எதிர்க்கட்சியினர் என்றாலும் எல்லோருக்கும் கொள்கைப் பார்வை வேண்டும்; பதவி-சுயநலப் பார்வை கூடாது! திருமதி சசிகலா அவர்களின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது!
முதுகெலும்பு உள்ள முதலமைச்சரின் துணிவும், தெளிவும் மிக்க போர்க்குரல்! எதிர்க்கட்சியினர் என்றாலும் எல்லோருக்கும் கொள்கைப் பார்வை வேண்டும்; பதவி-சுயநலப் பார்வை கூடாது! திருமதி சசிகலா அவர்களின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகின்ற நேரத்திலேயே, அதைப்பற்றிக் கவலைப்படாமல், திட்டமிட்டே, தேர்தலில் வாக்கு களைப் பயன்படுத்துவதற்கு மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை ஒரு மூலதனமாகப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக, ஆர்.எஸ்.எஸ். –பா.ஜ.க. மோடி அரசு, திடீரென்று நாடாளுமன்றத்தைக் கூட்டியிருக்கிறது.
முதுகெலும்பும், துணிவும், தெளிவும் உள்ள
நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர்!
நாடு தழுவிய அளவில் விவாதம் செய்யப்பட வேண்டிய ஒரு பிரச்சினையை, ஓரிரண்டு நாள்களிலேயே முடித்து, வாக்கெடுப்பை நடத்திவிடலாம் என்ற பாரதிய ஜனதா அரசின் அவசர முடிவிற்கு, தன்னுடைய முழு எதிர்ப்பை, தமிழ்நாட்டினுடைய எதிர்ப்பை, இது தேர்தல் காலமாக இருந்தாலும்கூட, அதைப்பற்றிக் கவலைப்படாமல், சுயமரியாதை மிக முக்கியம், மாநில உரிமைகள் – மாநில சுயாட்சி – ஒன்றியத்தில் கூட்டாட்சி முக்கியம் என்பதால், கருப்புக் கொடி ஏற்றியும், அந்தச் சட்ட மசோதா நகலை எரித்தும், நாடாளுமன்றம் நடக்கக்கூடிய காலகட்டத்திலேயே பதிவு செய்துள்ளார் முதுகெலும்பும், துணிவும், தெளிவும் உள்ள நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு,
முதலமைச்சரின் வேண்டுகோள்!
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் முதலமைச்சர் அவர்கள் உரையாற்றும்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். “மற்ற பிரச்சினைகளில் நீங்கள் எப்படி இருந்தாலும், இந்த ஒரு பிரச்சினையிலாவது தமிழ்நாட்டி னுடைய உரிமைகளுக்குத் துரோகம் செய்யாதீர்கள்! இதிலாவது நீங்கள் சரியான முடிவெடுங்கள்! இது கடைசி வாய்ப்பு உங்களுக்கு! நீங்கள் இந்தச் சட்ட மசோதாவை எதிர்த்து, உங்கள் எதிர்நிலைப்பாட்டினைத் தெளிவாகக் காட்டுங்கள்! அண்ணாவினுடைய தத்துங்களான மாநில உரிமைகள், மாநில சுயாட்சி என்பதைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டாலும்கூட, இந்தப் பிரச்சினையில் தெளி வான முடிவெடுங்கள்! இது ஒரு கட்சியினுடைய பிரச்சி னையல்ல – தமிழ்நாட்டி னுடைய ஒட்டுமொத்த உரிமைப் பிரச்சினையாகும்” என்று அந்த வேண்டுகோளில் தெரி வித்திருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல், ‘தொகுதி மறுவரையறையால், தமிழ்நாட்டின் இடங்கள் கூடுமே தவிர, அதனால் பாதிப்பில்லை’ என்று, மீண்டும் டில்லிக்குத் தொடர்ச்சி யாகச் சரணம் பாடியிருப்பது, இதுவரை அவர் செய்த துரோகங்களிலேயே உச்சக்கட்ட துரோகமாகும்.
இதைத் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் என்றைக்கும் மறக்கமாட்டார்கள். அதுமட்டுமல்ல, தான் யார் என்பதைப் பச்சையாக அடையாளப்படுத்திக் கொண்டு, அடிமைச் சாசனத்தில் மீண்டும் ஒருமுறை கையெழுத்துப் போட்டு உறுதி செய்துள்ளார் எடப்பாடி யார்!
ஒன்றை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டவேண்டும். பல கட்சிகள் இப்போது தேர்தலில் போட்டியிடுகின்றன.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த
திருமதி. சசிகலா அவர்களைப் பாராட்டுகிறோம்!
திருமதி.சசிகலா அவர்கள், செல்வி. ஜெயலலிதா அவர்க ளோடு அரசியலில் உடன் இருந்தவர். அவர் இப்போது ஒரு தனிக் கட்சியைத் தொடங்கி, தி.மு.க.வை எதிர்த்தாலும்கூட, தொகுதி மறுவரையறை பிரச்சினையில், அவர் எந்த அளவிற்கு அரசியல் தெளிவுள்ளவர் என்பதற்கு அடையாளமாக, “ஒன்றிய பா.ஜ.க. அரசின் தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டிற்கு துரோகமிழைப்பதாகும். ஹிந்தி பேசக்கூடிய மாநிலங்களை வலுப்படுத்தும்; தமிழ்நாட்டின் உரிமைகளை வலுவிழக்கச் செய்யக் கூடியதாகும். ஆகவே, இதனை ஏற்பதற்கு இல்லை” என்று நேற்றைக்கு அவர் தெளிவாகப் பேசியிருக்கிறார். அதனை நாங்கள் வரவேற்கிறோம். அதற்காக திருமதி.சசிகலா அவர்களைப் பாராட்டு
கிறோம்!
காரணம், தி.மு.க.வை எதிர்க்கக் கூடிய ஒரு கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டின் நலத்தை முன்னிலைப்படுத்தக் கூடிய அளவிற்கு, அவருக்கு உள்ள தெளிவும், துணிவும் பழனிசாமி அவர்களுக்கு இல்லையே என்பதை நினைக்கும்போது, வேதனை யாகவும், வெட்கமாகவும் இருக்கிறது.
எதிர்க்கட்சியினருக்கு வெறும் பதவிப் பார்வை,
சுயநலப் பார்வை இருக்கக்கூடாது!
ஒரு நீண்ட கால கட்சி, அண்ணாவின் பெயரிலுள்ள ஒரு கட்சி, “லேடியா, மோடியா” என்று கேட்ட ஒரு தலைமை யையெல்லாம் மறந்துவிட்டு, டில்லிக்கு வெறும் தலையாட்டி பொம்மையாக இருப்பது எவ்வளவு கேவலமானது!
அனைத்து எதிர்க்கட்சியினருக்கும் கொள்கைப் பார்வை வேண்டுமே தவிர, வெறும் பதவிப் பார்வை, சுயநலப் பார்வை இருக்கக்கூடாது.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

