பெண்களை கேடயமாக வைத்து, திட்டத்தைச் செயல்படுத்த மோடி அரசு முயற்சி! அரசியல் ஆதாயத்துக்கும், கூட்டாட்சியின் குரலை நெரிக்கவுமே தொகுதி மறுசீரமைப்பு! மக்களவையில்–
புதுடில்லி, ஏப். 18– மக்களவையில், 131ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவை குறித்து, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி
எம்.பி. அவர்கள் ஏப்ரல் 17–ஆம் தேதி ஆற்றிய உரை வருமாறு:–
இதுதான் நாடாளுமன்றத்துக்கு
தரும் மரியாதையா?
“இன்று இந்த அவையின் முன் நான் நிற்பது, வெறும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது எனது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதியாகவோ மட்டுமல்ல; மாறாக, எங்கள் மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலேயே, ‘உங்கள் வாக்குகளின் மதிப்பு குறையும்; இந்த நாடாளுமன்றத்தில் உங்கள் குரலின் வலிமை மழுங்கடிக்கப்படும்’ என்ற நிலைக்கு ஆளாக்கப்படும் தமிழ்நாட்டின் 8 கோடி மக்களின் குரலாகவே நான் இங்கு நிற்கிறேன்.
மேலும், நாம் இங்கு ஒரு மசோதாவைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போது, நேற்று இரவு 10 மணியளவில்நீங்கள் அதைப்பற்றிய நோட்டிபிகேஷனை வெளியிட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
இங்கு மசோதாவை விவாதிப்பதற்காக எங்களை எல்லாம் அழைத்துவிட்டு அந்த அறிவிக்கையை வெளியிட்டதன் அவசியம்தான் என்ன? அதன் தேவைதான் என்ன? இதன் அர்த்தம் என்ன? இந்த அவையின் மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதைதான் என்ன?
கூட்டாட்சி முறை மீதான கடுமையான தாக்குதல்!
அவசரகதியில் கூட்டப்பட்டதும், எனது மாநிலத்திலும் பிற பல மாநிலங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தல்களைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டதுமான இந்தச் சிறப்பு அமர்வில், அரசாங்கம் மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
எனது கட்சியின் சார்பாகவும், எனது மாநிலத்தின் சார்பாகவும், இம்மசோதாக்களை எதிர்த்துப் பேசுவதற்காகவே நான் இங்கு நிற்கிறேன்.
பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு ஆதரவானவை போல வேடமிட்டு வரும் இம்மூன்று மசோதாக்களும், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் மீது தொடுக்கப்படும் மிகக் கடுமையான தாக்குதல் ஆகும்.
தொகுதி மறுவரையறையின் வரலாறு
நான் மிக அடிப்படையிலிருந்து தொடங்க விரும்புகிறேன்; ஏனெனில், இந்த அரசாங்கம் எப்போதும் பொதுமக்களுக்கு வரலாற்றைப் பற்றிய புரிதல் இருக்காது என்ற நம்பிக்கையிலேயே செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் தொகுதி மறுவரையறை (Delimitation) செய்யப்பட்டதன் வரலாறு என்பது, அதன் மய்யக்கருவாக ஒரு வாக்குறுதியின் (Promise) வரலாற்றையே கொண்டுள்ளது.
அந்த வாக்குறுதி, நாடாளுமன்றத்தால் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒன்றாகும். பாரதிய ஜனதா கட்சியின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான முன்மாதிரி மாநிலங்களாகத் திகழும் அய்ந்து மாநிலங்கள் இவை.
இந்தியக் குடியரசு நிறுவப்பட்ட சிறிது காலத்திலேயே, அதாவது 1952–ஆம் ஆண்டிலேயே தொகுதி மறுவரையறைக்கான செயல்முறை தொடங்கப்பட்டது. மக்கள் தொகையில் சார்ந்த ஒரு பிரச்சினைக்கு, அரசியலமைப்பு ரீதியான ஒரு தீர்வாகவே இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, மக்கள் தொகை வளர்ச்சியையும், அதற்கேற்ற நியாயமான பிரதிநிதித்துவத்தையும் எவ்வாறு சமநிலையில் வைத்திருப்பது என்பதற்கான தீர்வாக அது அமைந்தது.
நம் அனைவரும், அரசியலமைப்பின் 82 மற்றும் 170 ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தோம். 1973–ஆம் ஆண்டில், மூன்றாவது தொகுதி மறுவரையறை ஆணையம் தனது பணிகளை நிறைவு செய்தபோது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்தன.
பெருகிவரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் ‘தேசிய மக்கள் தொகை கொள்கை’ அறிமுகப்படுத்தப்பட்டது; ஏனெனில், அக்காலகட்டத்தில் மக்கள் தொகை மிகத் தீவிரமாகப் பெருகி, ஒரு வெடிப்பு நிலையை எட்டியிருந்தது.
அதன் விளைவாக, 1976–ஆம் ஆண்டில் தொகுதி மறுவரையறைப் பணிகளை முடக்கி வைக்கும் (Freeze) முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 1971–ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்த முடக்கம் 25 ஆண்டுகாலத்திற்கு நீடிக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சினையை அங்கீகரித்து, மசோதாவைக் கொண்டுவந்தது காங்கிரஸ் அரசு, அதாவது திருமதி இந்திரா காந்தியின் அரசுதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
1976–ஆம் ஆண்டின் 42ஆவது திருத்தத்தில், நாடாளுமன்றம் மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 543 ஆகவே வைத்திருந்தது. இந்த முடக்கம் ஒரு தொழில்நுட்ப விவரம் அல்ல. அது ஒரு அரசியலமைப்புக்கு உட்பட்ட உடன்படிக்கை; தேசியக் கொள்கையின் நோக்கங்களுக்கு இணங்குவதால் தங்களின் அரசியல் குரலை இழக்க நேரிடாது என்று இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் அளிக்கப்பட்ட ஒரு வாக்குறுதி.
