விருதுநகர்: தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுப்பிய வினா!

13 Min Read

இதுவரையில் ‘எடப்பாடியார், எடப்பாடியார்’ என்று சொல்லி வருகிறார்கள்;
மே 4 ஆம் தேதிக்குப் பிறகு ‘எடப்பாடி – யார்?’ என்று அமித்ஷாக்கள் கேட்கப் போகிறார்கள்!
‘திராவிட மாடல்’ ஆட்சி – ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டில் பயன்பெறாத குடும்பம் உண்டா?
நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அவர்கள் பயன் பெற்றிருக்கிறார்களா, இல்லையா?

விருதுநகர், ஏப்.10  ‘‘இதுவரையில் ‘எடப்பாடியார், எடப்பாடியார்’ என்று சொல்லி வருகிறார்கள்; மே 4 ஆம் தேதிக்குப் பிறகு   ‘எடப்பாடி- யார்?’ என்று அமித்ஷாக்கள் கேட்கப் போகிறார்கள்!’’ என்றும், ‘‘‘திராவிட மாடல்’ ஆட்சி – ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டில் பயன்பெறாத குடும்பம் உண்டா? நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அவர்கள் பயன் பெற்றிருக்கிறார்களா, இல்லையா?’’ என்ற வினா எழுப்பி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

விருதுநகர் சட்டமன்றத் தொகுதி
தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்துத் தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை

7.4.2026 அன்று மாலை விருதுநகர்  சட்டமன்றத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பரப்புரையாற்றினார்.

அவரது தேர்தல் பரப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

வடநாட்டிலிருந்து இங்கே  வந்து ‘திராவிட மாடல்’  ஆட்சியை மாற்ற வேண்டும் என்று முயற்சிக்கிற வர்களோடு, அடிமைகளாகத்தான் எதிர்கட்சியினர் போயிருக்கிறார்கள். ‘‘இதைத் தட்டிக் கேட்கக்கூடிய உரிமையை – தமிழ்நாட்டின் உரிமையை – தமிழ்நாட்டு மக்களுடைய உரிமையை – கல்வி உரிமையை – உத்தியோக உரிமையை–  ‘‘ ஒருபோதும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்; தலை நிமிர வைப்போம்; தலைகுனிய  விடமாட்டோம்’’ என்று சொல்லக்கூடிய முதுகெலும்புள்ள முதலமைச்சர் யார்? என்றால், அவர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். மீண்டும் அவர்தான் ஆட்சிக்கு வரப்போகிறார். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. மற்றவர்கள் எத்தனை கஜகரணம் போட்டாலும் சரி, அவர்களால் வர முடியாது. நேரில் கேட்கிறோம், பதில் சொல்லட்டும்; சிந்தித்துத்  கேட்கிறோம், ஏதோ நாங்கள் ஒப்பனை செய்துகொண்டு வரவில்லை நண்பர்களே!

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. கொடுத்த 505 தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகளில், 404 தேர்தல்  வாக்குறுதிகளை நிறை வேற்றி இருக்கிறார்கள். மீதமுள்ள 101 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு யார் காரணம் என்றால், தி.மு.க. காரணம் அல்ல நண்பர்களே, டில்லியில் உள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு தான் காரணம். நிதியைக் கொடுக்காமல் இருந்ததுதான் காரணம். அதேபோல,  நாம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு இங்கே இருந்த ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள், அனுமதி கொடுக்கா மல் மறுத்ததுதான் காரணம்.

சமஸ்கிருதத்திற்கு நிதி;
செம்மொழி தமிழுக்கு நிதி மறுப்பு!

தமிழ்நாட்டிற்குக் கொடுக்கவேண்டிய கல்வி நிதியை கொடுக்க மறுக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. மும்மொழித் திட்டத்தை ஏற்றால்தான், ஹிந்தி மொழியைப் படித்தால்தான் கல்வி நிதியைக் கொடுப்போம் என்கிறார்கள். சமஸ்கிருதத்திற்கு நாங்கள் பணம் கொடுப்போம்; ஆனால், செம்மொழி தமிழுக்கு நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.

இன்றைக்குப் பெருமை என்ன? நம்முடைய பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் படிக்கிறார்கள்; எல்லா நாடுகளுக்குமே போயிருக்கிறார்கள் – கல்விக்கண் திறக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, காவல் துறையில் பெண்கள் இன்றைக்கு அதிகாரிகளாகப் பணியாற்றுகிறார்கள் என்றால், இவையெல்லாம் ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய சாதனைகள்.

