மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ‘வேட்பாளரோ, வேட்பாளரின் சார்பில் பேசுபவரோ மதம், ஜாதி, இன ரீதியாக வாக்கு சேகரிக்கவோ அல்லது மற்றவர்களுக்கு வாக்கு செலுத்துவதைத் தடுக்க நினைப்பதோ தவறு. பிரசாரத்தின் வழியே மக்களிடம் வெறுப்பு, பகைமையைத் தூண்டிவிடுவதும் குற்றம்’ என்கிறது. ஆனால், இதையெல்லாம் சிறிதும் கண்டுகொள்ளாத பா.ஜ.க-வினர் பலரும் தங்களது பிரச்சாரங்களில் மதத்தை முன்னிறுத்தி, வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். தேர்தல் ஆணையமோ, பா.ஜ.க-வினரின் வெறுப்புப் பிரசாரங்களைக் கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு, வாய் திறக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தொடங்கி பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர் மேற்கொண்ட மதவெறுப்பு பிரச்சாரங்களின் தொகுப்பு இங்கே…
‘‘வாக்கு ஜிகாத்தா… ராம ராஜ்ஜியமா என்பதை மக்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விளையாட்டில்கூட சிறுபான்மையினருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். இட ஒதுக்கீட்டை மதரீதியாகப் பகிர்ந்தளிப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது. ‘நாட்டின் செல்வத்தில் முஸ்லிம்களுக்குத்தான் முதல் உரிமை உண்டு’ என்றனர். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை ஊடுருவல்காரர்களுக்குத் தரப் போகிறீர்களா… காங்கிரஸும் சமாஜ்வாடியும் பாபரின் பெயரைச் சொல்லி ராமர் கோயிலுக்குப் பூட்டுப் போடுவார்கள்… புல்டோசர் கொண்டு ராமர் கோயிலை இடிப்பார்கள். புல்டோசரை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை யோகி ஆதித்யநாத்திடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்!”
– பிரதமர் மோடி
“சீதா தேவி பிறந்த சீதாமர்ஹியில், அவருக்கான பிரமாண்ட கோயில் கட்டப்படும். ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வராதவர்களால் இதைச் செய்ய முடியாது… மோடி மற்றும் பா.ஜ.க-வால் மட்டுமே இதைச் சாத்தியப்படுத்த முடியும். சீதையின் பூமியில் பசுவதை நடப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. பசுவதையில் ஈடுபடுபவர்கள் தலைகீழாகத் தொங்கவிடப்படுவார்கள். என்பது மோடியின் கேரன்டி!’’
– அமித்ஷா, உள்துறை அமைச்சர்
“இந்தத் தேர்தல் ராம பக்தர்களுக்கும், ராம விரோதிகளுக்கும் இடையிலான தேர்தல். ராம பக்தர்கள் மட்டுமே இந்த நாட்டை ஆள முடியும். சமாஜ்வாடி கட்சியினர் அக்பர், ஔரங்கசீப்பின் சந்ததியினர். பசுவை தெய்வமாகக் கருதுவதால், நாட்டிலுள்ள இந்துக்கள் மாட்டிறைச்சியை முற்றிலுமாகத் தவிர்க்கின்றனர். ஆனால், இதிலிருந்து இஸ்லாமியர்களுக்கு விலக்கு வழங்க, காங்கிரஸ் முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஷரியத் சட்டத்தை அமல்படுத்துவார்கள்.”
– யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வர்
நன்றி: ‘ஜூனியர் விகடன்’ 26.5.2024

