சென்னை, ஜூலை 17- நாட்டில் 16-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் சுய கணக்கெடுப்பு இன்று (17.7.2026) தொடங்குகிறது. இதுதொடர்பாக சென்னையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழ்நாடு இயக்குநர் சுந்தரேஷ் பாபு நேற்று (16.7.2026) கூறியதாவது: நாட்டில் மக்கள் தொகை கணக் கெடுப்பு 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, நடக்க உள்ளது.
மக்கள் தொகை கணக் கெடுப்பு, ‘வீட்டு பட்டியல் மற்றும் வீடு வசதி கணக்கெடுப்பு’, ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு’ என்று இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். அந்த வகையில், ஆக.1-ஆம் தேதி முதல் ஆக.30-ஆம் தேதி வரைவீட்டு பட்டியல் மற்றும் வீடு வசதிகணக்கெடுப்பு பணி நடைபெறும்.
சுய கணக்கெடுப்பு பணி, ஜூலை 17-ஆம் தேதி (வெள்ளி) தொடங்குகிறது. பொது மக்கள், https://se.census.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்யலாம். 16 மொழிகளில் பதிவேற்றம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இப்பணிகள், வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும். இந்தி யாவின் முதலாவது டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பான இது, தரவுகளின் துல்லியத்தன்மை, அதனை சேகரிக்கும் வேகம் ஆகியவற்றை மேம்படுத்தும்.
சுய கணக்கெடுப்பு பதிவேற் றத்துக்கு பிறகு, ஒரு அடையாள எண் உருவாக்கப்படும். அதை பொது மக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
கேட்கப்படும் கேள்விகள் இந்த கணக்கெடுப்பின் போது, வீடுகளின் நிலை, குடிநீர் வசதி, சுகாதாரம், மின்சாரம், இணைய வசதி, சமையல் எரி பொருள் வசதி, கழிவறை வசதி, வாகனங்கள், உணவு முறை, கைபேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி உட்பட 33 கேள்விகள் கேட்கப்படும்.
வீட்டு பட்டியல் மற்றும் வீடுவசதி கணக்கெடுப்பு பணிகளுக்கு பிறகு, 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், நாடுமுழுவதும் ஒரே கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். இதனுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடை பெறும் என்று ஒன்றிய அரசு தெரிவித் துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