1933 இல் மாநாட்டில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

இதே விருதுநகரில்தான் 1933 இல் மாநாடு நடந்த போது, ‘‘பெண்கள்  அடுப்பங்கரையில் கரண்டியைப் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. அந்தப் பெண்கள் பேனாவைப் பிடிக்க வேண்டும்’’ என்று தீர்மானம் போட்டப்பட்டது. அதை நடைமுறையில் செய்து காட்டியது, கலைஞர் தலைமையில் இருந்த ஆட்சி. அதனால்தான்,  மிகப்பெரிய அளவிற்கு இன்றைக்குப் பெண்கள் அதிகாரிகளாக இருக்கிறார்கள். அவர்கள் கையிலே துப்பாக்கி இருக்கிறது; கரண்டியைப் பிடித்த கைகளில் பேனாவைப் பெண்கள் பிடித்தார்கள்.  இதை ஒழிக்க வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள்கை – பி.ஜே.பி.யினுடைய கொள்கையாகும்.

பெண்கள் முக்கியத்துவம் பெறக்கூடாது. பெண்கள், ஆண்களுக்கு அடங்கித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லி ஓர் ஆண் ஆதிக்க மனப்பான்மை வைத்துக்கொண்டு, கல்வி நிதியை மறுக்கிறார்கள். அதுபோலவே, குலதர்மக் கல்வித் திட்டத்தை காமராஜர் ஒழித்தார்; அதைப் பெரியார் ஆதரித்தார். அதற்குப் பிறகுதான் எல்லா திருப்பமும் ஏற்பட்டது. இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் உலகம் முழுவதும் போய் இருப்பதற்குக் காரணம், இந்தப் படிப்பு – அப்படிப்பட்ட நிலையில், ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயரில், முழுக்க முழுக்க குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். அதையெல்லாம் இந்தியாவில் தடுக்கக்கூடிய ஒரே ஆட்சி திராவிட மாடல் ஆட்சி!

நம்முடைய உரிமைகள்
நமக்குக் கிடைக்காது!

இத்தனை திட்டங்களைச் சொன்னோம்.  புதுமைப் பெண் திட்டம் உள்பட எத்தனை எத்தனை திட்டங்கள். இன்னும் வரிசையாக, இந்தத் திட்டங்களை விரிவாக்க வேண்டும் என்று நினைக்கிற நேரத்தில், நண்பர்களே அந்த விரிவாக்கக்கூடிய வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்றால், இந்த இயக்கத்திற்கு இருக்கிறது. அதைச் செய்யக்கூடாது என்பதற்குத்தான், மிகப்பெரிய சவாலாக வந்திருக்கிறார்கள். இந்த ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று சொல்வதற்குக் காரணம், இது நமக்கான ஆட்சி, நம் மக்களின் நலவாழ்விற்கான  ஆட்சியாகும். அந்த வாய்ப்புகளை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு இவையெல்லாம் மாறினால், அடுத்து வடக்கே இருக்கிறவர்கள் வந்தார்களேயானால், பெரிய அளவிற்கு தடைகள் நமக்கு ஏற்படும்.  நம்முடைய உரிமைகள் நமக்குக் கிடைக்காது.

‘‘இல்லத்தரசி திட்டம்’’ – 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்குகின்ற திட்டம்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மகளிருக்குக் கிடைக்காமல்  செய்வதற்குச் செய்த முயற்சிகளை முறியடித்தவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். இந்தத் தேர்தல் அறிக்கையிலும் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார், ‘‘இல்லத்தரசி திட்டம்’’ – 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்குகின்ற திட்டம்தான் அது.

அதன் மூலமாக, எந்தக் கடையில் வேண்டு மானாலும், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களைப் புதியதாகவோ அல்லது எக்ஸ்சேஞ்ச் மூலமாகவோ வாங்க இத்திட்டம் உதவும்.

எங்கள் தோழர்கள், என்னுடன் வந்தவர்கள், காலையிலே டீ சாப்பிடப் போனார்கள். இந்த ஊரில் நடந்த சம்பவம் தான். டீ சாப்பிடவில்லை என்று திரும்பி வந்துவிட்டார்கள். ஏனென்றால், கேஸ் இல்லாததால், டீ போட முடியவில்லை. இது யாருடைய சாதனை? இதுதான் பி.ஜே.பி.யின் சாதனை.

