம் ஒன்றியச் செயலாளர் தி.சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். நிறைவாக கழகத் தலைவர் 8 மணிக்கு உரையாற்றினார்.

அவர் தமது உரையில், பெண்களை படிக்க வைப்பதற்காக கடந்த 50 ஆண்டுகளில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு என்று படிப்படியாக திராவிடர் இயக்க ஆட்சிகள்  அளித்த நலத்திட்ட உதவிகள் மூலம் படிப்படியாக படித்து, இன்றைக்கு கல்லூரி படிப்பை ஊக்குவிக்கும் வகையில், ‘புதுமைப்பெண்’ திட்டத்தில், மாதம் ரூபாய் 1000 தருவதை விவரித்தார். ஊதியம் இல்லாத; உழைப்புக்கு அங்கீகாரமும் இல்லாத; பெண்களுக்கு அவர்களது உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், ஒரு‌அரசு உரிமைத்தொகை வழங்குவதை இந்தப் பின்னணியுடன் எடுத்துரைத்தார். தத்துவ பின்னணியுடன் கூடிய இந்த விளக்கம் மக்களை குறிப்பாக பெண்களை உணர்ச்சி வசப்பட்டு கைகளைத் தட்ட வைத்தது. ‘நீட் தேர்வு கட்டாயம்; பூம்புகார் புறக்கணிப்பு; கீழடி அறிக்கை வெளியிடப்படாமல் இருப்பது இவையெல்லாம் பண்பாட்டு படையெடுப்புகள். இவைகளை மீட்க வேண்டும் என்றால், திராவிட மாடல் அரசு தான் தொடர வேண்டும்” என்று, செய்திகளை ஆழமான கருத்துகளாக மாற்றி மக்கள் மனதில் பதிய வைத்தார்.

திராவிடர் கழகம்

மேலும் அவர், “திராவிட மாடல் அரசின் ஆட்சியில் ஜாதி, மத வேறுபாடுகள் இல்லை! எல்லோரும் ஓர் குலம்! எல்லோரும் ஓர் நிறை! யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்றே அமைதியாக வாழ்ந்து வருகிறோம். இது நீடிக்க வேண்டுமென்றால் திராவிட மாடல் அரசு தான் தொடர வேண்டும்” என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். தொடர்ந்து, ‘புது யுகம் படைக்கும் தாமரை – 2026’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கைப் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, “இதில் ‘சிறுபான்மை’ என்ற ஒரு சொல் உண்டா?” என்றொரு கேள்வியை மக்கள் முன் வைத்தார். மேலும் அவர், என் டி ஏ கூட்டணி சார்பில், கோவை கொடிசியா மைதானத்தில் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் ரவுடியிசம் இருப்பதாக பேசியிருந்தார். அதற்கு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் ரவுடியிசத்தத்திற்கு இன்னொரு பெயர் உண்டு. அதுதான், பசுப் பாதுகாவலர்கள். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்தான் புல்டோசர் ஆட்சி நடக்கிறது. தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருக்கிறது” என்று பதிலடி கொடுத்துப் பேசினார்.

கழகத் தலைவருடன் கவிஞர் கனிமொழி எதிர்பாராத சந்திப்பு

சீர்காழி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் செந்தில் செல்வன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து முடிந்த பிறகு, கழகத் தலைவர் பரப்புரைக் குழுவுடன் நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தாயார் பிறந்த ஊரான ஆக்கூரைக் கடக்கும்போது, திமுகவின் துணைப் பொது செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி அவர்கள், ஆக்கூர் பகுதியில், சீர்காழி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் நிவேதா எம்.முருகன் அவர்களை ஆதரித்து பரப்புரை செய்து கொண்டிருந்தார். இதனால் கழகத் தலைவரின் வாகனம் தொடர்ந்து பயணம் செய்ய இயலாமல் நிறுத்தப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வந்த வாகனம் நின்று கொண்டிருப்பதை பின்னர் தெரிந்தகொண்ட கவிஞர் கனிமொழி அவர்கள், சீர்காழி தொகுதி மாவட்ட செயலாளர் மற்றும் வேட்பாளருமான நிவேதா எம்.முருகன் உடன் வர, வாகனத்தில் இருந்து இறங்கி, சாலையில் சற்று தூரம் நடந்து வந்து, கழகத் தலைவர் இருந்த வாகனத்தில் ஏறி, மகிழ்ச்சி பொங்க ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். கழகத் தலைவரும், அவருக்கு பெருமிதம் பொங்க கவிஞர் கனிமொழி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார்.
சில மணித்துளிகள் சந்திப்புக்கு பிறகு மீண்டும் சாலையில் இறங்கி தனது வாகனத்துக்கு சென்றார் கவிஞர் கனிமொழி. முன்னதாக, கவிஞர் கனிமொழி அவர்களின் பரப்புரையைக் கேட்க வந்திருந்த தி.மு.க. தோழர்களும், பொதுமக்களும் கழகத் தலைவர் வாகனத்தில் அமர்ந்திருந்ததை கண்டு, அளவற்ற உற்சாகத்துடன், “ஏய்… அய்யா வந்திருக்காங்க…” “அய்யா வந்திருக்காங்க…” என்று, வாகனத்தின் உள்ளிருந்த கழகத் தலைவருடன் ஒருவர் பின் ஒருவராக என்று ஏராளமானோர் சுயபடம் (செல்ஃபி) எடுத்து மகிழ்ந்தனர். எதிர்பாராத இந்நிகழ்வால், அந்த இடமே சற்று நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. (ஆக்கூர், 18.04.2026)

தொடர்ந்து, “ஒன்றிய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை சரியாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது! முதல் இடத்திற்கு வந்தால், பரிசு வழங்க வேண்டுமா? தண்டனை வழங்குவதா? என்று கேள்வி கேட்டு, மகளிர் இட ஒதுக்கீடு என்கிற பெயரில் தொகுதி மறு வரை என்கின்ற தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற மசோதாவை விவரித்து பேசினார். அது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தும் பேசினார். அடுத்து, இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்து வருவதை சுட்டிக்காட்டி, “நீங்கள் கட்சியைத்தான் அடமானம் வைத்து விட்டீர்கள். தமிழ்நாட்டையும் அடமானம் வைப்பதை அனுமதிக்க முடியாது. இதையெல்லாம் தடுக்கக்கூடிய ஒரு முதலமைச்சர் இருக்கிறார் என்றால், அவர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!” என்று, சொல்லி முடிப்பதற்குள் மக்களின் பலத்த ஆரவாரமும் கைதட்டலும் ஒன்றிணைந்து எழுந்து அடங்கின. நிறைவாக இப்படிப்பட்ட மகத்தான சாதனைகளை செய்த திராவிட மாடல் அரசு தொடர, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து செந்தில் செல்வன் அவர்களை வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள், மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு, கழகத் தலைவரின் உரையைக் கேட்டுத் தெளிந்தனர்.

நிறைவாக, மாவட்டச் செயலாளர் பூவை.இளமாறன் நன்றியுரை கூறி, நிகழ்ச்சி நிறைவு செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *