விவசாயக் கழிவுகளிலிருந்து சாலை அமைக்கும் ‘பயோ-பிட்டுமன்’ தொழில்நுட்பத்தை சி.எஸ்.அய்.ஆர் உருவாக்கியுள்ளது. நெல் வைக்கோல் எரிப்பைத் தடுத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் தரும் முயற்சி குறித்து விரிவாக பார்க்கலாம்.
விவசாயக் கழிவுகளிலிருந்து சாலை அமைக்கும் ‘பயோ-பிட்டுமன்’ தொழில்நுட்பத்தை சி.எஸ்.அய்.ஆர் உருவாக்கியுள்ளது. நெல் வைக்கோல் எரிப்பைத் தடுத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் தரும் முயற்சி குறித்து விரிவாக பார்க்கலாம்.
விவசாயக் கழிவுகள், குறிப்பாக நெல் வைக்கோல், பெரும்பாலும் வயல்களிலேயே எரிக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவது நாம் அறிந்ததே. ஆனால், அதே வைக்கோலை கொண்டு சாலை போடலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? மத்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) இந்த வியக்கத்தக்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
வேளாண் கழிவுகளிலிருந்து உள்நாட்டிலேயே ‘பயோ-பிட்டுமன்’ (Bio-Bitumen) தயாரிக்கும் இந்த முறை, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CRRI), இந்திய பெட்ரோலிய நிறுவனம் (CSIR-IIP) ஆகியவை இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன.
சேகரிக்கப்படும் விவசாயக் கழிவுகள் ‘பைரோலிசிஸ்’ (Pyrolysis) என்ற அறிவியல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு, உயிரி எண்ணெயாக (Bio-oil) மாற்றப்படுகின்றன. பின்னர், இந்த எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு, சாலை அமைக்க பயன்படும் பிட்டுமனாக (தார்) மேம்படுத்தப்படுகிறது. இந்த பயோ-பிட்டுமன், சாதாரண பெட்ரோலியம் சார்ந்த பிட்டுமனுக்குப் பதிலாக 30 சதவீதம் வரை சாலை போடும் பணியில் பயன்படுத்தப்படலாம். இதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இதன் மூலம் ஆண்டுக்குச் சுமார் ரூ.4,000 கோடி வரையிலான அந்நியச் செலாவணி மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயிர் எச்சங்களை எரிப்பதைத் தவிர்த்து, அதை விற்பனை செய்வதால் கார்பன் உமிழ்வு பெருமளவு குறையும். இது கிராமப் புறங்களில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, விவசாயிகளுக்குக் கழிவுகளிலிருந்தே கூடுதல் வருமானத்தையும் பெற்றுத் தரும்.
இதுகுறித்து மக்களவையில் ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விரிவான பதிலளித்தார். இத்தொழில்நுட்பத்தின் வணிக ரீதியான உற்பத்திக்காக ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள 14 தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் மாற்றப்பட்டு உள்ளது. மேலும், இந்த பயோ-பிட்டுமன் கொண்டு அமைக்கப்படும் சாலைகளுக்கான முறையான தரக் கட்டுப்பாட்டு விதிகளை (Quality Control Standards) உருவாக்க, ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய தர நிர்ணய அமைவனம் ஆகியவற்றுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