இப்படிப்பட்ட ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிக்குதான் இங்கே இருக்கின்ற எதிர்க்கட்சியினர் தங்கள் கட்சியை அடமானம் வைத்திருக்கிறார்கள்.

காப்பி அடிக்கப்பட்ட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை!

மீண்டும் ‘திராவிட மாடல் ஆட்சி’ வந்தால், மீண்டும் உங்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படும். அது மட்டு மல்ல, சாதனைகளை செய்துவிட்டுத்தான் உங்களிடம் வாக்குக் கேட்க வந்திருக்கிறார்கள். இப்பொழுது வெளியிட்டுள்ள தி.மு.க. தேர்தல் அறிக்கைதான்,  இந்தியாவினுடைய மிகப்பெரிய  சூப்பர் ஸ்டார் என்று எல்லோராலும் வர்ணிக்கப்படக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒப்பற்ற தேர்தல் அறிக்கையாகும். அதே நேரத்திலே, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால்,  முழுக்க முழுக்க ஒரு காப்பி அடிக்கப்பட்டதுதான் அந்த அறிக்கை.

அதே மாதிரி நம்முடைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், விருதுநகர் வேட்பாளரான விஜய பிரபாகரன் அவர்களை அழைத்துக்கொண்டு போய், வேட்பு மனு தாக்கல் செய்கிறார். நாளைக்கு இவர் ஏதாவது தொகுதிக்குச் செய்யவில்லை என்றால், தங்கம் தென்னரசு அவர்களிடம், ‘‘நீங்கள்தானே  பரிந்துரை செய்தீர்கள்’’ என்று கேட்கலாம்.

ஆனால், வடக்கே இருந்து ஒரு ‘ஜி’ வருகிறார்.  எதிர்க்கட்சி வேட்பாளரோடு வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டுப் போகிறார். அதற்குப் பிறகு அந்த ‘ஜி’ எங்கே இருப்பார் என்று தெரியாது. ‘ஜி’ வந்தாலும், அவர்களுக்குக் கிடைக்கப் போவது ‘ஜீரோ’தானே தவிர வேறொன்றும் கிடையாது.

காரணம் என்னவென்றால், வேட்பாளரோடு போவ தற்கு அவர்களுக்கு ஆட்கள் கிடைக்காத காரணத்தி னால்தான், வடக்கே இருந்து கொண்டு வருகிறார்கள்.

எங்களுக்காக அல்ல, உங்களுக்காக, உங்கள் சந்ததிக்காக!

‘வடக்கே தலை வைத்துப் படுக்காதே’ என்று  நம்முடைய கிராமத்திலே கூட சொல்வார்கள். அது ஒத்துவராது, வாடை காற்று நமக்கு வராது; தென்றல்தான் நமக்கு எப்போதுமே சிறப்பாக இருக்கக்கூடியது. அதை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  நிறைவாக ஒன்றைச் சொல்லுகிறோம். எனக்கு வயது 93. இந்த அளவிற்கு உற்சாகமாக உங்களைப் பார்க்கிற போது, மக்களுடைய ஆர்வத்தையும் பார்க்கிறோம்; நம்முடைய மக்கள் ஏமாந்து விடக்கூடாது. திராவிடர் கழகத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியும்; இந்தத் தொகுதியின் வேட்பாளர்  தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சார்ந்தவர். நாங்கள் வெறும் திராவிடர் கழகம்; தாய்க்கழகம். ஆனால், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஏன் ஆதரிக்கிறோம்? ஏன் கூட்டணி என்று சொல்கிறோம்? நாங்கள் யாராவது சட்டமன்ற உறுப்பினராக ஆகியிருக்கிறோமா,  ஒரு பஞ்சாயத்து உறுப்பினராவாவது ஆகியிருக்கிறோமா?  இவர்கள் எல்லோரையும்விட அதிகக் கவலை எங்களுக்குத்தான்.

ஏனென்றால், ஒரு ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக அல்ல; ஒரு விஜய பிரபாகரன் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல; சட்டமன்ற உறுப்பினராக உறுதியாக ஆவார்; அதில்  ஒன்றும் சந்தேகம் இல்லை. அதே நேரத்திலே, எதற்காக, இப்படி வந்து நாங்கள் அலைகி றோம்; எங்களுக்காக அல்ல, உங்களுக்காக, உங்கள் சந்ததிக்காக! குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால், நம் பிள்ளைகள் படித்திருக்க முடியாது. இன்றைக்குப் ‘படி படி படி’ என்று சொல்லி, காமராசர் காலத்தில் இருந்த இலவசக் கல்வியை, கலைஞர் காலத்தில் அதிகப்படுத்தி, அண்ணா காலத்தில் அதற்கு முன்னால் அடித்தளம் போட்டு, இன்றைக்கு ஸ்டாலின் காலத்திலே மடிக்கணி உட்பட எல்லோருக்கும் கொடுத்து கல்வியில் உலக தரத்தை அடைந்திருக்கிறார்கள்.  இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலத்திலும், இப்படிப்பட்ட ஆட்சி யும், இத்தனை திட்டங்களும்  கிடையாது.

ஆகவே, அப்படிப்பட்ட ஒருவர் மீண்டும் முதல மைச்சராக வரவேண்டும் என்று சொல்வது நம்முடைய எதிர்கால சந்ததியினருக்காகத்தான்.

நம்முடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டாமா? இந்த உரிமைகளை பறிப்பதற்காகத்தான் வடக்கிலிருந்து படையெடுக்கின்ற சமஸ்கிருத கலாச்சாரம், ஆரிய கலாச்சாரம். பக்கத்திலே  இருக்கக்கூடிய  கீழடி நாகரிகம். 3000 ஆண்டுகளுக்கு முன்னாலே வந்த நாகரிகம் என்று அகழாய்வில் தெரிய வந்திருக்கிறது. அதன் அறிக்கையை கூட வெளியிடக்கூடாது என்று, அந்த அறிக்கையை மாற்றி எழுத வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு வற்புறுத்தியிருக்கிறது.

வடக்கே இருந்து வந்திருக்கிறவர்கள் எப்படிப்பட்ட வர்கள் என்பதற்கு அடையாளம் –  ஒரே ஒரு ஒரு உதாரணம் சொல்லுகிறேன், மகாராட்டிர முதலமைச்ச ராக இருக்கக்கூடிய தேவேந்திர பட்னாவிஸ் மது ரைக்கு வந்து, பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி பெற வைத்தால்தான்,  மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வரும்; இல்லையென்றால் வராது என்று மிரட்டுகிறார். அது என்ன உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா? உங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தா? இல்லையே, மக்கள் சொத்து தானே! மக்களாட்சியிலே பேரம் பேசுகிறார்.

தமிழ்நாடு பெரியார் மண் – வீர மண்; யாருக்கும் நாம் அடிமையாக மாட்டோம்!

துப்பாக்கி கொண்டு வந்து நம் முன்னாலே காட்டி, ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னால், நாம் அவர்க ளுக்கு ஓட்டுப் போட்டுவிடுவோமா? நிச்சயமாக இல்லை. இது பெரியார் மண், தமிழ்நாடு வீர மண். யாருக்கும் நாம் அடிமையாக மாட்டோம்.

தாய்மார்கள் மலர்ந்த முகங்களோடு இருக்கிறார்கள், அருமைத் தாய்மார்களே, ‘திராவிட மாடல்’ ஆட்சி – ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டில் பயன்பெறாத குடும்பம் உண்டா? நேரிடை யாகவோ, மறைமுகமாகவோ அவர்கள் பயன் பெற்றிருக்கிறார்களா, இல்லையா என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

எனவேதான், நண்பர்களே உங்களுக்காக வாதாடுவதற்காக வந்திருக்கிறோம்; எங்களுக்காக அல்ல, இரண்டு பேர் தேர்தலில் வெற்றி பெற்று வரவேண்டும் என்பதற்காக அல்ல; இந்த நாடு பாதுகாக்கப்பட வேண்டும். தங்கள் கட்சியையே அடகு வைத்துவிட்டார்கள்; ஒரு பெரிய கட்சி, ‘‘31 ஆண்டு காலம் நாங்கள் ஆண்டோம்’’ என்று சொல்லக்கூடிய ஒரு கட்சியை, இன்றைக்கு வடக்கே கொண்டு போய் அடகு வைத்துவிட்டார்கள்.

ஜெயலலிதா  அம்மையார்  இருந்த போது ஒரு கேள்வி கேட்டார், ‘‘மோடியா, லேடியா?’’ என்று கேட்டார். ஆனால். இப்பொழுது அமித்ஷா, ‘‘ஓடி வா’’ என்றால், உடனே வேகமாக ஓடிப் போகக்கூடிய அளவிற்கு வந்துவிட்ட கேவலமானத் தன்மைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், நம்முடையவர்கள் எல்லாம் தலை நிமிர்ந்து, சிங்கம் போல இருக்கக்கூடியவர்கள்தான். இங்கே நிறுத்தப்பட்டிருக்கிற வேட்பாளர் விஜயபிரபாகரன் அவர்கள் மிகப்பெரிய அளவிற்குப் பக்குவப்பட்டு வந்திருக்கிறார். ‘புரட்சிக் கலைஞர்’ என்று பெயர் எடுத்தவர் அவருடைய தந்தையார்.

அதுமட்டுமல்ல, அவரை அடையாளம் கண்டு ‘பெரியார் விருதை’ திராவிடர் கழகம் கொடுத்தது. ஏனென்றால் அவருடைய உணர்வு, அதனைக் கண்டு தான். நாமெல்லாம் அரசியலிலே மாறுபட்டாலும், வண்ணங்கள் மாறுபட்டாலும், எண்ணங்கள் ஒன்று என்ற அடிப்படையிலே பெருந்தன்மையோடு முதல மைச்சர் அவர்கள் இவர்களையெல்லாம் இந்த அணியில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

‘‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்’’

என்றுதான் பார்த்துக் பணிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவேதான், இந்த மண்ணுக்குரியவர், தெளிவாக இவரைத் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ‘முரசு’ சின்னத்திலே நீங்கள் முத்திரை குத்தவேண்டும்.  இவ ருடைய தாயார் பிரேமலதா அவர்கள்,  விஜயகாந்த் அவர்களுடைய மறைவுக்குப் பின்னால், ஒரு பெண்மணி, ஆற்றலோடு வீரப் பெண்மணியாக இருக்கிறார்கள்.

இன்றைக்குப் பொய்யுரையைப் பேசி கொண்டி ருக்கிறார் எடப்பாடியார். இதுவரையில் ‘எடப்பாடியார், எடப்பாடியார்’ என்று சொல்லி வருகிறார்கள். ஆனால், மே 4 ஆம் தேதி  வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், ‘எடப்பாடி– யார்?’ என்று வடக்கே இருக்கிறவர்கள், அமித்ஷாக்கள் கேட்கப் போகிறார்கள்.

ஏனென்றால் பீகாரில் என்ன நடந்தது? அங்கே நடைபெற்ற தேர்தலுக்கு முன்பு, நிதிஷ் குமார்தான் முதலமைச்சர் என்று சொல்லித்தான், தேர்தலைச் சந்தித்தார்கள்.  இன்றைக்கு அங்கே என்ன நிலை?  எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட உங்களுக்கு கிடையாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வரக்கூடிய நிலைதான் இங்கும் ஏற்படும்.

அவர்களுக்கு வெற்றி வாய்ப்பில்லை என்ற காரணத்தினால்தான், அவர்கள் செய்த சாதனையைச் சொல்லி ஓட்டு கேட்கக்கூடிய வாய்ப்பில்லை  என்பதி னால்தான், பொய்யைச் சொல்லுகிறார்; தரக்குறைவாகப் பேசுகிறார்; தனி மனித விமர்சனங்களைச் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், நாங்கள் யாரும், தனி மனிதர்களைப்பற்றி விமர்சனம் செய்யமாட்டோம்.

சொன்னதை அவர்கள் செய்ய மாட்டார்கள், ஏமாற்றுவார்கள் என்பதற்கு ஓர் அடையாளம், தேர்தலில் விஜய் பிரபாகரன் இங்கே நிற்கிறார். முன்பு, தேசிய முற்போக்கு திராவிட கழகம், அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்த நேரத்தில், பிரேமலதா – இவருடைய தாயாரிடம், எடப்பாடியார், ‘‘மாநிலங்களவையில் உங்களுக்கு ஓர் இடம் தருகிறோம்’’ என்று சொல்லி இரண்டு பேரும் கையெழுத்துப் போட்டு ஒப்பந்தம் போட்டார்கள்.

