ராமேஸ்வரம், ஏப்.15- தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், மீண்டும் நான்கு மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (13.4.2026) வழக்கம் போல ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் பன்னாட்டு கடல் எல்லைக்கு அருகாமையில், மன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்களைச் சூழ்ந்து மிரட்டினர். இதில் ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 4 மீனவர்களையும் இலங்கை கடற்படை அதிரடியாகச் சிறைபிடித்தது.
சிறைபிடிக்கப்பட்ட நான்கு மீனவர்களையும், அவர்களது படகையும் இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமுக்கு விசாரணைக்காகக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இலங்கை கடற்படையினரின் இந்த “அட்டூழியம்” தொடர் நிகழ்வாக மாறி வருவதால், ராமேஸ்வரம் மீனவக் குடும்பத்தினர் கடும் வேதனையிலும் ஆத்திரத்திலும் உள்ளனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவச் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திண்டிவனம் சிறீராமுலு மாலை அணிவிப்பு
சென்னை, ஏப்.15- 14.4.2026 அன்று காலை 7.30 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 136ஆவது பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் முன்னணி கழகப் பொதுச் செயலாளரும், சென்னை துறைமுக ஆதிதிராவிடர் மற்றும் மலைஜாதி தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளருமான திண்டிவனம் சிறீராமுலு தலைமையில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு தோழர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, ஏப். 15- மக்கள்தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களைப் பாதிக்கும் வகையிலான, ஜனநாயக விரோத தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
அரசியல் லாப நோக்கமா?
நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. இருப்பினும், இந்த இடஒதுக்கீட்டைத் தொகுதி மறுவரையறையோடு கட்டாயமாக இணைக்கும் ஒன்றிய அரசின் நிலைப்பாடு, பெண்களின் உரிமையை ஓர் அரசியல் மூடுபனியாகப் பயன்படுத்தும் முயற்சியாகும். 5 மாநிலத் தேர்தல்கள் நடைபெறவுள்ள சூழலில், அரசியல் ஆதாயத்திற்காகவே இத்தகைய அவசர நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பறிக்கப்படலாமா?
தொகுதி மறுவரையறை செய்யும் போது கூட்டாட்சி சமநிலை பாதிக்கப்படக்கூடாது. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாக அமல்படுத்தி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், பிரதிநிதித்துவத்தை இழந்து தண்டிக்கப்படக் கூடாது.
2026ஆம் ஆண்டு புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகே இது குறித்துச் சிந்திக்க வேண்டும். அனைத்து மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகே முடிவெடுக்க வேண்டும்.
“பெண்கள் இடஒதுக்கீட்டைத் தொகுதி மறுவரையறையிலிருந்து பிரித்து, அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஜனநாயகத்தின் முக்கிய மாற்றங்களை அவசரமாகத் திணிப்பது ஏற்க முடியாதது. எனவே, ஏப்ரல் 16 முதல் நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் இது குறித்து முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும்.”
மழைக்கால கூட்டத்தொடரில் அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