தேசத்துக்கு ஒத்துழைத்த
தென்னிந்திய மாநிலங்கள்
காலப்போக்கில், தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கருநாடகா மற்றும் ஆந்திரா ஆகியவை பள்ளிகள், மருத்துவமனைகள், பெண்கள் நலம் ஆகியவற்றில் முதலீடு செய்யத் தொடங்கின.
நமது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் தொடர்ச்சியான அழைப்புக்கு நாங்கள் செவிசாய்த்தோம். நாங்கள் அதற்குக் கீழ்ப்படிந்தோம். எங்கள் கருவுறுதல் விகிதங்கள் குறைந்தன. எங்கள் குடும்பங்கள் சிறியதாகின.
சில மாநிலங்கள், குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களும் பஞ்சாப் போன்ற பிற மாநிலங்களும் இந்த சமூகக் குறியீடுகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன என்பதையும், மற்ற சில மாநிலங்கள் பின்தங்கியுள்ளன என்பதையும் புரிந்துகொண்டு, அந்த நேரத்தில் தென்னிந்திய மக்களின் குரல்களுக்குச் செவிசாய்த்த ஓர் ஒன்றிய அரசு இருந்தது.
வாஜ்பாயை பாராட்டுகிறோம்!
ஆம், நீங்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்றால், நான் உங்களையும் பாராட்ட வேண்டும். எப்போதும் எங்களின் குறை கண்டுபிடிக்கும் உங்களைப் போன்றவர்கள் நாங்கள் அல்ல. உங்களைப் பாராட்டுவதற்கு ஏதேனும் ஒன்று இருக்கும்போது, நாங்கள் எப்போதும் பாராட்டுவோம்.
எனவே, வாஜ்பாய் அரசாங்கத்தின் கீழ், நாடாளுமன்றம் 84ஆவது திருத்தத்தின் மூலம், 2026க்குப் பிறகு வரும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை அந்த முடக்கத்தை நீட்டித்தது. அதாவது மேலும் 24 ஆண்டுப் பாதுகாப்பு கொடுத்தது.
ஏனென்றால் அப்போதைய நாடாளுமன்றம் தனது கூட்டு ஞானத்தால் இந்த அநீதிக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டது.
உங்களுக்கு நீங்களே முரண்படுகிறீர்கள்!
இப்போது நாம் ஏன் இடங்களை 850 ஆக அதிகரிக்க வேண்டும்? எந்த அடிப்படையில்? மக்கள்தொகை அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அரசின் அறிக்கை கூறுகிறது. ஆனாலும், நீங்கள் தொகுதி மறுவரையறை செய்ய 15 ஆண்டுகள் பழமையான 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்துகிறீர்கள். 850 இடங்கள் விஷயத்தில் நீங்களே உங்களுக்கு முரண்படுகிறீர்கள்.
இடங்களை 850 ஆக உயர்த்திய பிறகு, பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கூட கிடைக்காமல் போகலாம்.
தமிழ்நாட்டின் சாதனைகள்
தமிழ்நாட்டில் உள்ள ஒரு குடும்பத்தைப் பற்றி இந்த அவையில் நான் சொல்ல விரும்புகிறேன், ஒரு தாயும் தந்தையும், முதல் தலைமுறை எழுத்தறிவு பெற்றவர்கள். அவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்ததால், அய்ந்து, ஆறு குழந்தைகள் அல்ல, இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றெடுத்தனர். ஏனெனில், நாட்டிற்கு அதுவே சரியான செயல் என்று அரசாங்கம் அவர்களிடம் கூறியது.
மேலும், தங்கள் பிள்ளைகள்ஒரு சிறந்த வாழ்க்கையைப் பெற வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். இதுவே தமிழ்நாட்டின் மற்றும் தென் இந்திய மாநிலங்களின் கதையாகும். இன்று, தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) 1.6 ஆக உள்ளது; இது பிரான்ஸை விடவும், ஆஸ்திரேலியாவை விடவும், உங்கள் நண்பரான அமெரிக்காவை விடவும் குறைவான அளவாகும்.
மக்கள் தொகையியல் வல்லுநர்கள் ‘மக்கள் தொகையியல் மாற்றம்’ (Demographic Transition) என்று குறிப்பிடும் ஒரு நிலையை நாம் எட்டிவிட்டோம். நமது மக்கள் தொகை தற்போது நிலையாக உள்ளது. மனித மேம்பாட்டின் எந்தவொரு அளவுகோலைக் கொண்டு பார்த்தாலும், தமிழ்நாட்டுப் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாகத் திகழ்கின்றனர்.
சாதித்த தமிழ்நாட்டுக்கு
நீங்கள் சொல்வது என்ன?
தமிழ்நாடு ஒரு வெற்றி மாடலாகும். இதற்காக நாடு பெருமை கொள்ள வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அந்தக் குடும்பத்திடம் இந்த அரசாங்கம் என்ன சொல்கிறது?
“மன்னிக்கவும், நீங்கள் ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டீர்கள். நாங்கள் சொன்னதைக் கேட்டு நடந்ததன் மூலம் நீங்கள் ஒரு தவறை இழைத்துவிட்டீர்கள். நீங்கள் இந்த நாட்டின் மீது அக்கறை கொண்டிருந்ததால், இதைக் கேட்டு தவறு செய்துவிட்டீர்கள். நீங்கள் நாட்டிற்கு முன்னுரிமை கொடுத்ததால், நீங்கள் துன்பப்பட வேண்டும். நாங்கள் உங்கள் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கப் போகிறோம்” என்று சொல்கிறது அரசாங்கம். இது நியாயமா?
1971 முதல் உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகை 120% அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் தொகை 15% மட்டுமே அதிகரித்துள்ளது. மேலும், நேற்று உள்துறை அமைச்சர் கூறியதற்கு மாறாக, மசோதாவின் 4ஆவது பிரிவு, சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெளிவாகக் கூறுகிறது.
பெரியார் கற்றுக் கொடுத்த நீதி!
உள்துறை அமைச்சர் ஒன்று சொல்கிறார், மசோதாவோ வேறொன்று சொல்கிறது. இப்போது நம்மிடம் இருக்கும் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011–ஆம் ஆண்டு. ஆனால் 2002 இல் நமது அரசியலமைப்புத் திருத்தம் 2026 வரை இருக்கிறது
2011 சூத்திரத்தின்படி, உத்தரப் பிரதேசம் 13 இடங்களைப் பெறுகிறது. தமிழ்நாடு 11 இடங்களை இழக்கிறது. ஆனால் நேற்று உள்துறை அமைச்சர், 50% அதிகரிப்பதன் மூலம் தமிழ்நாடு அதாவது, 39 இடங்களைக் கொண்ட மாநிலம் 59 இடங்களைப் பெறும் என்கிறார்.
நான் சொல்கிறேன். நீதி என்பது ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியானதைக் கொடுப்பது அல்ல, நீதி என்பது ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குத் தேவையானதையும், அவர்கள் தகுதியானதையும் கொடுப்பதே என்று நமது சித்தாந்தத் தலைவர் பெரியார் எங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்.
ஆனால் வாய்ப்புக்கேடாக, உங்கள் அரசாங்கம் தனக்குத் தேவையானது மற்றும் தனக்கு உரியது எதுவோ, அதுவே முழு தேசத்திற்கும் உரியது மற்றும் முழு தேசத்திற்கும் தேவையானது என்று நினைக்கிறது.
இரண்டு சட்டச் சிக்கல்கள்!
இதைத் தவிர, இந்த மசோதாவில் உள்ள இரண்டு முக்கியமான சட்டச் சிக்கல்களை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
நாடாளுமன்றம் சட்டப்படி நிர்ணயிக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி வரையறை செய்யப்படும் என்று அரசியலமைப்பு மசோதா கூறுகிறது. இது தெளிவற்றதாகவும், எல்லாவற்றையும் திறந்தே வைப்பதாகவும் உள்ளது.
இதன் நேரடிப் பொருள் என்னவென்றால், நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதோ, அந்தக் கட்சியே இந்த நாட்டின் தேர்தல் வரைபடத்தை வரைய எந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. இன்று நீங்கள்
2011–அய்த் தேர்ந்தெடுக்கலாம், நாளை நீங்கள்
2031–அய்த் தேர்ந்தெடுக்கலாம், மறுநாள் அது 1991–ஆக இருக்கலாம். இது சிந்திக்காமல் செயல்படுவதையோ அல்லது இந்த நாட்டின் மீது தனது சொந்த நோக்கங்களைத் திணிக்கத் தீர்மானித்த மனதையோ காட்டுகிறது.
இரண்டாவதாக, தொகுதி மறுவரையறை ஆணையத்திற்கு, இந்தியத் தலைமை நீதிபதியுடனோ, எந்த மாநில அரசுடனோ கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்ற ஒப்புதல் எதுவும் பெறாமல், ஒன்றிய அரசால் முழுமையாக நியமிக்கப்பட்ட ஒரு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமை தாங்குவார்.
எல்லை நிர்ணய மசோதாவின் 5(4)ஆவது பிரிவின்படி, மாநிலங்களுக்கு ‘இணை உறுப்பினர்கள்’ என்று அழைக்கப்படுபவர்கள் வழங்கப்படுகிறார்கள்; இவர்கள் அய்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) மற்றும் அய்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) ஆவர். இவர்களுக்கு வாக்களிக்க அனுமதி இல்லை; ஆணையத்தின் முடிவுகளில் கையெழுத்திட அனுமதி இல்லை; பார்வையாளர்களாக ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய இவர்களுக்கு அனுமதி இல்லை.
மாநிலம் முழுவதும் 50% அதிகரிப்பு இருக்கும் என்று உள்துறை அமைச்சர் கூறினார். எல்லை நிர்ணய ஆணையம், உள்துறை அமைச்சரின் பரிந்துரையை முழுமையாக ஏற்காத பட்சத்தில் என்ன நடக்கும் என்பதை நான் அறிய விரும்புகிறேன். நீங்கள் வழக்கமாகச் செய்வது போலவே, எல்லை நிர்ணய ஆணையத்தின் மீதும் உங்கள் அதிகாரத்தை வலுக்கட்டாயமாகச் செலுத்தி (bulldoze) நசுக்கப் போகிறீர்களா? அல்லது, எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவுகளை அரசாங்கம் எதிர்த்து வழக்குத் தொடருமா?
ஏனெனில், 2026–ஆம் ஆண்டின் எல்லை நிர்ணய மசோதாவின் 10(2) பிரிவானது, எல்லை நிர்ணய ஆணையம் தனது உத்தரவுகளை வெளியிட்ட பிறகு, அந்த உத்தரவுகளை எந்த நீதிமன்றத்திலும் கேள்விக்குள்ளாக்க முடியாது என்று கூறுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நியாயமான எல்லை நிர்ணயத்தை நாடி நாங்கள் எங்கு செல்வது? எங்களுக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
சட்டமன்றங்களால் ஏன் ஏற்கப்படவில்லை?
நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத் தைப் பாதிக்கும் அரசியலமைப்புத் திருத்தங்கள், நாடாளு மன்றத்தால் நிறைவேற்றப்படுவதுடன் மட்டுமல்லாமல், குறைந்தது பாதி மாநில சட்டமன்றங்களாலும் ஒப்புதல் அளிக்கப்பட்டு (ratified) உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்பின் 368ஆவது பிரிவு கூறுகிறது.
இந்த எல்லை நிர்ணய மசோதா நியாயமானது என்பதில் இந்த அரசாங்கத்திற்கு அவ்வளவு நம்பிக்கை இருக்குமானால், ஏன் இந்த மசோதாக்களைத் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்போ, கேரள சட்டமன்றத்தின் முன்போ, கர்நாடக சட்டமன்றத்தின் முன்போ அல்லது வேறு எந்தச் சட்டமன்றத்தின் முன்போ தாக்கல் செய்யவில்லை?
இந்த அரசாங்கம் ‘கூட்டுறவு கூட்டாட்சி’ (cooperative federalism) தத்துவத்தை உண்மையாகவே நம்பியிருக்குமானால்—பல்வேறு மேடைகளில் ஆயிரக்கணக்கான முறை அவர்கள் முழங்கிய அந்த முழக்கத்தை—ஏன் மாநில சட்டமன்றங்களை எதிர்கொள்ளாமல் ஓடி ஒளிகிறீர்கள்?
நீங்கள் இதுகுறித்து ஒரு கூட்டத்தையாவது கூட்டியிருக்கிறீர்களா? முதலமைச்சர்களுடன் கலந்தாலோசித்திருக்கிறீர்களா? மாநில அரசுகளுடன் பேசியிருக்கிறீர்களா? குறைந்தபட்சம் அதற்கான முயற்சியையாவது எடுத்திருக்கிறீர்களா?
தோல்வியையே அரசியல்
ஆதாயமாக்கும் பா.ஜ.க.!
செப்டம்பர் 2023–இல், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை இந்த அரசாங்கம் மிகுந்த ஆரவாரத்துடன் நிறைவேற்றியது. பிரதமர் இதனை ஒரு ‘நாகரிக ரீதியான கடமை’ (civilizational commitment) என்று வர்ணித்தார். ஆனால், அதே சட்டத்தில் அவர்கள் ஒரு நிபந்தனையைச் சேர்த்தார்கள். 2021–ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகுதான் பெண்கள் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று கூறினார்கள்; ஆனால் அந்த மக்கள் தொகை கணக்கெடுப்புஅடுத்த ஆண்டு வரை நடைபெறாது என்ற நிலை உள்ளது.
2021–ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெற வேண்டியிருந்தது? 2021–ஆம் ஆண்டிலேயே நடைபெற வேண்டியிருந்தது.
ஆனால் என்ன நடந்தது? கோவிட் (Covid) பெருந்தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டியதாயிற்று என்று நீங்கள் கூறினீர்கள். பின்னர், ‘நிர்வாகக் காரணங்களால்’ (operational reasons) எங்களால் கணக்கெடுப்பை நடத்த முடியவில்லை என்று கூறினீர்கள். இறுதியாக, அதுகுறித்து ஏதும் பேசாமலேயே விட்டுவிட்டு, நீங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமலே விட்டுவிட்டீர்கள்.
ஆக, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான, நவீன மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் கண்டுபிடித்த நாடான நம்மால், இந்த நாட்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த முடியவில்லை. இப்போது அரசியல் ரீதியாக வசதியாக இருப்பதால், இந்திய ஜனநாயகத்தின் வரைபடத்தை மீண்டும் வரைய 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.
அவர்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்துவிட்டு, இப்போது அந்தப் பழைய கணக்கெடுப்பைக் கொண்டு தங்களுக்குத் தாங்களே வெகுமதி அளித்துக்கொள்கிறார்கள். நான் உங்களை உண்மையிலேயே பாராட்டுகிறேன். தனது தோல்வியைக் கூட ஒரு அரசியல்ஆதாயமாக மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரே அரசாங்கம் நீங்கள்தான்.
12 ஆண்டு மெத்தனமும் இரு வாரம் பொறுமையில்லாத அவசரமும்!
அய்ந்து மாநிலத் தேர்தல்களுக்கு மத்தியில் இந்தச் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருப்பதைப் பாருங்கள். நேரத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், அரசியலில் நேரம் என்பதுதான் எல்லாமே. இந்த மசோதாவின் நேரம் மிகவும் அப்பட்டமான, மூச்சடைக்க வைக்கும் அரசியல் ரீதியானது. இதன் துணிச்சலைக் கண்டு நான் கிட்டத்தட்ட பிரமித்துவிட்டேன்.
இந்தக் கூட்டத்தொடரைத் தேர்தல்களுக்குப் பிறகு நடத்துமாறு எதிர்க்கட்சிகள் அனைத்தும் உங்களிடம் கோரிக்கை விடுத்தன. ஆனால் நீங்கள் அதைப் புறக்கணித்தீர்கள்; பெண்களுக்கு உரிமைகளை வழங்குவதும், இந்த மசோதாக்களைக் கொண்டுவருவதும் மிகுந்த அவசரத் தேவை என்று நேற்று எங்களிடம் கூறினீர்கள். உங்களால் இரண்டு வாரங்கள் கூட காத்திருக்க முடியவில்லை.
ஆனால் நீங்கள் 2014–ஆம் ஆண்டிலேயே ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவருமாறு எதிர்க்கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து உங்களிடம் வலியுறுத்தி வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் உங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். எங்கள் தலைவர், அதாவது எங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்த மசோதாவை நிறைவேற்றக் கோரி, தி.மு.க.வின் மகளிர் அணி டில்லியில் பேரணி ஒன்றையும் நடத்தியது. நாடாளுமன்றத்தில் நாங்கள் இந்தப் பிரச்சினையை ஆயிரக்கணக்கான முறை எழுப்பியுள்ளோம்; ஆனால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இதன் அவசரத் தன்மையை நீங்கள் கண்டுகொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ இல்லை.
ஆனால் இன்றோ, உங்களால் இரண்டு வாரங்கள் கூட காத்திருக்க முடியவில்லை; அதோடு, பெண்களுக்குரிய உரிமைகள் மீது உங்களுக்கு அக்கறை இருப்பதாக நாங்கள் நம்ப வேண்டும் என்றும் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.
பெண்களை மனிதக்
கேடயமாக்கும் அவலம்!
நீங்கள் பேசுவது ஏதோ அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றியது அல்ல. இது குறிப்பிட்ட சில மாநிலங்களில், தேர்தல் ரீதியாக உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு தந்திரோபாயமே ஆகும்; ஏனெனில், பெரும்பாலான மாநிலங்களில் உங்கள் கட்சிக்குச் சிறப்பான வெற்றி கிடைக்கப் போவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
2023–ஆம் ஆண்டின் 106ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமான, ‘பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை’ (Women’s Reservation Act), இங்குள்ள பெரும்பாலான எதிர்க்கட்சிகள் வரவேற்றன; தி.மு.க.வும் அதனை வரவேற்றது. ஆனால், அப்போதும் நாங்கள் ஒன்றைச் சொன்னோம்; இப்போதும் அதையே மீண்டும் சொல்கிறோம்: பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை, தொகுதி மறுவரையறை (Delimitation) நடைமுறையுடன் முடிச்சுப்போடுவது ஒரு சூழ்ச்சியாகும். ஒன்று இல்லாமல் மற்றொன்று சாத்தியமாகாத வகையில், மிகத் திட்டமிட்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ‘நீங்கள் தொகுதி மறுவரையறையை எதிர்த்தால், பெண்களின் உரிமைகளையே எதிர்க்கிறீர்கள்’ என்று பா.ஜ.க.வால் பிரச்சாரம் செய்ய முடியும். ‘தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அழிக்கும் முயற்சியை எதிர்த்தால், நீங்கள் பெண்களுக்கு எதிரானவர்கள்’ என்று அவர்களால் சித்தரிக்க முடியும்.
பா.ஜ.க. தனது தேர்தல் ஆதாயங்களுக்காக, இந்தியாவின் பெண்களை ஒரு ‘மனிதக் கேடயமாகவே’ (Human Shield) பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
பெண் பிரதிநிதித்துவத்தில்
உண்மையான அக்கறை இல்லை!
இந்தியாவிலேயே மிக உயர்ந்த எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ள, நாட்டிலேயே மிக உயர்ந்த பெண் தொழிலாளர் பங்களிப்பைக் கொண்டுள்ள, மாநகராட்சி மன்றங்களிலும் மாநில சட்டமன்றங்களிலும் போராடி வெற்றி பெற்ற தமிழ்நாட்டின் பெண்கள், தங்கள் உரிமை அபகரிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டார்கள்.
அவர்களும், இந்த நாட்டின் பெண்களும் வேறு எதற்கும் காத்திருக்காமல், தற்போதுள்ள 543 இடங்களில் இன்றே இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியானவர்கள். மேலும், உள்துறை அமைச்சரே, தொகுதி மறுவரையறைக்கான முன் நிபந்தனையை நீக்குவதற்காக, சட்டப்பிரிவு 334 A–அய் ஏன் உங்களால் எளிமையாகத் திருத்த முடியவில்லை?
தொகுதி மறுவரையறை இல்லாமல், 2029 தேர்தல் முதல் சுழற்சி முறையில் தற்போதுள்ள தொகுதிகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை ஏன் உங்களால் வழங்க முடியவில்லை? பெண்களின் பிரதிநிதித்துவத்தில் உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால், பாதை தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கிறது. ஏன்? அதை ஏற்க ஏன் மறுக்கிறீர்கள்? இந்த நாட்டின் பெண்கள் பல பத்தாண்டுகளாக, பல நூற்றாண்டுகளாக அரசியல் அதிகாரம் இன்றி வாடி வருகிறார்கள்.
எங்களுக்கு முன்னால் ஒரு ரொட்டி இருக்கிறது. நாங்கள் பசியால் வாடுகிறோம் என்கிறோம். அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என கேட்கிறோம்.
ஆனால் அரசாங்கமோ, “இல்லை, இல்லை, நீங்கள் இந்த ரொட்டியைத் தொந்தரவு செய்ய முடியாது. நாங்கள் அதைத் தொட முடியாது. நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் ஒரு பெரிய ரொட்டியை சுட்டு, அதைக் கொண்டு வந்து, அதில் ஒரு சிறிய பகுதியை உங்களுக்குத் தருவோம்” என்கிறது. இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இதுதான் உங்கள் நாகரிக அர்ப்பணிப்பா? இந்த நாட்டின் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களைப் பாதுகாத்தார்கள். அவர்கள் இந்த நாட்டைப் பாதுகாத்தார்கள். அவர்கள் தேசத்திற்காகத் தியாகம் செய்திருக்கிறார்கள்.
ஆனாலும், நீங்கள் அதை தொகுதி மறுவரையறை யுடன் இணைக்க விரும்புவதால், அவர்களின் கடின உழைப்பு அனைத்தும் அங்கீகரிக்கப்படாமலும் மதிக்கப்படாமலும் போகிறது.
எதிர்தரப்பில் உள்ள என் நண்பர்கள் நான் பயத்தை உருவாக்குவதாகக் குற்றம் சாட்டுவார்கள். ஆனால் இந்த மசோதாவின் உண்மையான ஆபத்து என்னவென்றால், நமது அரசியலமைப்பையும் அதன் 368ஆவது பிரிவையும் திருத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது.
மூன்றில் இரண்டு பங்கு என்பது ஒரு சிறிய எண் அல்ல. இந்த மாபெரும் தேசம் முழுவதிலுமிருந்து பரந்த ஒப்புதல் இல்லாமல், எந்தவொரு பிராந்தியமும், எந்தவொரு மொழிக்குழுவும், எந்தவொரு சமூகமும் இந்தியாவின் அடிப்படை விதிகளை மாற்ற முடியாது என்பதை உறுதி செய்வதற்காக இது வடிவமைக்கப்பட்டது. ஆனால் இந்தத் தொகுதி வரையறைக்குப் பிறகு என்ன நடக்கும்?
தற்போதைய நிலையில், இந்த அவையில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPக்கள்) உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்பது 362 ஆகும். உள்துறை அமைச்சர் அளித்த உறுதிமொழியின்படி—அதாவது மாநிலங்கள் முழுவதும் 50% இடங்கள் அதிகரிக்கப்படும் என்ற அடிப்படையில்—மொத்த இடங்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 850 வரை உயர்த்தப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
விரிவாக்கப்பட்ட 800க்கு மேற்பட்ட இடங்களைக் கொண்ட மக்களவையில், உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் மட்டும் இணைந்து சுமார் 400 முதல் 420 இடங்களை வகிக்கும். 815 இடங்களைக் கொண்ட இந்த அவையில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கான வரம்பு 544 இடங்களாகும். குஜராத், இமாச்சலப் பிரதேசம் போன்ற சிறிய, பா.ஜ.க.–சார்பு மாநிலங்களின் இடங்களையும் சேர்த்தால், அந்த அரசியல் கணக்கீடு மிகவும் அச்சமூட்டும் வகையில் தெளிவாகிறது.
அதாவது, தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, பஞ்சாப், ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம் அல்லது வடகிழக்கு மாநிலங்களிலிருந்து ஒரே ஒரு வாக்கு கூட இல்லாமல், இந்தியாவின் மய்யப்பகுதியில் உள்ள மாநிலங்கள் மட்டும் இணைந்து அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தேவையான பெரும்பான்மையை எட்டிவிட முடியும். ஆக, இதுதான் உங்கள் திட்டம்.
பா.ஜ.க.வின் எதிர்காலத்
திட்டத்துக்கான கருவி!
இதன் மூலம் தென் மாநிலங்களின் கூட்டுப் பேரம் பேசும் திறன் (collective bargaining power) திறம்படக் குறைக்கப்படும். அரசியலமைப்பில் அடிப்படை மாற்றங்களைச் செய்வதற்குக்கூட, அந்த மாநிலங்களின் குரல்கள் இனித் தேவைப்படாது என்ற நிலை உருவாகும். இந்த தேசம் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாகவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று உறுதியாக நம்பும் மக்களின் மீது, ஒன்றிய அரசின் கொள்கைகள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் சூழலை இது உருவாக்கும்.
இந்த மசோதா, உங்கள் எதிர்காலத் திட்டங்களுக்கான ஒரு முன்னுரையாகவும், அவற்றைச் சாத்தியமாக்கும் ஒரு கருவியாகவும் காட்சியளிக்கிறது. மேலும், இதன் விளைவாகத் தென்னிந்திய மாநிலங்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் செல்வாக்கை இழக்கும் அபாயத்தையும் எதிர்கொள்ள நேரிடும்.
குடியரசுத் தலைவர் தேர்தலிலும் எதிரொலிக்கும்!
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் மதிப்பை, இந்திய அரசியலமைப்பின் 55ஆவது சரத்து (Article 55) தான் முறைப்படுத்துகிறது. இந்த மசோதாவில் மக்கள் தொகைக்கான வரையறையை மாற்றுவது, குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பையும் நேரடியாக மாற்றியமைத்துவிடும்.
தொகுதி மறுவரையறை மூலம் கூடுதல் இடங்களைப் பெறும் மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, தேர்தலில் அதிக வாக்கு எடையை வழங்குவது, குடியரசுத் தலைவர் தேர்தலில் நிலவும் கூட்டாட்சிச் சமநிலையைப் பெரிதும் பாதிக்கிறது.
இந்த மசோதா மிகவும் தெளிவற்றதாகவும், குழப்பத்தை விளைவிப்பதாகவும் உள்ளது. இதில் எவ்விதத் தெளிவோ அல்லது உறுதியான நோக்கமோ இல்லை.
பா.ஜ.க.வின் கணக்கீட்டு அரசியல்!
மக்களவையில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை ஓர் உதாரணமாகக் கொண்டு இதை ஆராய்வோம். இந்த மசோதாவின்படி, 2011–ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையாகக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது; அதன்படி தற்போது நமக்கு 39 இடங்கள் உள்ளன. மக்களவையின் மொத்த இடங்கள் 543–லிருந்து மாற்றப்படாமல் அப்படியே நீடித்தால், தமிழ்நாட்டிற்கான இடங்களின் எண்ணிக்கை 32–ஆகக் குறைந்துவிடும். ஆனால், நேற்று உள்துறை அமைச்சர் குறிப்பிட்டது போல, மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 850–ஆக உயர்த்தப்பட்டால், தமிழ்நாட்டிற்கு 48 இடங்கள் கிடைக்கும்.
அதே வேளையில், உள்துறை அமைச்சர் கூறியது போல, அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்த்தப்பட்டால், தமிழ்நாட்டிற்கு சுமார் 59 இடங்கள் கிடைக்கும். இப்போது நான் உள்துறை அமைச்சரிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்:
மேலே குறிப்பிடப்பட்ட மூன்று சாத்தியக்கூறுகளில் எது உண்மையில் நடைமுறைக்கு வரும்? 2011–ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே அடிப்படையாகக் கொள்ளப்படுமா? அல்லது 2011–ஆம் கணக்கெடுப்பின் அடிப்படையில் இடங்கள் அதிகரிக்கப்படுமா? அல்லது உள்துறை அமைச்சர் கூறிய மற்ற வழிமுறைகள் பின்பற்றப்படுமா?
இவை மூன்றும் முற்றிலும் மாறுபட்ட எண்ணிக் கைகளைக் குறிக்கின்றன. இந்த மூன்றில் எது உண்மை யில் நிகழப்போகிறது என்பது குறித்து, நாங்களும் நாட்டு மக்களும் தெளிவு பெற விரும்புகிறோம்.
இந்த அவையில் நடைபெற்ற பல விவாதங்களின் போது, பல்வேறு வாக்குறுதிகளும் உறுதிமொழிகளும் வழங்கப்பட்டதை நாங்கள் பார்த்திருக்கிறோம்; ஆனால் அவை அனைத்தும் டில்லியின் மாசுபட்ட காற்றில் கரைந்து மறைந்துவிட்டன—அவற்றில் ஒன்றுகூடச் செயல்வடிவம் பெறவில்லை.
எனவே எத்தகைய உறுதிமொழியாக இருந்தாலும், அதை வெறும் வாய்மொழி வாக்குறுதியாக விட்டுவிடாமல், இந்த மசோதாவின் ஓர் அங்கமாகவே இணைத்துச் சட்டப்பூர்வமாக்குமாறு நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், இந்த அவையின் தளத்தில் தற்போதைய அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளில் சுமார் 80 முதல் 90 சதவீதம் வரையிலானவை, ஒருபோதும் முழுமையாக நிறைவேற்றப்படுவதில்லை என்பது தெளிவாகிறது.
வழிகாட்டும் முதலமைச்சர் தளபதி!
இந்தத் தொகுதி மறுவரையறையை எதிர்த்துப் போராடுவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனநாயகக் கட்சிகள் மற்றும் மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளார். நாங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டங்களையும் சென்னையில் நடத்தியுள்ளோம். நாங்கள் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். நாங்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
யாருடைய எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறதோ அந்த மாநிலங்களைக் கலந்தாலோசிக்கும் நாகரிகம் கூட இல்லாமல், போதுமான முன்னறிவிப்பு இன்றி, நிலைக்குழு பரிசீலனை இன்றி கூட்டப்பட்ட சிறப்பு அமர்வில் இந்த மசோதாக்களை நாடாளுமன்றம் அவசரமாக நிறைவேற்றக் கூடாது என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
பிரதமர் எங்களைச் சந்திக்கவில்லை. தேசிய வளர்ச்சி கவுன்சில் அரசு ஒரு கூட்டத்தைக் கூட்ட வில்லை. இதே காரணங்களுக்காகவே இருக்கும் மாநிலங்களுக்கிடையிலான குழுவும் கூட்டப்படவில்லை.
மாறாக, அவர்கள் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வைக் கூட்டி, இந்த மசோதாக்களைச் சில நாட்களுக்குள் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளனர். இது கூட்டுறவுக் கூட்டாட்சி அல்ல. இது வெறும் கணக்குப்போடும் அரசியல்.
ஒன்றிய–மாநில அரசுகள்
சமமானவை!
1994–ஆம் ஆண்டு எஸ்.ஆர். பொம்மை எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில், மாநிலங்களுக்குத் தனித்துவமான அரசியலமைப்பு ரீதியான இருப்பு உண்டு என்றும், இந்த நாட்டு மக்களின் அரசியல், சமூக, கல்வி மற்றும் கலாச்சார வாழ்வில் அவற்றுக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அவை ஒன்றிய அரசின் செயற்கைக்கோள்களோ அல்லது முகவர்களோ அல்ல. 2006–ஆம் ஆண்டு ராமேஷ்வர் பிரசாத் எதிர் இந்திய யூனியன் வழக்கில், கூட்டாட்சியின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால், சட்டமன்ற– நிர்வாக அதிகாரம் ஒன்றிய அரசால் இயற்றப்படும் எந்தவொரு சட்டத்தின் மூலமும் அல்ல, மாறாக அரசியலமைப்பின் மூலமே ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் பிரிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத்தான் அரசியலமைப்பு செய்கிறது.
நமது அரசியலமைப்பின் கீழ், மாநிலங்கள் தங்களின் சட்டமன்ற அல்லது நிர்வாக அதிகாரத்திற்காக எந்த வகையிலும் ஒன்றிய அரசைச் சார்ந்திருக்கவில்லை. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் சமமானவை. வாய்ப்புக்கேடாக, இந்த அரசாங்கம் மாநிலங்களின் உரிமைகளை அங்கீகரிக்கவில்லை.
தி.மு.க. முன் வைக்கும்
ஆலோசனைகள்!
தி.மு.க. வெறுமனே எதிர்ப்பதற்காக இங்கு இல்லை. நாங்கள் ஆளவும், பாதுகாக்கவும், புதிய யோசனைகளை முன்வைக்கவும் இங்கு இருக்கிறோம்.
தற்போதுள்ள 543 இடங்களைக் கொண்ட மக்களவை யில், பெண்களுக்கான மூன்றாவது இட ஒதுக்கீடு மசோதாவை சுழற்சி முறையிலான இட ஒதுக்கீட்டின் மூலம் இந்த அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறைப் பணியிலிருந்து அதை முழுமையாகப் பிரிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடும் தி.மு.க.வும் கோருகின்றன. அப்போதுதான் எங்களால் இந்த மசோதாவை ஆதரிக்க முடியும்.
பா.ஜ.க.வின் அரசியல் நலன்களுக்குச் சேவை செய்யும் ஒரு தொகுதி மறுவரையறைப் பணிக்காக இந்தியப் பெண்கள் காத்திருக்க வைக்கப்படக்கூடாது. இந்த மூன்று மசோதாக்களையும் உடனடியாகத் திரும்பப் பெற்று, அனைத்து மாநிலங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
25 ஆண்டுகால தேர்தல் வரைபடத்தை 48 மணி நேரத்தில் ஒரு சிறப்பு அமர்வின் மூலம் அவசரமாக நிறைவேற்ற வேண்டாம். எந்தவொரு சட்டமும் இயற்றப்படுவதற்கு முன்பு, தொகுதி மறுவரையறைக்கான கட்டமைப்பு குறித்து விவாதிக்க அனைத்து மாநில முதலமைச்சர்களையும் கொண்ட ஒரு அரசியலமைப்பு மாநாட்டைக் கூட்ட வேண்டும்.
கருப்புக்கொடியும்
நீலக்கொடியும்
இந்தியா அந்த ஆலோசனையைப் பெறத் தகுதியானது. மேலும், நமது முதலமைச்சர், நமது கட்சித் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்கு, தனது ஆட்சிக்காலத்தில் ஒரு தொகுதி கூட இழக்கப்படாது என்று உறுதியளித்துள்ளார்.
சபாநாயகர் அவர்களே… நேற்று நாடாளுமன்றத்தில், எங்கள் தி.மு.க.வின் அவை முன்னவர், எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் கருப்புக் கொடியை ஏற்றினார் என்று குறிப்பிட்டபோது, கருப்புக் கொடியோ அல்லது நீலக் கொடியோ – எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறி நீங்கள் அதை நிராகரித்தீர்கள்.
நீங்கள் அதை சாதாரணமாகப் புறந்தள்ளினீர்கள். ஆம்; கருப்புக் கொடியோ அல்லது நீலக் கொடியோ – எதுவாக இருந்தாலும் முக்கியமல்ல என்று கூறி நீங்கள் அதை ஒதுக்கித் தள்ளினீர்கள்.
கருப்புக் கொடி என்பது போராட்டத்தின் சின்னம். நாங்கள் எழுந்து நின்று போராடுவோம்; ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்பதை உணர்த்தும் ஒரு சின்னம் அது. மேலும், நீலக் கொடி என்பது டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் தனது கட்சிக் கொடிக்காகத் தேர்ந்தெடுத்த நிறம் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
‘கல்வி பெறுங்கள், கிளர்ச்சி செய்யுங்கள், ஒன்றுபடுங்கள்’ என்று நமக்குக் கற்றுக்கொடுத்த அந்த மாமனிதர் – நீங்கள் முக்கியமற்றது என்று புறந்தள்ளிய அதே நீல நிறத்தைத்தான் – தனது கொடிக்காகத் தேர்ந்தெடுத்தார். அந்த மாமனிதர்தான் நமது அரசியலமைப்பை எழுதினார்; ஆனால், நீங்கள் அந்த அரசியலமைப்பை நீர்த்துப்போகச் செய்ய முயல்கிறீர்கள்; நாங்களோ அதைப் பாதுகாக்க முயல்கிறோம்.
நேற்று பிரதமர் எங்களைப் கருப்பு நிற உடையில் கண்டபோது, அவருக்கு ஒரு ‘கருப்புப் பொட்டு’ (black dot) அல்லது ‘திக்கா’ (tikka) நினைவுக்கு வந்ததாகக் கூறினார். அது தீய சக்திகளை விரட்டுவதற்காக இடப்படுவது. திருஷ்டிப் பொட்டோ, தீய சக்திகளோ அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
இந்துத்துவத்தைப் பாதுகாப்பதற்காக இங்கே அமர்ந்திருக்கும் உங்களுக்கு, ‘காளி’ தேவி நினைவுக்கு வராதது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. கருப்பு நிற ஆடையை அணியும் அந்த காளி தேவி! அந்தப் பெண் சக்தி! அகங்காரம், ஆணவம் மற்றும் அறியாமை ஆகியவற்றை விரட்டுபவளாகப் போற்றப்படும் அந்தப் பெண் தெய்வம்!
போராட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் தேர்ந்தெடுத்த அதே கருப்பு நிறம்தான், எங்கள் சித்தாந்த தலைவரான பெரியாரின் நிறமும் கூட. அவர் நமக்கு சுயமரியாதையைக் கற்றுக்கொடுத்தார். நாம் ஒருபோதும் யாருக்கும் தலைவணங்கக் கூடாது என்று கற்றுக்கொடுத்தார். இறுதி மூச்சு வரை போராட வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார். நாங்களும் இறுதி வரை போராடுவோம்.
இந்த மசோதாக்களை நாங்கள் எதிர்க்கிறோம். மாநிலங்கள் என்பவை ஒரு ஒற்றையாட்சி அரசின் வெறும் அலகுகள் அல்ல; மாறாக, கூட்டாட்சி அமைப்பின் சமமான பங்காளிகள் என்று முழங்கிய எங்கள் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் அவர்களின் பெயரால் நாங்கள் இதை எதிர்க்கிறோம்.
மேலும், இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒரு புதிய மசோதாவை உருவாக்கி, பரந்த அளவிலான கலந்தாலோசனைகளுக்காகக் குறைந்தது மூன்று மாதங்களாவது பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று – இன்றைய ஒரு கட்டுரையில்கூட வலியுறுத்தியுள்ள எங்கள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பெயராலும் நாங்கள் இதை எதிர்க்கிறோம்.
இந்தத் தருணத்தில் தேவைப்படுவது அவசர கதி அல்ல – ஆழ்ந்த சிந்தனையே; விரைந்து முடிவெடுப்பது அல்ல – நிதானமான விவாதமே என்று அவர் கூறுகிறார்.
அரசியலமைப்பு ஒரு நம்பிக்கைப் பட்டயமாக நிலைத்திருக்க வேண்டுமாயின், அதன் திருத்தங்கள் — நியாயம், நிதானம் மற்றும் குடியரசின் நீடித்த ஒருமைப்பாட்டின் மீதான பற்றுறுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளால் வழிநடத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு போராடும்… தமிழ்நாடு வெல்லும்” இவ்வாறு கனிமொழி கருணாநிதி எம்.பி. உரை நிகழ்த்தினார்.