ஆனால், அதை எடப்பாடி பழனிசாமி சொன்னது போன்று செய்தாரா? வாய் வார்த்தை மூலம் சொன்னாலே, அதைக் காப்பாற்றவேண்டியதுதான் நியாயம். ‘‘நாங்கள் அப்படி ஒப்பந்தம் போடவில்லை’’ என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஓங்கி, அவர் முகத்தில் அறைந்ததுபோன்று, அந்த ஆதாரத்தை எடுத்துக்காட்டினார் பிரேமலதா அவர்கள். எனவே, பொய்யைத் தவிர, எடப்பாடி யார் இருக்கிறாரே, அவர் எதையும் பேசமாட்டார் என்பதற்கு அடையாளம் இதுதான்.

ஆனால், அதே நேரத்தில்,  நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உங்களுக்கு மாநிலங்களவையில் இடம் தருகிறோம் என்று சொல்லி, தே.மு.தி.க. சார்பில், இப்போது சுதீஷ் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்று இருக்கிறார் என்றால்,

யார் சொன்னதை செய்பவர்கள்,

யார் சொன்னதைச் செய்யாதவர்கள்,

யார் உண்மையானவர்கள்,

யார் பொய்யர்கள்,

யார் நம்பத் தகுந்தவர்கள்,

யார் நம்பக்கூடாதவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, நண்பர்களே, தாய்மார்களே, உங்களுக்குத் தெளிவாகச் சொல்லுகிறோம். உங்களுக்காகச் சொல்லுகிறோம்; உங்கள் சந்ததிகளுக்காகச் சொல்லுகிறோம். நாங்கள் ஒரு குடும்பம், மற்ற அமைப்புகள் எல்லாம் இப்படி இருக்காது. சென்ற முறை  நம்முடைய சீனிவாசன் அவர்கள் இங்கே சட்டமன்ற உறுப்பினர். தொடர்ந்து இந்தத் தொகுதியை சிறப்பாக வைத்து கொண்டிருந்தவர். இந்தத் தொகுதி கூட்டணிக் கட்சிக்கு என்று சொன்னவுடன், முதல் ஆளாகத் தேர்தல் பணிகளைச் செய்ய நிற்கிறார் இங்கே அவர். இதுதான் திராவிட இயக்கம்; இதை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது.

‘திராவிடம் வெல்லும்’,  அதை உறுதியாக  வரலாறு சொல்லும் என்பதை நன்றாகப் நன்றாக புரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

மே 4  ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், மீண்டும் கோட்டைக்குப் போய், ஆட்சி செலுத்தக்கூடிய முதலமைச்சர், எங்கள் முதலமைச்சர் ‘‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்’’  என்று உறுதிமொழி கூறியவாறு வரப் போகிறார்.

ஆகவே, தாய்மார்களே, பெரியோர்களே, வாக்காளப் பெருமக்களே, 23 ஆம் தேதி அன்று  வாக்குச்சாவடிக்கு நீங்கள் போய், வாக்குச் சீட்டைப் பாருங்கள்;  விஜய பிரபாகரன் கட்சியின் சின்னமான ‘முரசு’  சின்னம் எங்கே இருக்கிறது என்று கவனமாகப் பாருங்கள். கவனமாகப் பார்த்து, சரியாக பொத்தானை அழுத்துங்கள். உடனே விரலை எடுத்துவிடாதீர்கள்; கொஞ்ச நேரம் அழுத்திக்கொண்டே இருங்கள். ‘பளிச்’சென்று விளக்கு எரியும். அங்கே விளக்கு எரிந்தால், உங்கள் வீட்டில் விளக்கு எரியும். நாட்டில் விளக்கு எரியும். சமுதாயம் முழு ஒளி பெறும்.

‘‘வெல்லப்போவது நாம்! அதைச் சொல்ல வருபவன்தான் நான்’’ என்று சொல்லி, விடைபெறுகிறேன். ஏராளமாகக் கூடியிருந்த தோழர்களுக்கு நன்றி!

மறவாதீர், முரசு சின்னம், முரசு சின்னம்; ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு  அதுதான் அடித்தளம் என்பதை மறந்து விடாதீர்கள்!

நன்றி, வணக்கம்

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தேர்தல் பரப்புரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *